உலகின் அதிகூடிய டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள இடதுகை சுழற்பந்து வீச்சாளரும், தொண்ணூறுகளில் அறிமுகமாகி விளையாடி வரும் இறுதி கிரிக்கெட் வீரருமான ரங்கன ஹேரத்துக்கு விடைகொடுக்கவுள்ள டெஸ்ட் போட்டியுடன் இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 6ம் திகதி ஆரம்பமாகிறது.
ஒருநாள் மற்றும் T20I தொடர்கள் கைநழுவியிருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் அதீத நம்பிக்கையுடன் களமிறங்கும் இலங்கை அணி, தங்களது வெற்றிக் கோட்டையான காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெற்றியுடன் தொடரை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டிகளில் மெதிவ்ஸ் உட்பட முன்னணி வீரர்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு…
தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணிக்கு வழமையான போட்டியாக இருந்தாலும், இலங்கை அணியானது, நாட்டின் பல டெஸ்ட் வெற்றிகளுக்கு காரணமான ரங்கன ஹேரத்தை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்குகிறது.
இதுவரையில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 92 டெஸ்ட் போட்டிகளில் (168) விளையாடியுள்ள ஹேரத் 430 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவே இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் சர்வதேச டெஸ்ட் அரங்கில் வீழ்த்திய அதிக விக்கட்டுகளாகவும் பதியப்பட்டுள்ளது. சொந்த மண்ணில் இலங்கை டெஸ்ட் அணிக்கு பலம் சேர்த்துவந்த இவர், ஓய்வுபெறவுள்ள காலி மைதானத்தில் 34 இன்னிங்ஸ்களில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
குறித்த மைதானத்தில் இலங்கையின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு (111 விக்கெட்டுகள்) அடுத்தப்படியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையையும் ரங்கன ஹேரத் பெற்றுள்ளார். இந்த மைதானத்தில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு இன்னுமொரு விக்கெட் மாத்திரமே தேவை என்ற நிலையில், இறுதிப் போட்டியில் ஹேரத் விளையாடவுள்ளார்.
அதேநேரம், இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை நோக்கும் போது, ஒருநாள் மற்றும் T20I போட்டிகளை விடவும் இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு அதிக சவால் விடுக்கக்கூடிய பலமான அணியாகவே உள்ளது. அதிலும் தங்களது சொந்த மண்ணில் இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த பெறுபேறுகளை கடந்த காலங்களில் பெற்றிருக்கிறது. இதனால் டெஸ்ட் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
Photos: Sri Lanka practice session before 1st test against England
ThePapare.com | Viraj Kothalawala | 04/11/2018..
எனினும், இரண்டு அணிகளுக்கும் இடையிலான வரலாற்று பதிவுகளை பார்க்கும் போது, இங்கிலாந்து அணி அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றிருக்கிறது. 1982ம் ஆண்டு, இரண்டு அணிகளும் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடின. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் பின்னனர் மொத்தமாக 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இங்கிலாந்து அணி 12 வெற்றிகளை சுவைத்துள்ளது.
இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி முடிவுகள் (1982 – 2018)
- போட்டிகள் – 31
- இங்கிலாந்து – 12 போட்டிகளில் வெற்றி
- இலங்கை – 8 போட்டிகளில் வெற்றி
- சமனிலை – 11 போட்டிகள்
அத்துடன் தொடர் வெற்றிகளை பொருத்தவரை, இலங்கை – இங்கிலாந்து அணிகள் 15 இருதரப்பு தொடர்களில் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 7 தொடர்களிலும், இலங்கை அணி 5 தொடர்களிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், 3 தொடர்கள் சமனிலையில் நிறைவுபெற்றுள்ளன.
இதனிடையே, சொந்த மண்ணில் எதிரணிகளுக்கு சவாலாக விளங்கும் இலங்கை அணியானது, இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் சிறந்த பதிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கிலாந்து அணியை சொந்த மைதானத்தில் 13 போட்டிகளில் எதிர்கொண்டு, 5 போட்டிகளில் வெற்றியையும், 4 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி முடிவுகள் (இலங்கையில்)
- போட்டிகள் – 13
- இலங்கை – 5 வெற்றிகள்
- இங்கிலாந்து – 4 வெற்றிகள்
- சமனிலை – 4 போட்டிகள்
ஒருநாள் தரவரிசையில் அதியுயர் முன்னேற்றம் கண்ட அகில தனன்ஜய
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) வெளியிட்டுள்ள புதிய…
இலங்கை அணியின் டெஸ்ட் கோட்டையாக விளங்கும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 31 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 18 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளதுடன், 7 போட்டிகளில் மாத்திரமே தோல்வியடைந்துள்ளது. குறித்த மைதானத்தில் இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதிய 4 போட்டிகளில் இலங்கை 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், இரண்டு போட்டிகள் சமனிலையாகியுள்ளன.
இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி முடிவுகள் (காலி மைதானம்)
- போட்டிகள் – 4
- இலங்கை – 2 வெற்றிகள்
- இங்கிலாந்து அணி – 0
- சமனிலை – 2
இரண்டாவது போட்டி நடைபெறவுள்ள கண்டி பல்லேகலை மைதானத்தில், இலங்கை – இங்கிலாந்து அணிகள் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. இம்முறை நடைபெறவுள்ள போட்டி, இரண்டு அணிகளதும் முதல் போட்டியாக அமையவுள்ளது. எனினும், குறித்த மைதானத்தில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, ஒரு போட்டியில் வெற்றியையும், 2 போட்டிகளில் தோல்விகளையும் சந்தித்துள்ளது.
