இலங்கை அணி தற்போதுள்ள நிலையில், ஒரு வெற்றியை பெற்றுக்கொள்ளுமானால், அடுத்தடுத்த போட்டிகளில் நிச்சயமாக தொடர் வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை (23) கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு டிக்வெல்ல பதிலளிக்கையில்,
ஆர்.பிரேதாஸ மைதானத்தில் ஆறுதல் வெற்றியை தேடும் இலங்கை
இலங்கை கிரிக்கெட் அணி மட்டுப்படுத்தப்ப…
கேள்வி – அடுத்தப் போட்டிக்கான தயார்நிலை எவ்வாறு உள்ளது?
“அணியென்ற ரீதியில் நாம் கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். சிறந்த முறையில் தயாராகியுள்ளோம். அணியின் தயார்படுத்தல் உலகக் கிண்ணத்தை நோக்கியதாக உள்ளது. உலகக் கிண்ணத்துக்கு முன் வெறும் 10 போட்டிகள் மாத்திரமே உள்ளன.
நாம் அதிகமாக முன்னேறியுள்ளோம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால், எமக்கு ஒரு போட்டியின் வேற்றி தேவைப்படுகிறது. இவ்வாறு வெற்றி கிட்டும் பட்சத்தில் எம்மால் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியும். உலகக் கிண்ணத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் உள்ளோம். அத்துடன் அடுத்தப் போட்டியில் சிறப்பாக விளையாட எதிர்பார்க்கிறோம்”
கேள்வி – நீண்ட இடைவேளைக்கு பின்னர் துடுப்பாட்டம் பிரகாசித்தது?
“ஆம். நாம் துடுப்பாட்டத்தில் சிறந்த பெறுபேற்றினை கடைசிப் போட்டியில் பெற்றிருந்தோம். ஆடுகளம் மெதுவாகவும், சுழலக் கூடியதாகவும் இருந்தது. இவ்வாறான ஆடுகளத்தில் 270 இற்கு மேல் ஓட்டங்கள் பெறுவதானது மிகச் சிறப்பான விடயமாகும்.
நான் கடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு தெரிவித்திருந்தமை போன்று, ஆரம்பம் மற்றும் மத்தியவரிசை ஆகிய இரண்டும் நேர்த்தியான முறையில் துடுப்பெடுத்தாடியதன் மூலம் இந்த ஓட்ட எண்ணிக்கை பெறப்பட்டது. துடுப்பாட்ட வீரர்கள் கடந்த போட்டியில் தங்களை நிரூபித்திருந்தனர். மொத்தமாக நாம் சிறப்பாகவே ஆடியிருந்தோம். எனினும் ஒரு நோ போல் பந்து, மழை மற்றும் டக்வர்த் லூவிஸ் முறைமை என்பன எமக்கு பாதகமாகிவிட்டது”
கேள்வி – துடுப்பாட்டத்தில் சிக்கல்கள் இருந்ததா?
“நான்காவது போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தோம். மத்தியவரிசை மற்றும் ஆரம்பம் என்பன நன்றாக அமைந்தது. எனினும் தசுன் சானக ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்காவிடின் எம்மால் 300 ஓட்டங்களை தொட்டிருக்க முடியும்”
கேள்வி – அகில தனன்ஜயவை பற்றி?
“அகில தனன்ஜய அணிக்கு மிக முக்கியமான வீரர். தற்போது சகலதுறை வீரராக அணிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார். கடந்த போட்டியில் அணிக்கு மிக முக்கியமான ஓட்டங்களை பெற்றுக் கொடுத்திருந்தார். அதுமாத்திரமின்றி அவரால் முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளையும் கைப்பற்ற முடியும்”
இலங்கை T20 அணியின் தலைவராக மீண்டும் திசர பெரேரா
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு போட்டி கொண்ட…
கேள்வி – ரங்கன ஹேரத்தின் ஓய்வு குறித்து?
“ரங்கன ஹேரத் பெருமைக்குறிய வீரர். அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமைத் தாங்கியும் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியமை அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அவருடன் விளையாடியமை எனக்கு கிடைத்த அதிஷ்டம்.
ஹேரத் சரியான நேரத்தில் ஓய்வை அறிவித்துள்ளார். அவருக்காக நாம் மகிழ்ச்சியடைகிறோம். அவரைப் போன்ற இடதுகை பந்து வீச்சாளர்களை எமது சுழற்பந்து வீச்சு குழாம் தயார் செய்து வருகின்றது.
கடந்த ஆறு வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் எமது முன்னணி பந்து வீச்சாளராக இருந்துள்ளார். நாம் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடியமைக்கு அவர் முக்கிய காரணம். தற்போது அவரின் இடத்தை நிரப்புவதற்கு ஒருவரை தயார்படுத்த வேண்டும். தற்போது எம்மிடம் அகில தனன்ஜய மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் உள்ளனர்”
கேள்வி – குசல் மெண்டிஸுடன் உளவியலாளர்கள் எப்படி செயற்படுகிறார்கள்?
“நான் மோசமாக விளையாடினாலும் உளவியலாளர்கள் எனக்கு உதவி செய்வார்கள். ஒரு போட்டிக்கு உளவியல் ரீதியில் எப்படி தயாராகுவது என்பதை பற்றி தெளிவுபடுத்துவார்கள். அவர்களது அறிவுறைகள் எமக்கு மிகவும் உதவியாக இருக்கும். நான் சரிவில் இருக்கும் போது குசல் மெண்டிஸ் எனக்கும் உதவியிருந்தார்”
கேள்வி – சதீர சமரவிக்ரம தொடர்பில்?
“சதீர சமரவிக்ரம சிறந்த துடுப்பாட்ட வீரர். யுத்திகள் மற்றும் உளவியல் ரீதியில் திடமானவர். அவர் மீண்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதனை அவர் பயன்படுத்திக் கொள்வார் என நினைக்கிறேன். இருவரும் துடுப்பெடுத்தாடும் போது எனக்கு அதிகமான ஆதரவை வழங்குவர். போட்டியின் மீது அதிக விழிப்புணர்வு கொண்டவர். அவர் ஒரு விலைமதிப்பற்ற வீரர்” என்றார்.
ஒருநாள் தொடரை இலங்கை அணி 0-3 என இழந்துள்ள நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதி ஒருநாள் போட்டி நாளை (23) கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க