இலங்கை 19 வயதின் கீழ் மற்றும் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணிகள் இடையில் ஐசிசி இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 112 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை 19 வயதின் கீழ் அணி 49 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் புலிந்து பெரேரா, 50 ஓட்டங்களையும், தினுர களுபஹன 34 ஓட்டங்களையும், விஷேன் ஹெலம்பகே 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில் வாசி சித்திகியு 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- இலங்கை 19 வயதின் கீழ் குழாத்தில் சாருஜன் சண்முகநாதன்
- இளையோர் உலகக் கிண்ண நடுவர் குழாத்தில் இலங்கையர்
- இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாறு: ஓர் சிறப்புப் பார்வை!
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 239 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணியினர் 36.2 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஜிஷான் ஆலம் 26 ஓட்டங்களையும், ஆதில் பின் சித்திக் 15 ஓட்டங்களையும் அதிகபட்சமாக குவித்தனர்.
மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் விஷேன் ஹெலம்பகே 3 விக்கெட்டுகளையும், புலிந்து பெரேரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
இப்போட்டியின் வெற்றியோடு இளையோர் உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டியினை ஆமோகமாக ஆரம்பித்திருக்கும் இலங்கை 19 வயதின் கிரிக்கெட் அணி, தமது அடுத்த பயிற்சிப் போட்டியில் 17ஆம் திகதி நடப்புச் சம்பியன் இந்திய அணியினை எதிர்கொள்கின்றது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 238/9 (49) புலிந்து பெரேரா 50, தினுர களுபஹன 34, விஷேன் ஹெலம்பகே 30, ரவிஷான் டி சில்வா 28, வாசி சித்திகியு 2/26
பங்களாதேஷ் – 119/9 (36.2) ஜிஷான் ஆலம் 26, விஷேன் ஹெலம்பகே 3/28, புலிந்து பெரேரா 2/5
முடிவு – இலங்கை 19 வயதின் கீழ் அணி டக்வர்த லூவிஸ் முறைப்படி 112 ஓட்டங்களால் வெற்றி