“நேற்றைய போட்டியை திட்டமிட்டப்படி நகர்த்தியிருந்தோம்” – குசல் பெரேரா

3479

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று (10)தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக 15 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.

நேற்று ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்தது. இந்தநிலையில், தங்களுடைய அணி திட்டமிட்டப்படி ஆட்டத்தை நகர்த்திய போதும், மழை குறுக்கிட்டமையானது துரதிஷ்டமானது என இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.

மைதான ஈரத்தன்மை காரணமாக கைவிடப்பட்ட முதல் ஒருநாள் போட்டி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் …

போட்டி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து எமது thepapare.com இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலில் இந்த போட்டியை முழுமையாக விளையாட முடியவில்லை என்பது எமக்கு வருத்தம் அளிக்கிறது.  காலநிலையை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. எந்த நேரத்தில் மழை பெய்யும், பெய்யாது என்பதை எம்மால் கணிக்க முடியாது. போட்டியை நாம் முழுமையாக விளையாட எண்ணிய போதிலும், மைதானத்தின் சில பகுதிகளில் இருந்த ஈரத்தன்மை அபாயகரமாக இருந்தது. இவ்வாறான சூழ்நிலையில் மைதானத்தில் விளையாடுவது கடினமாகும்.

இன்றைய போட்டியை பொருத்தவரையில் நாம் 15 ஓவர்கள் விளையாடியிருந்தோம். குறித்த 15 ஓவர்களும் அணி திட்டமிட்டிருந்தபடி எம்மால் விளையாட முடிந்தது. வீரர்கள் சிறந்த மன வலிமையுடன் இருக்கின்றனர்என்றார்.

இதேவேளை அடுத்தப் போட்டிக்கான ஆயத்த நிலை தொடர்பில் குறிப்பிட்ட அவர்,

நாம் ஒவ்வொரு போட்டியிலும் தனியான திட்டமிடல்களுடன் விளையாடி வருகின்றோம். அடுத்த போட்டிக்கும் தேவையான திட்டங்களை வகுத்துள்ளோம். வீரர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். நாம் எமது அடிப்படையைக் கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்என்றார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…