இங்கிலாந்து அணி இன்று (16) பெற்றுள்ள 278 ஓட்டங்கள் என்ற முன்னிலையானது, இந்த ஆடுகளத்தை பொருத்தவரை போதுமான ஓட்ட எண்ணிக்கையாகும் என இலங்கை அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் ரொஷேன் சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 324 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அத்துடன், ஒரு விக்கெட் கைவசம் இருக்க, இலங்கை அணியை விடவும் 278 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
ஜோ ரூட்டின் சதத்தையும் தாண்டி சுழல் பந்துவீச்சால் மிரட்டிய அகில தன்னஜய
கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும்…
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரொஷேன் சில்வா,
“நாம் நேற்றைய தினம் 46 ஓட்டங்கள் முன்னிலையுடன் இருந்தோம். எனினும் இன்றைய தினம் ஜென்னிங்ஸ் மற்றும் பேர்ன்ஸ் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். இங்கிலாந்து அணி தற்போது சிறந்த ஓட்ட முன்னிலையை பெற்றுள்ளது. இந்த முன்னிலையானது அவர்களுக்கு போதுமானதாகும்.
அவர்களிடம் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் மூவர் உள்ளனர். அதனால் குறித்த ஓட்ட எண்ணிக்கையானது போதுமானதாக இருக்கும். எனினும், 300 ஓட்டங்கள் என்ற இலக்கை பெறமுடியாது என்றில்லை. கிரிக்கெட்டை பொருத்தவரை எதுவும் நடக்கலாம். எமது பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயற்பட்டனர். எனினும் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் மிகச் சிறப்பாக இருந்தது” என்றார்.
ஜோ ரூட் இன்றைய தினம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறந்த முறையில் யுத்திகளை பயன்படுத்தி சதம் கடந்திருந்தார். அணித் தலைவர் என்ற ரீதியில் அவரது சதம் மிக முக்கியமானது. அவரின் துடுப்பாட்டம் குறித்து தெரிவித்த ரொஷேன் சில்வா, “அவர் களமிறங்கி ஆடுகளத்தை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப துடுப்பாட்டத்தினை கையாண்டார். இடர்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய துடுப்பாட்டங்களையும் அவர் பயன்படுத்தினார். அவரின் துணிச்சலான துடுப்பாட்டம் அவரது அற்புதமான சதத்துக்கு உதவியது” என்றார்.
“எமது திட்டத்தை விடவும் இங்கிலாந்து அணி அதிகமான ஓட்டங்களை குவித்துள்ளது” ; மலிந்த புஷ்பகுமார
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்…
அதேநேரம், ஆடுகளமானது நேற்றைய தினம் போன்றுதான் சுழலுகின்றது. நேற்றைய தினத்தை விட பெரிய மாற்றங்கள் இல்லை. இடையில் ஓரிரு பந்துகளுக்கு ஆடுகளம் மேலதிக சுழலை கொடுத்து என குறிப்பிட்ட இவர், நேற்றைய தினம் இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்ட மேலதிக 5 ஓட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தார்.
“பந்தை அடித்துவிட்டு பௌண்டரி என நினைத்து பந்து வீச்சு எல்லைக்கு அருகில் நின்றேன் (நேற்யை தினம் துடுப்பெடுத்தாடிய போது). மொயீன் அலி பந்தை வீசிய பிறகு, அகில தனன்ஜய என்னை ஓடுமாறு கூறினார். நான் பந்துவீச்சுக்கு எல்லைக்கு சென்றேன் என்ற ஞாபகத்துடன் மீண்டும் துடுப்பாட்ட எல்லைக்கு ஓடினேன். குறிப்பாக நான் அந்த தருணத்தில் பந்துவீச்சு எல்லைக்கு சென்றேனா? இல்லையா? என்பதை மறந்து விட்டேன்.
பின்னர் நடுவர் அருகில் வந்து நான் பந்துவீச்சு எல்லைக்கு செல்லவில்லை என கூறினார். அதற்கு நான் (நடுவர்களிடம்), “என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு சரியாக ஞாபகமில்லை என்றேன்”. எனினும் நடுவர்கள் கலந்துரையாடி, நான் வேண்டுமென்று குறித்த செயலை செய்துள்ளதாக நினைத்து, ஐசிசி விதிமுறைப்படி எதிரணிக்கு மேலதிகமாக 5 ஓட்டங்கள் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். இவ்வாறு நடக்கும் என்பதை நான் நினைத்தும் பார்க்கவில்லை” என்றார்.