பங்களாதேஷ், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்குபற்றியிருந்த முக்கோண ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் 79 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியினை அதிரடியான முறையில் வீழ்த்திய இலங்கை அணி தொடரின் வெற்றியாளர்களாக மாறியுள்ளது.
[rev_slider LOLC]
டாக்காவின் மிர்பூரில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.
மிர்பூரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிகள் எதிலும் இதுவரை தோல்வியினை சந்திக்காத இலங்கை அணி அதே மாதிரியான முடிவினை தீர்மானமிக்க இன்றைய ஆட்டத்திலும் எதிர்பார்த்து பங்களாதேஷினை எதிர்கொண்டிருந்தது. இலங்கை அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷெஹான் மதுசங்க இந்தப் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதல் தடவையாக அறிமுகமாகியிருந்ததோடு லக்ஷான் சந்தகனுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
மறுமுனையில் இலங்கையுடன் நடைபெற்ற இத்தொடரின் ஆறாவது போட்டியில் 10 விக்கெட்டுக்களால் மோசமான தோல்வியொன்றினை பதிவு செய்த பங்களாதேஷ் அணியும் நல்ல முடிவு ஒன்றினை எதிர்பார்த்து மூன்று மாற்றங்களுடன் இந்த இறுதிப் போட்டியில் களமிறங்கியிருந்தது. அனாமுல் ஹக், நஸீர் ஹொசைன், அபுல் ஹசன் ஆகியோருக்கு பங்களாதேஷ் குழாத்தில் இருந்து ஓய்வு வழங்கப்பட மொஹமட் மிதுன், மொஹமட் சயீபுத்தின் மற்றும் மெஹதி ஹஸன் ஆகியோர் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக இலங்கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான உபுல் தரங்க, தனுஷ்க குணத்திலக்க ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தை தொடங்கியது.
எதிரணிக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் தனுஷ்க குணத்திலக்க ஆரம்பத்தில் செயற்பட்ட போதிலும் இலகு பிடியெடுப்பு ஒன்றின் மூலம் அவரது இன்னிங்ஸ் (6) மிக விரைவாக முடிந்திருந்தது.
இதனையடுத்து மூன்றாம் இலக்கத்தில் துடுப்பாட வந்த குசல் மெண்டிஸ் அதிரடியான முறையில் ஆடி இலங்கையின் ஓட்டங்களை அதிகரித்திருந்தார். வெறும் 9 பந்துகளில் 28 ஓட்டங்களை குவித்த மெண்டிசினை எதிரணித்தலைவர் மஷ்ரபி மொர்தஸா ஓய்வறைக்கு அனுப்பினார்.
இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் அணி அறிவிப்பு
கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக…
எனினும், மூன்றாம் விக்கெட்டுக்காக நிரோஷன் திக்வெல்ல, உபுல் தரங்க ஆகியோர் ஜோடி சேர்ந்து வலுவான இணைப்பாட்டம் (71) ஒன்றினை பெற்றிருந்தனர். இலங்கை அணி நல்ல நிலை ஒன்றில் காணப்பட்டிருந்த போது நிரோஷன் திக்வெல்ல மூன்றாம் விக்கெட்டாக ஆட்டமிழந்திருந்தார். பெறுமதிமிக்க இன்னிங்ஸ் ஒன்றினை இப்போட்டியில் காட்டியிருந்த திக்வெல்ல 4 பெளண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 42 ஓட்டங்களினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திக்வெல்லவின் விக்கெட்டினை அடுத்து இலங்கையின் துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓட்டங்கள் சேர்ப்பதற்கு சிரமமாக காணப்பட்டிருந்தது. அதோடு இன்று மத்திய ஓவர்களில் அதிரடி மூலம் அணிக்கு வலுச்சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட திசர பெரேரா, அசேல குணரத்ன ஆகியோரும் பிரகாசிக்கத் தவறியிருந்தனர்.
