உலகின் முன்னணி ஒருநாள் அணியுடன் மோதத் தயாராகியுள்ள இலங்கை

1391

இலங்கை அணிக்கு எதிராக ஐந்து ஒருநாள், ஒரு T20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

தொடருக்கான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், அதற்கு முன்னர் இங்கிலாந்து அணி இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளது.

>> மாஸ் யுனிச்செலாவுக்கு வெற்றி தேடித்தந்த இலங்கை முன்னாள் வீரர்கள் சாமர சில்வா, டில்ஷான்

இலங்கை தொடருக்காக வருகைதந்துள்ள இங்கிலாந்து அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடருக்கான தலைவராக இயன் மோர்கன் செயற்படவுள்ளதுடன், அந்த அணியின் டெஸ்ட் தலைவராக ஜோ ரூட் செயற்படவுள்ளார். அத்துடன் இலங்கை அணியின் புதிய ஒருநாள் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓக்டோபர் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான தொடர் வழமைபோல் இல்லாமல் இம்முறை ஒருநாள் தொடருடன் ஆரம்பமாகிறது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருடன் ஆரம்பிக்கும் இங்கிலாந்து தொடர், ஒரு போட்டி கொண்ட T20 தொடர், இறுதியாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் நிறைவுக்கு வருகின்றது.

ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த இரண்டு போட்டிகள் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இறுதி ஒருநாள் போட்டி மற்றும் T20 போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகள் நிறைவுக்கு வருகின்றன.

பின்னர், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மரபு ரீதியாக காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகலை மைதானத்திலும் தொடரின் இறுதி போட்டியான மூன்றாவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தொடர் குறித்து தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பு கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள சங்ரி-லா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் இலங்கை ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கான தலைவர் இயன் மோர்கன், மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா மற்றும் இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் ட்ரெவர் பெய்லிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் ஆகியோர்  தொடர் குறித்த தங்களுடைய கருத்துக்களை ஊடகவியலாளர்களிடம் தெளிவுப்படுத்தினர்.

இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் குறிப்பிடுகையில்,

“இங்கிலாந்து அணி கடந்த இரண்டு வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றது. தற்போதைய ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இதனால் இந்த தொடர் எமக்கு மிகவும் சவாலான ஒன்றாக அமையவுள்ளது.

>> இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரிக்கும் ஐ.சி.சி

எனினும் ஒரு அணியாக நாம் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு விளையாடவுள்ளோம். எமது வீரர்களின் நம்பிக்கை மட்டம் சிறப்பாக உள்ளது. தொடரை எதிர்பார்த்துள்ளோம். நாம் இந்த தொடருக்காக சில திட்டங்களை வகுத்துள்ளோம். அதனை மைதானத்தில் நிறைவேற்ற முடியுமாயின் எங்களால் வெற்றிபெற முடியும். அத்துடன் இந்த தொடரை வெற்றியுடன் நிறைவுசெய்ய வேண்டும், எனவே நாம் எதிர்பார்க்கிறோம். வீரர்கள் சிறந்த முறையி்ல் விளையாடுவார்கள் என நம்புகிறேன்என்றார்.

இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் கூறுகையில்,

இலங்கை வந்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது உற்சாகமளிக்கிறது. அடுத்த வருடம் உலகக்கிண்ணம்  நடைபெறவிருக்கிறது. அதற்கு ஏற்ப நாம் போட்டிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இந்த தொடரில் முதலாவதாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் விளையாடவுள்ளோம். அதன் பின்னர் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகிறது. கடந்த முறை இலங்கை வந்தபோது குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இலங்கை அணியில் விளையாடினர்.

குறித்த தொடரில் அவர்கள் சிறப்பாக செயற்பட்டிருந்தார்கள். இம்முறை பல புதிய வீரர்கள் இலங்கை அணியில் இணைந்துள்ளனர். அதனால் நாம் போட்டியை இலகுவாக நினைக்க முடியாது. இளம் வீரர்களும் எமக்கு சவால் விடுக்கக்கூடிய வீரர்கள்தான். அதனால் நாம் தொடரில் சிறப்பாக விளையாட எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க குறிப்பிடுகையில்,

“ஆசியக் கிண்ணத்துக்காக நாம் திட்டங்களை வகுத்திருந்தோம். ஆனால் அதனை நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைந்திருந்தமை வருத்தம் அளிக்கிறது. இங்கிலாந்து அணி ஒருநாள் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ள அணி. எனினும் இம்முறை நாம் இங்கிலாந்து அணிக்கு ஏற்ப திட்டங்களை வகுத்துள்ளோம். அதனை மைதானத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்.

எமது முதலாவது ஒருநாள் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகிறது. வீரர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தம்புள்ளை மைதானம் இங்கிலாந்து அணிக்கு மாத்திரமின்றி எமது அணிக்கு புதிய மைதானம் போன்றுதான். அதனால் நாம் சில தினங்களுக்கு முன்னர் அங்கு சென்று பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளோம். அதன் மூலம் மைதானத்தின் தன்மைகளை அறிந்து  எம்மால் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள முடியும்” என்றார்.

இதேவேளை இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் ட்ரெவர் பெய்லிஸ் கூறுகையில்,

“இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்து வெற்றிபெறுவது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. ஏனைய நாடுகளில் விளையாடுவதை விட, சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்துவது கடினமான விடயம்.

எனினும் தற்போது ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறோம். அடுத்த வருடம் உலகக்கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகிறது. அதுவரையில் நாம் சிறப்பாக விளையாட வேண்டும். அப்போதுதான் சொந்த மண்ணில் உலகக்கிண்ண தொடரை அழுத்தம் இல்லாமல் எதிர்கொள்ள முடியும்” என்றார்.

>> முத்தரப்பு தொடருக்காக இந்தியா செல்லும் இலங்கை கற்புலனற்றோர் கிரிக்கெட் அணி

எவ்வாறாயினும் இந்த தொடரை பொருத்தவரையில் இரண்டு அணிகளுக்கும் முக்கியமான ஒரு தொடராக அமையவுள்ளது. தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி எட்டாவது இடத்திலிருக்கும் இலங்கையிடம் தொடரை இழக்குமானால், உலகக்கிண்ணத்தை நோக்கும் இங்கிலாந்து அணிக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக அமையும். அதேவேளை பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் ஒருநாள் போட்டியில்  தோல்வியடைந்த இலங்கை அணி உலகக்கிண்ண எதிர்பார்ப்பை நிலையாக வைத்துக்கொள்வதற்கு இந்த தொடர் வெற்றி முக்கியமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஒருநாள் தொடருக்கான இலங்கைக் குழாம்

தினேஷ் சந்திமால் (தலைவர்), தனன்ஜய டி சில்வா, குசல் பெரேரா, உபுல் தரங்க, சதீர சமரவிக்ரம, நிரோஷன் டிக்வெல்ல, திசர பெரேரா, தசுன் சானக, அகில தனன்ஜய, அமில அபோன்சோ, லக்ஷான் சந்தகன், லசித் மாலிங்க, நுவன் பிரதீப், கசுன் ராஜித, துஷ்மந்த சமீர

ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து குழாம்

இயன் மோர்கன்(தலைவர்), மொயின் அலி, ஜொனி பெயார்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், செம் கரன், டொம் கரன், லியாம் டவ்ஸன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கட், ஆதில் ரஷீட், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ஸ்டோன், கிரிஸ் வோகஸ், மார்க் வூட்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<