இங்கிலாந்து அணியின் ஒவ்வொரு வீரருக்குமான திட்டத்தினை வகுத்து வைத்துள்ளதாக இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (21) லீட்ஸ் – ஹெடிங்லேவ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான ஆயத்தங்கள் தொடர்பில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.
இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உண்டு: இசுரு உதான
இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை ……..
ஆசிய அணிகளை விட இங்கிலாந்து அணியானது, சுழல் பந்துவீச்சினை நேர்த்தியாக கையாளக்கூடிய அணி எனவும், அந்த அணிக்கு எதிராக இலங்கை அணி சிறந்த திட்டங்களை வகுத்து வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,
“இங்கிலாந்து அணி ஆசிய அணிகளை விட சுழல் பந்துவீச்சினை சிறப்பாக எதிர்கொள்கிறது. அதனால், நாம் இப்போது 2 சுழல் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டுமா? இல்லை மேலதிக துடுப்பாட்ட வீரர் ஒருவரை இணைக்க வேண்டுமா? என்ற நிலைப்பாடு தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்”
இங்கிலாந்து அணியானது இறுதியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முன்னணி சுழல் பந்துவீச்சாளராக வளர்ந்து வரும் ரஷீட் கானின் 9 ஓவர்களுக்கு 110 ஓட்டங்களை குவித்திருந்தது. குறிப்பாக, இயன் மோர்கன் சுழல் பந்துவீச்சாளர்களை இலக்குவைத்து ஓட்டங்களை குவித்திருந்தார். அதுமாத்திரமின்றி இப்போதைய நிலையில் இங்கிலாந்து அணியின் அனைத்து வீரர்களும் எதிரணிக்கு சவால் கொடுக்கக்கூடியவர்களாக உள்ளனர். இது தொடர்பில் குறிப்பிட்ட திமுத்,
“எதிரணியின் ஒவ்வொரு வீரருக்குமான திட்டங்களை வகுத்துள்ளோம். குறித்த திட்டங்களை இந்தப் போட்டியில் செயற்படுத்த முடியும் என நினைக்கிறோம். அதுமாத்திரமின்றி, இறுதியாக இலங்கையில் வைத்து இங்கிலாந்து அணியை எதிர்கொண்டிருக்கிறோம். அதிலிருந்து கற்றுக்கொண்ட சில விடயங்களை இந்தப் போட்டியில் செயற்படுத்த முடியும் என எண்ணுகிறோம்”
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இங்கிலாந்தை சொந்த மண்ணில் எதிர்கொண்ட இலங்கை அணி தொடரை இழந்தது. எனினும், அவர்களுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறந்த வெற்றியை பதிவுசெய்தது. குறித்த வெற்றிக்கு அணியின் துடுப்பாட்ட வீரர்கள் முக்கிய காரணமாக இருந்தனர்.
Photo Album : CWC19 – Sri Lanka training session ahead of England match
“இங்கிலாந்து அணியை 300 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த வேண்டும். இல்லை நாம் துடுப்பெடுத்தாடும் போது 300 ஓட்டங்களுக்கு அதிகமாக ஓட்டங்களை பெறவேண்டும். மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களிடம் திறமை உள்ளது. அவர்கள் தங்களுடைய பொறுப்பினை உணர்ந்து அடுத்த போட்டிகளில் விளையாடுவர். கடந்த காலம் தொடர்பில் சிந்திப்பதை விட, அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில் சிறப்பாக செயற்படுவதே முக்கியமாகும்” என தற்போதைய தனது நிலைப்பாட்டை திமுத் வெளிப்படுத்தினார்.
இலங்கை அணி 5 போட்டிகளின் முடிவுகளுக்கு அமைய ஒருவெற்றி, 2 தோல்விகள் மற்றும் 2 கைவிடப்பட்ட போட்டி முடிவுகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது.
இவ்வாறான ஒரு நிலையில், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<