எனினும் இப்படியான அழுத்தங்களுக்கு மத்தியில் பொறுமையான ஆட்டத்தினை வெளிப்படுத்திய உபுல் தரங்க, அணித்தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோர் பெற்றுத்தந்த ஓட்டங்களின் துணையோடு 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை 221 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் தனது 37ஆவது ஒரு நாள் அரைச்சதத்துடன் தரங்க 56 ஓட்டங்களினையும், சந்திமால் 45 ஓட்டங்களினையும் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ருபெல் ஹூசைன் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து சவால் குறைந்த வெற்றி இலக்கான 222 ஓட்டங்களைப் பெறுவதற்கு பதிலுக்கு பங்களாதேஷ் அணி தமிம் இக்பால், மொஹமட் மிதுன் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தினை தொடங்கியது.
இளையோர் உலகக் கிண்ண பிளேட் இறுதிப்போட்டியில் இலங்கை
முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான தமிம் இக்பால், மிதுன் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோரை துஷ்மந்த சமீரவின் அபாரப்பந்து வீச்சு, திசர பெரேரா ஆகியோரின் களத்தடுப்பு ஆகியவற்றினால் இலங்கை அணி குறுகிய ஓட்டங்களுக்குள் ஓய்வறை அனுப்ப பங்களாதேஷ் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும், நான்காம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முஸ்பிகுர் ரஹீம் மற்றும் மஹமதுல்லாஹ் ஆகியோர் மிகவும் நிதானமான முறையில் இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்பி வெற்றி இலக்கினை நெருங்க முனைந்திருந்தனர். 58 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டத்தினை அகில தனன்ஞய முஸ்பிகுர் ரஹீமின் விக்கெட்டோடு முடிவுக்கு கொண்டு வந்தார். ரஹீம் ஆட்டமிழக்கும் போது 22 ஓட்டங்களோடு காணப்பட்டிருந்தார்.
அச்சுறுத்தலாய் அமைந்த இந்த இணைப்பாட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து போட்டியின் ஆதிக்கம் இலங்கையின் பக்கம் மாறியிருந்தது. எனினும் மஹமதுல்லாஹ் அரைச்சதம் ஒன்றினை கடந்து போராடியிருந்தார்.
பங்களாதேஷ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சகீப் அல் ஹசனும் காயம் காரணமாக துடுப்பெடுத்தாட வராத நிலையில் மஹமதுல்லாவுக்கு பின்வரிசை வீரர்களுடன் இணைந்து ஓட்டங்கள் சேர்ப்பது சிரமமாக அமைந்தது. இது ஒருபுறமிருக்க மறுமுனையில் பங்களாதேஷ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து பாரிய அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தது.
இப்படியாக பங்களாதேஷ் போராட்டத்தின் உச்சகட்ட நிலையில் காணப்பட்டிருந்த போது அவ்வணியின் இறுதி துடுப்பாட்ட வீரர்கள் மூவரின் விக்கெட்டினையும் இன்றைய போட்டியில் இலங்கையினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ஷெஹான் மதுசங்க வீழ்த்தி ஹட்ரிக் சாதனை படைத்தார். இதனால், பங்களாதேஷ் அணியை 41.1 ஓவர்களில் 142 ஓட்டங்களுடன் கட்டுப்படுத்திய இலங்கை தீர்மானமிக்க இந்த இறுதிப் போட்டியின் வெற்றியாளர்களாக மாறியது.
பங்களாதேஷ் அணியின் இறுதி விக்கெட்டாக பறிபோயிருந்த மஹமதுல்லாஹ் தனது 18ஆவது ஒரு நாள் அரைச்சதத்துடன் 92 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள், 6 பெளண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்களினை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கௌஷால் சில்வா, கபுகெதர ஆகியோரின் சதத்தால் SSC அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பு
இலங்கை அணியின் பந்துவீச்சில் ஷெஹான் மதுசங்கவின் ஹட்ரிக்கோடு, துஷ்மந்த சமீர மற்றும் அகில தனன்ஞய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கியிருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகன் விருது உபுல் தரங்கவுக்கு வழங்கப்பட்டிருந்ததோடு, தொடர் நாயகன் விருதினை திசர பெரேரா தட்டிச் சென்றார். இந்த முக்கோண ஒரு நாள் தொடரினை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் இலங்கை அணி, அடுத்ததாக பங்களாதேஷுடன் ஆரம்பமாகும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வரும் புதன்கிழமை (31) மோதுகின்றது.
ஸ்கோர் விபரம்
முடிவு – இலங்கை அணி 79 ஓட்டங்களால் வெற்றி