இரண்டாவது போட்டியில் அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர் – சந்திமால்

1319

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை (17) பகலிரவு போட்டியாக ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதுடன், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 31 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் 1-0  என முன்னிலை வகிக்கின்றது.

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இலங்கை?

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள்..

எனினும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் களத்தடுப்பு மற்றும் திசர பெரேரா, தனன்ஜய டி சில்வா ஆகியோரின் இணைப்பாட்டம் போன்றவை அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் கருத்து வெளியிட்டுள்ளார்.

எமது இணையத்தளமான Thepapare.com இற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். சந்திமால் மேலும் கருத்து வெளியிடுகையில்,

நாம் அணியென்ற ரீதியில் தோல்வியினை நோக்கும் அதேவேளை, சில நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய விடயங்களும் இருந்தன. முக்கியமாக, எமது அணி வீரர்கள் மிகவும் உத்வேகத்துடன் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தனர். அதுமாத்திரமின்றி திசர பெரேரா மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோரின் இணைப்பாட்டம் மிகச்சிறந்த உதாரணமாகும். இக்கட்டான நிலையில் அணிக்கு தேவையான ஓட்டங்களை அவர்கள் குவித்திருந்தனர். இவ்வாறான செயற்பாடுகள் அணிக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன என்றார்.

இதேவேளை, தம்புள்ளையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், 40வது ஓவரை திடீரென மாலிங்கவுக்கு வழங்கியதன் காரணம் என்ன என்பது குறித்தும் அவர் விளக்கினார்.

லசித் மாலிங்க என்பவர் உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும். துடுப்பாட்ட வீரர்களின் மனநிலையை அறிந்து பந்து வீசக்கூடியவர். இங்கிலாந்து அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளையில் எமது அணிக்கு கட்டாயமாக விக்கெட் ஒன்றை கைப்பற்ற வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது.  அவரால் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு ஓவரை வழங்கினேன். அதே போன்று அவர் அந்த ஓவருக்கு இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி, இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தினார் என்றார்.

அத்துடன், தொடரின் ஆரம்பத்தில் கூறியது போன்று,  எதிர்வரும் போட்டிகளிலும் துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் இருக்காதா? என்ற கேள்விக்கு பதிலளித்த சந்திமால்,

நாம் ஏற்கனவே கூறியது போன்று அணியின் துடுப்பாட்ட வரிசையில் அதிகமான மாற்றங்களை செய்யப் போவதில்லை. எனினும் ஒருசில நேரங்களில், சூழ்நிலைக்கு ஏற்ப துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் இருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவருககு பதிலாக வலதுகை துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<