“இலங்கையில் உள்ள மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இவர்கள் தான்” ; சந்திக ஹதுருசிங்க

2240

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடிய வீரர்கள் தான் இலங்கையில் உள்ள மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை அணியின் துடுப்பாட்டம் தொடர்பில் கூறுமாறு ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

55 வருட வரலாற்று சாதனையுடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக கொழும்பு …

இவ்வாறான ஆடுகளங்களானது இரண்டு அணிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கும் கடினமானதாகும். எனினும், ஆரம்பத்தை பெற்றுக்கொண்ட வீரர்கள் சிறந்த ஓட்ட எண்ணிக்கைக்கு செல்லக் கூடியதை நாம் பார்த்திருந்தோம். ஆனால், நான் ஏற்கனவே கூறியதைப் போன்று, இரண்டாவது மற்றும் நான்காவது இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடும் அணிகளுக்கு அதிக சவால்களை இந்த ஆடுகளங்கள் கொடுத்திருந்தன.

எனினும், அணியின் துடுப்பாட்டத்தை பார்க்கும் போது, இந்த தொடரில் விளையாடிய வீரர்கள் தான் இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்கள். இவர்களால் சிறப்பாக துடுப்பெடுத்தாட முடியும். அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறவுள்ள ஆடுகளங்களில் எமது துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது” என்றார்.

இலங்கை அணியின் டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து குறிப்பிடுகையில்,

“நாம், தொடரை இழந்தது மிகவும் வருத்தத்திற்குறிய விடயமாகும். ஆனால், முதல் டெஸ்ட் போட்டியை விடவும், இரண்டாம் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் அணி வீரர்கள் போட்டித் தன்மையுடன் விளையாடினர்.

எமது தோல்விக்கு நாம் விட்ட சிறிய தவறுகள் தான் காரணமாகியிருந்தன. முக்கியமாக களத்தடுப்பு, பந்து வீச்சின் சில இடங்களில் விடப்பட்ட தவறுகள் மற்றும் சில துடுப்பாட்ட யுத்திகள் என்பவற்றில் நாம் தவறிழைத்திருந்தோம். போட்டியை பொருத்தவரை சில விடயங்கள் எமக்கு சாதகமாக அமைந்திருக்குமானால் தொடரில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்க முடியும்”

உலகக் கிண்ணத்திற்கு முன் ஸ்கொட்லாந்தை எதிர்கொள்ளும் இலங்கை அணி

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் …..

தொடரில் நம்பிக்கை ஏற்படுத்திய விடயங்கள் குறித்த தெரிவித்த தலைமைப் பயிற்றுவிப்பாளர், “ரங்கன ஹேரத் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, நாம் அனுபவமற்ற பந்து வீச்சாளர்களை கொண்டுதான் களமிறங்கியிருந்தோம். அவர்கள் எதிரணிக்கு சவால் விடுப்பதை அவதானிக்க முடிந்தது. அதேநேரம், இங்கிலாந்து அணியில் மூன்று சதங்கள் பெறப்பட்டிருந்தன. எமது அணியில் ஒரு சதமேனும் பெறப்படவில்லை.

இதில் நாணய சுழற்சியின் முடிவுகள்தான் அதிகமான செல்வாக்கினை செலுத்துகின்றன. இவ்வாறான ஆடுகளங்களில் முதலில் துடுப்பெடுத்தாடும் வீரர்களுக்கு ஓட்டங்களை இலகுவாக பெறமுடியும். எமது வீரர்களும் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். அத்துடன் நடுவர்கள் மேன்முறையீடு வாய்ப்புகளை (DRS) பயன்படுத்துவதில் தவறுகளை விட்டிருந்தோம். அதனை சரியாக பயன்படுத்தியிருந்தாலும் போட்டியில் எமக்கு வாய்ப்புகள் இருந்தன”

இலங்கை அணி இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்து வைட் வொஷ் தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு நாள் மற்றும் டி20 போட்டித் தொடர்களையும் இங்கிலாந்து அணியே தம்மகப்படுத்தியிருந்தது.

சொந்த மண்ணில் இவ்வாறான மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ள இலங்கை வீரர்கள், அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் விளையாடுவதற்காக செல்லவுள்ளனர்.

குறித்த தொடர் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹதுருசிங்க,

“மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடுவதற்காக நாம் அடுத்த மாதம் நியூசிலாந்து செல்லவுள்ளோம். அதற்கான ஆயத்தங்களையும், திட்டங்களையும் வகுத்து வருகின்றோம். நியூசிலாந்து தொடருக்கு செல்லும் முன்னர் எதிர்வரும் 30ம் மற்றும் முதலாம் திகதிகளில் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். குறித்த தொடரில் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு முயற்சிப்போம்” என்றார்.

இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் ஒரு T20I  போட்டிகளில் விளையாடுவதற்காக எதிர்வரும் மாதம் நியூசிலாந்துக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<