இலங்கை அணியின் டெஸ்ட் போட்டி முடிவுகள் (பல்லேகலை மைதானம்)
- போட்டிகள் – 6
- வெற்றி – 1
- தோல்விகள் – 2
- சமனிலை – 3
இதேநிலையில், இரண்டு அணிகளுக்குமான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் இலங்கை அணி சிறந்த பெறுபேற்றினை கொண்டுள்ள மைதானமாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இலங்கை அணி 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், 8 போட்டிகளில் மாத்திரம் தோல்வியடைந்துள்ளது. முக்கியமாக இங்கிலாந்து அணியுடன் 4 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் இலங்கை சந்தித்துள்ளது.
இலங்கை அணியின் டெஸ்ட் போட்டி முடிவுகள் (எஸ்.எஸ்.சி.மைதானம்)
- போட்டிகள் – 42
- வெற்றிகள் – 20
- தோல்விகள் – 8
- சமனிலை – 14
மைதானங்களை விடுத்து வீரர்கள் பக்கம் பார்க்கும் போது, இலங்கை அணியில் தினேஷ் சந்திமால், ரங்கன ஹேரத் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரின் பக்கம் அதிகமான கவனம் திரும்பியுள்ளது. இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், ஜொனி பெயார்ஸ்டோவ் மற்றும் ஜேம்ஸ் எண்டர்சன் ஆகியோரது பக்கம் திரும்பியுள்ளது.
தற்போதைய நிலையில், ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியை பொருத்தவரை முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் (7, 8ம்) திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட்போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களை (தற்போதைய வீரர்கள்) பெற்றுள்ள அஞ்செலோ மெதிவ்ஸ் (11 இன்னிங்ஸ் 534 ஓட்டங்கள்) மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இவர்களுடன் முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ள, இலங்கை அணிக்கு பல டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுக்க காரணமான ரங்கன ஹேரத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தொடரை பொருத்தவரை இவர்களது ஆட்டங்கள் இலங்கை அணியின் சாதகமான முடிவுகளுக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை உத்தேச பதினொருவர்
தினேஷ் சந்திமால் (தலைவர்), திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, குசால் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, அகில தனன்ஜய, சுரங்க லக்மால்
அதேவேளை, இங்கிலாந்து அணியின் பலத்தை பார்க்கும் போது டெஸ்ட் அணித் தலைவர் ஜோ ரூட், ஐசிசி துடுப்பாட்ட தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் வீரர். அத்துடன் அவர் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இலங்கை ஆடுகளங்களில் நேர்த்தியாக துடுப்பெடுத்தாடக்கூடியவர். இவருடன் இலங்கை அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுள்ள ஜொனி பெயார்ஸ்டோவ் (தற்போதைய வீரர் – 4 இன்னிங்ஸ் 387 ஓட்டங்கள்) மற்றும் இலங்கை அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஜேம்ஸ் எண்டர்சன் (20 இன்னிங்ஸ் – 51 விக்கெட்டுகள்) ஆகியோரும் இங்கிலாந்து அணியின் எதிர்பார்க்கப்படும் வீரர்களாக மாறியுள்ளனர்.
முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து உத்தேச பதினொருவர்
கீடொன் ஜென்னிங்ஸ், ரோய் பர்ன்ஸ், ஜோ ரூட் (தலைவர்), மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், பென் போகஸ், செம் கரன், ஆதில் ரஷீட், ஜெக் லீச், ஜேம்ஸ் எண்டர்சன்
இவ்வாறு, இரண்டு அணிகளும் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய பலமான அணிகளாக இருந்தாலும், இலங்கை அணியானது, டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை, சொந்த மண்ணில் தங்களது ஆதிக்கத்தை வலுவானதாகவே கொண்டிருக்கிறது. தற்போதைய டெஸ்ட் தரவரிசையை பார்க்கும் போதும் இரண்டு அணிகளுக்கும் இடையில் கடும் போட்டித் தன்மையான சூழ்நிலை உருவாகியுள்ளது.
T20I தரவரிசையில் பாபர் அசாமுக்கு முதலிடம்; திசர முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) நேற்று (29) வெளியிட்டுள்ள..
இலங்கை அணி தொடரின் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெறுமாயின் தரவரிசையில் ஆறாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் இங்கிலாந்து அணி ஆறாவது இடத்துக்கு பின்தள்ளப்படும். இந்நிலையில் இங்கிலாந்து அணி 3-0 அல்லது 2-1 என வெற்றிபெற்றால் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கும் முன்னேறும் என்பதுடன், இலங்கை அணி 7வது இடத்துக்கும் பின்தள்ளப்படும் வாய்ப்பும் உள்ளது.
நீண்ட நாட்களாக ஒருநாள் மற்றும் T20I தரவரிசையில் பின்தங்கிவரும் இலங்கை அணிக்கு இந்தத் தொடரானது, தரவரிசையில் முன்னேறவும், அனுபவ வீரர் ரங்கன ஹேரத்துக்கு சிறந்த பிரியாவிடையை வழங்குவதற்கான தொடராகவும் அமைந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை அணி சாதிக்குமா? அல்லது ஒருநாள் மற்றும் T20 தொடர்களை போன்று, டெஸ்ட் தொடரின் வெற்றியையும் தவறவிடுமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<