“46 ஓட்டங்கள் முன்னிலையானது அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” – திமுத் கருணாரத்ன

835

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தங்களுடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 336 ஓட்டங்களை குவித்துள்ளது. முக்கியமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய திமுத் கருணாரத்ன 63 ஓட்டங்களை பெற்று, அணிக்கு சிறந்த ஆரம்பத்தினை பெற்றுக்கொடுத்திருந்தார்.

>>VISIT THE #SLvENG 2018 HUB<<

இவருக்கு அடுத்தப்படியாக களமிறங்கிய தனன்ஜய டி சில்வா மற்றும் ரொஷேன் சில்வா ஆகியோரும் அரைச்சதம் கடந்து, இலங்கை அணிக்கு சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொடுத்துள்ளனர். இந்நிலையில், பெறப்பட்டுள்ள இந்த ஓட்ட எண்ணிக்கையானது இலங்கை அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இன்றைய ஆட்டநேர முடிவில் ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாம் இங்கிலாந்து அணியை விட 46 ஓட்டங்களை அதிகமாக பெற்றுள்ளோம். இந்த ஓட்ட எண்ணிக்கையானது ஒருபக்கம் எமக்கு கிடைத்த வெற்றி என்றுதான் கூறவேண்டும். நாம் ஓட்டங்களை பெறத் தடுமாறிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான 46 ஓட்டங்கள் என்ற முன்னிலைக்குச் சென்றமையானது எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

“எமது திட்டத்தை விடவும் இங்கிலாந்து அணி அதிகமான ஓட்டங்களை குவித்துள்ளது” ; மலிந்த புஷ்பகுமார

இப்படியான முன்னிலையுடன் விளையாடும் போது, உளவியல் ரீதியில் எம்மால் சிறப்பாக செயற்பட முடியும். நாளை பந்து வீசும் போது நாம் முன்னிலைப்பெற்றுள்ள 46 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்து அணியின் 2 அல்லது 3 விக்கெட்டுகளை வீழ்த்துவோமானால் போட்டியில் எம்மால் ஆதிக்கத்தை செலுத்த முடியும். அதேநேரம், நாம் இங்கிலாந்து அணியை 250 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தினால் எம்மால் வெற்றியிலக்கை அடைவதற்கும் இலகுவாக இருக்கும்.

அதேபோன்று இங்கிலாந்து அணியானது, அவர்களது அழுத்தங்களை குறைப்பதற்காக அதிகமான சிக்ஸர்,  பௌண்ரிகளை விளாசி வருகின்றனர். அதன் மூலம் எமக்கு சவாலை முன்வைக்கின்றனர். நாளைய தினம் குறித்த ஓட்டங்களுக்கு செல்லவிடாமல், ஒன்று அல்லது இரண்டு ஓட்டங்களை பெறும் வகையில் அவர்களை கட்டுப்படுத்துவதுதான் எமது திட்டம்” என்றார்.

அத்துடன், மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ள நிலையில் இலங்கை அணியின் எதிர்பார்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட அவர், ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக உள்ளது. அகில தனன்ஜய மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் சிறப்பாக செயற்படுவார்களாயின் எம்மால், இங்கிலாந்து அணியின் அழுத்தத்தை அதிகரிக்க முடியும்.

அதேநேரம், அவர்கள் சிக்ஸர், பௌண்டரிகளுக்கு செல்வதை தடுப்பதன் மூலம், அவர்களை தவறிழைக்க வைத்து விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும். காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி எமது அணிக்கு இந்த யுத்தியை பயன்படுத்தியது. குறித்த யுத்தியை நாமும் பயன்படுத்தி அவர்களுக்கு சவால் விடுக்க உள்ளோம்”

இதேவேளை இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணிக்கு மேலதிகமாக 5 ஓட்டங்கள் வழங்கப்பட்டது.  ரொஷேன் சில்வா ஓட்டத்தை ஓடி முடிக்காததன் காரணமாக இந்த மேலதிக ஓட்டங்கள் வழங்கப்பட்டது. இதுதொடர்பில் குறிப்பிட்ட அவர்,

ரொஷேன் சில்வா குறித்த தவறினை தெரிந்து விடவில்லை. பந்து பௌண்டரி எல்லையை அடைந்துவிட்டது என நினைத்து ஓட்டத்தினை நிறைவு செய்யாமல் சென்றுவிட்டார். அதனை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. போட்டியில் இவ்வாறான தவறுகள் நடக்கலாம். அதற்காக நாம் அவரை சாடவில்லை. அந்த ஐந்து ஓட்டங்களை விடுத்து போட்டியில் அவதானம் செலுத்துவோம்” என்றார்.