சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில், துடுப்பாட்ட சரிவினை காட்டிய இலங்கை அணி 205 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்சினை நிறைவு செய்துள்ளது.
முன்னதாக நாக்பூர் நகரின் VCA மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.
புதிய ஒருநாள் அணித்தலைவர் ஒருவரை வேண்டி நிற்கிறதா இலங்கை?
ThePapare.com இற்கு கிடைத்திருக்கும் தகவல்களின்..
கொல்கத்தாவில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்த இரண்டு அணிகளுக்குமிடையிலான (மூன்று போட்டிகள் கொண்ட) டெஸ்ட் தொடரின் முதல் போட்டி விறுவிறுப்புக்கு மத்தியில் சமநிலை அடைந்திருந்தது. இதன் காரணமாக விருந்தாளிகளான இலங்கை அணியினர் இந்தியாவில் தமது முதல் டெஸ்ட் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் இந்தப் போட்டியிலும் களமிறங்கியிருந்தனர்.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. முதல் டெஸ்ட்டில் விளையாடிய அதே இலங்கை அணியே இந்தியாவை எதிர்கொள்ளத் தயாராகியிருந்தது. எனினும், இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. புவ்னேஸ்வர் குமார், சிக்கர் தவான் மற்றும் மொஹமட் சமி ஆகியோருக்குப் பதிலாக முரளி விஜய்,ரோஹித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் குழாத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து இலங்கை தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை திமுத் கருணாரத்ன மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோருடன் தொடங்கியது. சதீர சமரவிக்ரம நல்ல ஆரம்பத்தினை காட்டியிருந்த போதிலும், அவரது துடுப்பாட்ட இன்னிங்சினை நீண்டதாக மாற்றத் தவறியிருந்தார். இதனால் 13 ஓட்டங்களை மாத்திரம் சமரவிக்ரம பெற்றிருந்த போது இலங்கையின் முதல் விக்கெட்டாக பறிபோயிருந்தார்.
இதனையடுத்து களம் நுழைந்த லஹிரு திரிமான்ன, ஏனைய ஆரம்ப வீரர் கருணாரத்னவுடன் சேர்ந்து மந்த கதியிலான முறையில் இலங்கைக்காக ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினார். எனினும் திரிமான்னவின் விக்கெட் போட்டியின் மதிய போசன இடைவேளை நெருங்கும் போது வீழ்ந்தது. நீண்ட நேர இன்னிங்ஸ் ஒன்றினை லஹிரு திரிமான்ன வெளிப்படுத்தியிருந்தாலும் 9 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று மோசமான துடுப்பாட்டத்தினை காட்டியிருந்தார்.
490 ஓட்டங்களை விளாசி தென்னாபிரிக்க வீரர் சாதனை
தென்னாபிரிக்க அணியின் உள்ளூர் கழக வீரர்களில்…
மதிய போசன இடைவேளையினை அடுத்து இலங்கை அஞ்செலோ மெதிவ்சின் விக்கெட்டினைப் பறிகொடுத்தது. மெதிவ்சும் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இவ்வாறான ஒரு நிலையில் நான்காம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் ஒரு நல்ல இணைப்பாட்டத்தினை வழங்கியிருந்தனர்.
இலங்கையின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டத்தினை இஷாந்த் சர்மா, கருணாரத்னவினை LBW முறையில் வீழ்த்தியதன் மூலம் தகர்த்தார். இதனால் 62 ஓட்டங்களுடன் இலங்கையின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டம் முடிந்தது.
நான்காம் விக்கெட்டாக ஓய்வறை நடந்த கருணாரத்ன, தனது 14ஆவது அரைச்சதத்துடன் 147 பந்துகளுக்கு 6 பெளண்டரிகளுடன் 51 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். கருணாரத்ன இப்போட்டியின் மூலம் இந்த வருடத்தில் 1,000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது வீரராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தேநீர் இடைவேளை வரை அணித்தலைவர் தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்லவுடன் சேர்ந்து இலங்கை அணிக்கு ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினார்.
எனினும், தேநீர் இடைவேளையின் பின்னர் இலங்கையின் விக்கெட்டுக்கள் வேகமாகச் சரிவடையத் தொடங்கின. ஆறாம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்த நிரோஷன் திக்வெல்ல தவிர்ந்த எஞ்சிய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் 20 ஓட்டங்களையேனும் பெறாமல் ஓய்வறை நடந்தனர். இலங்கை அணிக்காக பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய தினேஷ் சந்திமாலும் LBW முறையில் ரவிச்சந்திரன் அஷ்வினினால் வீழ்த்தப்பட இலங்கையின் இறுதி நம்பிக்கையும் இல்லாமல் போனது.
டெஸ்ட் தரவரிசையில் திக்வெல்ல, தில்ருவன், கோஹ்லி முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் பேரவை ( ஐ . சி . சி .), டெஸ்ட் கிரிக்கெட்..
முடிவில் 79.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை அணி 205 ஓட்டங்களை மாத்திரம் தமது முதல் இன்னிங்சுக்காக பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக தினேஷ் சந்திமால் 122 பந்துகளுக்கு 4 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 57 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். அதோடு சந்திமால் இன்றைய போட்டி மூலம் 3,000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்த 13ஆவது இலங்கை வீரராக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பந்து வீச்சில் சுழல் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் இஷாந்த் சர்மா, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதமும் பகிர்ந்திருந்தனர்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இந்தியாவுக்கு லஹிரு கமகே அதிர்ச்சி கொடுத்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வந்த லோக்கேஷ் ராகுல் 7 ஓட்டங்களினை மாத்திரமே பெற்ற நிலையில் கமகேவினால் போல்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து சிறிது நேரத்தில் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.
ஆட்ட நிறைவில் இந்தியா தமது முதல் இன்னிங்சுக்காக, 8 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை இழந்து 11 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
களத்தில் முரளி விஜய், செட்டெஸ்வர் புஜாரா ஆகியோர் தலா 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 205 (79.1) தினேஷ் சந்திமால் 57(122), திமுத் கருணாரத்ன 51(147), நிரோஷன் திக்வெல்ல 24(30), ரவிச்சந்திரன் அஷ்வின் 67/4(28.1), இஷாந்த் சர்மா 37/3(14), ரவீந்திர ஜடேஜா 56/3(21)
இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 11/1 (8) லோக்கேஷ் ராகுல் 7(13), லஹிரு கமகே 4/1(4)
போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்