மோசமான துடுப்பாட்டத்திற்கு பந்துவீச்சில் பதில் கொடுத்த இலங்கை

1021

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் முதல் நாள் ஆட்டம் இரு அணிகளினதும் பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கமாக மாறியிருந்தது. இதனால் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 222 ஓட்டங்களோடு கட்டுப்படுத்தப்பட்டிருந்ததோடு, தம்முடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த பங்களாதேஷ் அணியும் தடுமாற்றத்தினை காட்டியிருந்தது.

[rev_slider LOLC]

முன்னதாக டாக்காவில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.

வருடத்தின் முதல் டெஸ்ட் வெற்றிக்காக தயாராகவுள்ள இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின்…..

தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கின்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி சார்பாக சுழல் வீரரான அகில தனன்ஜய டெஸ்ட் அறிமுகத்தினைப் பெற்றுக் கொண்டதோடு, மேலதிக துடுப்பாட்ட வீரராக தனுஷ்க குணத்திலக்கவும் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்தார். இவர்களுக்கு பதிலாக முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்த சைனமன் சுழல் வீரர் லக்ஷான் சந்தகன், வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

மறுமுனையில் பங்களாதேஷ் அணியும் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. இறுதியாக 2014ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த சுழல் வீரரான அப்துர் ரசாக் அணிக்கு திரும்பியிருந்ததோடு, துடுப்பாட்ட வீரரான சப்பீர் ரஹ்மானும் இணைந்திருந்தார்.  இரண்டு வீரர்களும் கடந்த போட்டியில் விளையாடியிருந்த  சுன்சமுல் இஸ்லாம், மொசாதிக் ஹொசைன் ஆகியோரின் இடத்தினை எடுத்திருந்தனர்.

துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு சுழல் வீரர்களினை அதிகமாக கொண்டிருந்த பங்களாதேஷ் அணி அப்துர் ரசாக் மூலம் அதிர்ச்சி ஆரம்பத்தினை தந்திருந்தது. ஆறாவது ஓவரில் வித்தியாசமான முயற்சி ஒன்றினை செய்ய முயன்றிருந்த திமுத் கருணாரத்ன விக்கெட் காப்பாளர் லிடன் தாஸினால் ஸ்டம்ப் செய்யப்பட்டு வெறும் 3 ஓட்டங்களுடன் இலங்கையின் முதல் விக்கெட்டாக மைதானத்தில் இருந்து நடந்தார்.

எனினும் களத்தில் நின்ற இலங்கையின் ஏனைய ஆரம்ப வீரர் குசல் மெண்டிஸ், புதிதாக வந்த தனன்ஜய டி சில்வாவுடன் இணைந்து இரண்டாம் விக்கெட்டுக்காக பெறுமதியான இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்பிய (47) போதிலும் தய்ஜூல் இஸ்லாமினால் அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. தய்ஜூலின் பந்தினை எதிர்கொண்ட தனன்ஜய டி சில்வா இலகு பிடியெடுப்பு ஒன்றினை சப்பீர் ரஹ்மானிடம் வழங்கி ஆட்டமிழந்தார். இதனால், கடந்த போட்டியில் சதம் கடந்த தனன்ஜயவின் இன்னிங்ஸ் இம்முறை 19 ஓட்டங்களுடன் முடிவடைந்தது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை T-20 குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20……

இதனையடுத்து 28ஆவது ஓவரில் தனுஷ்க குணத்திலக்க (13) அணித்தலைவர் தினேஷ் சந்திமால் (0) ஆகியோரின் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து சுருட்டிய ரசாக் பங்களாதேஷுக்காக மீண்டும் பந்துவீச்சில் ஜொலித்தார்.

முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களினை பரிதாபகரமாக இழந்த இலங்கை அணிக்கு குசல் மெண்டிசின் (5 ஆவது டெஸ்ட்) அரைச்சதம் மட்டுமே மதிய போசணத்துக்கு முன்னர் ஆறுதல் தந்திருந்தது.

