“மீண்டும் சிறந்த பந்துவீச்சாளராக அகில உருவெடுத்துள்ளார்” – திமுத்

3122

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அகில தனன்ஜயவின் பந்துவீச்சு, மீண்டும் பழைய நிலைக்கு  திரும்பியிருப்பதாக இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். 

மூன்று வருடங்களில் முதல் வைட்வொஷ் வெற்றிக்காக இலங்கை அணி

சுற்றுலா பங்களாதேஷ் அணியுடன்…

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை (31) நடைபெறவுள்ள நிலையில், குறித்த போட்டிக்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போதே அகில தனன்ஜயவின் பந்துவீச்சினை திமுத் கருணாரத்ன பாராட்டியுள்ளார்.

உலகக் கிண்ணத்துக்கு முதல் இலங்கை அணியின் எதிர்பார்க்கப்படும் சுழல் பந்துவீச்சாளராக அகில தனன்ஜய இருந்தார். எனினும், அவர் ஐசிசி விதிமுறையை மீறி பந்துவீசுவதாக குற்றச்சாட்டப்பட்டதுடன், அவருக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அகில தன்னஜய தனது பந்துவீச்சை சரிசெய்து மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதினை பெற்றுக்கொண்டார்.

இதன்படி, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அகில தனன்ஜய விளையாடினாலும், எதிரணிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அவரது பந்துவீச்சு அமையவில்லை. இதனால், உலகக் கிண்ணத்துக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டு, இந்திய A  அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தார். குறித்த தொடரில் சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான இலங்கை குழாத்தில் இடம்பெற்று, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். 

இவ்வாறு, பந்துவீச்சில் மாற்றத்தை ஏற்படுத்தி, மீண்டும் அணிக்காக பிரகாசிக்கும் அகில தனன்ஜய தொடர்பில் திமுத் கருணாரத்ன குறிப்பிடுகையில், 

“அகில தனன்ஜயவின் பந்துவீச்சு பாணி சரியா? பிழையா? என்பது தொடர்பில், எனக்கு தெரியாது. ஆனால், கடந்த போட்டியில் உள ரீதியாக சிறப்பாக பந்துவீசியிருந்தார். குறிப்பாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அகில பந்துவீசியதை விடவும், இந்திய A அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்துவீசிய நம்பிக்கையுடன் மீண்டும் சிறந்த பந்துவீச்சாளராக அவர் மாறியுள்ளார் என நினைக்கிறேன்” என்றார்.

பங்களாதேஷ் தொடரில் குலசேகரவை கெளரவிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் மற்றும்…..

இதவேளை, நாளைய போட்டி குறித்து கருத்து வெளியிட்டிருந்த திமுத் கருணாரத்ன, 

“தொடரை நாம் வெற்றிக்கொண்டுள்ளதால், நாளைய போட்டியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க எண்ணியுள்ளோம். எனினும் அதிக மாற்றங்கள் ஏற்படுத்தப்படாது. இரண்டு அல்லது மூன்று மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். எவ்வாறாயினும், நாளைய போட்டியில் வெற்றிபெற்று, தொடரை 3-0 என வெற்றிக்கொள்ளவும், குறித்த வெற்றியை நுவன் குலசேகரவுக்கு அர்ப்பணிக்கவும் எதிர்பார்த்துள்ளோம்” என சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான போட்டி நாளை ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியானது, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற நுவன் குலசேகரவை கௌரவிக்கும் போட்டியாக அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<