இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூவிஸ் முறைப்படி வெற்றிபெற்றிருந்தது. அத்துடன் ஒருநாள் தொடரையும் 3-0 என கைப்பற்றியது.
இந்த போட்டியில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் தசுன் சானக சிறப்பாக துடுப்பெடுத்தாடி 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 66 பந்துகளுக்கு 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனடிப்படையில் சானக மற்றும் திசர பெரேரா ஆகியோர் இறுதிவரை களத்தில் இருந்திருந்தால் அணியின் ஓட்ட எண்ணிக்கையை 290 – 300 ஓட்டங்கள் வரை உயர்த்தியிருக்க முடியும் என தசுன் சானக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
மீண்டுமொரு ஒருநாள் தொடரை இழந்ததுஇலங்கை
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நான் துடுப்பெடுத்தாட களமிறங்கிய போது அணி 100 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. எனினும் நான் விக்கெட்டுகள் வீழ்ந்ததை கவனத்தில் கொள்ளாமல் எனது சாதாரண துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினேன். அதனால் ஓட்டங்களை இலகுவாக பெற முடிந்தது.
ஆனால் துரதிஷ்டவசமாக இக்கட்டான நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தேன். ஆட்டமிழக்காமல் திசர பெரேராவுடன் இறுதிவரை துடுப்பெடுத்தாடியிருந்தால் 290 – 300 ஓட்டங்களை எம்மால் பெற்றிருக்க முடியும் என்பதுடன், போட்டியின் முடிவையும் மாற்றியிருக்க முடியும்.
அது மாத்திரமின்றி தனன்ஜய டி சில்வாவுடன் துடுப்பெடுத்தாடும் போது இலகுவான பந்துகளை மாத்திரம் ஓட்டங்களை பெற்றுக்கொள்ளுமாறும், விக்கெட்டை விட்டுக்கொடுக்க வேண்டாம் எனவும் கூறினார். அதன்படி நாம் 52 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றோம்.
தற்போது நான் எனது துடுப்பாட்டத்தில் பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். அதனை அடிப்படையாக வைத்து மேலும் சிறப்பாக துடுப்பெடுத்தாட முயற்சிப்பேன்” என குறிப்பிட்டார்.
ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றியுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதி ஒருநாள் போட்டி 23 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<