மதிய இடைவேளையினை அடுத்து வீசப்பட்டிருந்த இரண்டாவது பந்தில் மெண்டிசின் விக்கெட்டும் வீழ்ந்தது. இலங்கை அணிக்கு முன்வரிசையில் நம்பிக்கை தந்த குசல் மெண்டிஸ் 98 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 10 பெளண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களினைப் பெற்றுத் தந்திருந்தார்.

மெண்டிசினை அடுத்து பங்களாதேஷ் அணியின் சுழல் வீரர்களின் அபாரம் காரணமாக இலங்கையின் விக்கெட்டுக்கள் தொடர்ச்சியாக சரிந்து கொண்டிருந்தன. எனினும் மத்திய வரிசையில் வந்திருந்த ரொஷேன் சில்வா மாத்திரம் பொறுப்பான ஆட்டத்தினை காட்டியிருந்தார்.

பின்னர் இன்றைய நாளுக்கான தேநீர் இடைவேளை முடிவடைந்து சிறிது நேரத்தில் இலங்கை அணி தமது அனைத்து விக்கெட்டுக்களையும் 65.3 ஓவர்களில் பறிகொடுத்து 222 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கையின் இறுதி விக்கெட்டான ரொஷேன் சில்வா தனது மூன்றாவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 3 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 56 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் சுழல் வீரர்களான அப்துர் ரசாக் மற்றும் தய்ஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதமும் முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

டெஸ்ட் விளையாடும் இளம் வீரர்களுக்காக களத்தில் குதித்த சங்கக்கார

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும்…….

இதனையடுத்து மைதான சொந்தக்காரர்கள் அவர்களுடைய முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். இந்த இன்னிங்சின் முதல் ஓவரினை வீசியிருந்த சுரங்க லக்மால் பங்களாதேஷின் முதல் விக்கெட்டாக தமிம் இக்பாலினை 4  ஓட்டங்களுடன் மைதானத்திலிருந்து வெளியேற்றினார்.

பங்களாதேஷுக்காக முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சுகளிலும் சதம் கடந்த மொமினுல் ஹக்கின் விக்கெட் இரண்டாவது ஓவரில் தேவையற்ற ரன்அவுட் ஒன்றின் மூலம் பறிபோயிருந்தது.

தொடர்ந்து இரண்டு ஆட்டமிழப்பு வாய்ப்புக்களில் இருந்து தப்பிக் கொண்ட முஷ்பிகுர் ரஹீமினை சுரங்க லக்மால் போல்ட் செய்ய ஆரம்பத்திலேயே 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து பங்களாதேஷ் அணி தடுமாறியது.

அணி தடுமாற்றத்தில் இருப்பதை உணர்ந்த ஆரம்ப வீரர்களில் ஒருவரான இம்ருல் கைஸ், புதிதாக களம் நுழைந்த லிடன் தாஸ் ஆகியோர்  பங்களாதேஷின் ஓட்டங்களினை மெதுவாக உயர்த்தினர். நிதானமாக ஆடிக்கொண்டிருந்த இந்த இரண்டு இளம் வீரர்களினதும் இணைப்பாட்டத்தினை தில்ருவான் பெரேரா தகர்க்க பந்துவீச்சில் காட்டிய நல்ல துவக்கத்தினை பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் தொடர முடியாமல் முதல் நாளினை முடித்துக் கொண்டது.

முதல் நாள் நிறைவில் பங்களாதேஷ் அணி 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. களத்தில் லிடன் தாஸ் 24 ஓட்டங்களுடனும், மெஹிதி ஹசன் 5 ஓட்டங்களோடும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர். இலங்கை அணிக்கு இன்றைய நாளில் சுரங்க லக்மால் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி நல்ல துவக்கத்தினை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய விக்கெட்டுக்களின் மூலம் சுரங்க லக்மால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் (44 போட்டிகள்) 100 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரராகவும் தன்னைப் பதிவு செய்துகொண்டார்.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

ஸ்கோர் விபரம்