13வது ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் இதுவரை 4 போட்டிகள் முடிவுற்றுள்ளன.
அதன் அடிப்படையில் 5வது போட்டி நேற்று (28) மீர்பூர் ஷேர் பங்களா தேசிய விளையாட்டரங்கத்தில் எஞ்சலோ மெதிவ்ஸ் தலைமையிலான இலங்கை அணி மஸ்ரபீ மொர்டசா தலைமையிலான பங்களாதேஷ் அணியோடு விளையாடியது. இப்போட்டியில் இலங்கை டி20 அணிக்கு ஏற்கனவே தலைவராக நியமிக்கபட்டிருந்த லசித் மாலிங்க உபாதை பூரணமாக குணமடையாத காரணத்தால் விளையாடவில்லை. அதனால் எஞ்சலோ மெதிவ்ஸ் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார். இதற்கிணங்க நேற்றைய போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மஸ்ரபீ மொர்டசா தாம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
இதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து பங்களாதேஷ் அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தார்கள். அதன் பின் களமிறங்கிய முஷ்பிகுர் ரஹீம் 4 ஓட்டங்களோடு துரதிஷ்ட வசமாக “ரன் அவுட்” முறையில் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து தடுமாற்றத்தில் இருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த சகீப் அல் ஹசன் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி 4வது விக்கட்டுக்காக 67 பந்துகளில் 82 ஓட்டங்களை பகிர்ந்து பங்களாதேஷ் அணியை சிறந்த நிலைக்கு ஈட்டிச் சென்றார்கள். பிறகு இறுதியாக பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது. இவ்வணியின் சார்பில் அதிரடியாக ஆடிய சபீர் ரஹ்மான் 54 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிஸ்சர்கள் அடங்கலாக 65 நிமிடங்கள் களத்தில் துடுபெடுத்தாடி 80 ஓட்டங்களைக் குவித்தார். இவரைத் தவிர சகீப் அல் ஹசன் 32 ஓட்டங்களை பெற இறுதி நேரத்தில் களமிறங்கிய சகல துறை வீரர் மஹ்முதுல்லாஹ் ஆட்டமிழக்காமல் 12 பந்துகளில் 23 ஓட்டங்களை விளாசினார். இலங்கை அணியின் பந்துவீச்சில் துஸ்மந்த சமீர 4 ஓவர்கள் பந்துவீசி 30 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைபற்றினார். அவரைத் தவிர நுவன் குலசேகர மற்றும் எஞ்சலோ மெதிவஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளை தமக்கிடையே பரிமாறினார்கள்.
இதனையடுத்து 148 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான திலகரத்ன டில்ஷான் மற்றும் தினேஷ் சந்திமால் ஜோடி இலங்கை அணி எதிர்பார்த்த ஆரம்பத்தை பெற்று கொடுக்கவில்லை. முதல் விக்கட்டுக்காக 20 ஓட்டங்களை பகிர்ந்து விட்டு திலகரத்ன டில்ஷான் 12 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். இதனையடுத்து தினேஷ் சந்திமால் மற்றும் செஹான் ஜயசூரிய ஜோடி பொறுமையாக நிதானமாக விளையாடி 47 பந்துகளில் 56 ஓட்டங்களை 2வது விக்கட்டுக்காக பகிர்ந்தார்கள். அதன் பின் சந்திமால் ஆட்டமிழக்க, அவர் ஆட்டமிழந்து அடுத்த ஓவரில் செஹான் ஜயசூரியவும் ஆட்டமிழந்தார். அதன் பின் பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்கள் போட்டியை தம்மில் கட்டுபடுத்தி குறிப்பிட்ட இடைவெளைகளில் விக்கட்டுகளை வீழ்த்தினர். இதன் பின் இறுதிவரையில் வெற்றிக்காக போராடிய இலங்கை அணிக்கு குறிப்பிட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் கடந்த ஐக்கிய அரபு இரச்சிய அணிக்கெதிரான போட்டியில் அரைச்சதம் பெற்ற தினேஷ் சந்திமால் ஆகக் கூடுதலாக 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்களை பெற்றார். மற்ற வீரர்களில் செஹான் ஜயசூரிய 26 ஓட்டங்களையும் தசுன் சானக 14 ஓட்டங்களையும் பெற திலகரத்ன டில்ஷான், எஞ்சலோ மெதிவ்ஸ் மற்றும் சாமர கபுகெதர ஆகிய மூன்று வீரர்களும் தலா 12 ஓட்டங்களை பெற்றனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக பந்துவீசி அல் அமீன் ஹுசைன் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் துடுபாட்டதில் பங்களாதேஷ் அணியை சிறந்த ஓட்ட இலக்கிற்கு கொண்டு சென்ற சகீப் அல் ஹசன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் கைபற்றினார்கள். முஸ்தபிசுர் ரஹ்மான், மஸ்ரபீ மொர்டசா மற்றும் மஹ்முதுல்லாஹ் ஆகியோர் தலா 1 விக்கட்டுகள் வீதம் கைபற்றினார்.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் அதிரடியாக விளையாடி 80 ஓட்டங்களை பெற்ற சபீர் ரஹ்மான் தெரிவு செய்யப்பட்டார். ஆசிய கிண்ணத்தில் இலங்கை அணிக்கான அடுத்த போட்டி மார்ச் 1ம் திகதி இந்தியா அணிக்கு எதிராக இன்று போட்டி நடந்த அதே மீர்பூர் ஷேர் பங்களா தேசிய விளையாட்டரங்கத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.