T20 தலைவராக செயற்படுமாறு மாலிங்கவிடம் கோரிய கிரிக்கெட் சபை

4129

இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், T20  போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக செயற்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை கேட்டுக்கொண்டிருப்பதாக லசித் மாலிங்க தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து மாலிங்க ஓய்வு பெற்றார்.

வெற்றியுடன் மாலிங்கவிற்கு பிரியாவிடை கொடுத்த இலங்கை

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி…

ஒருநாள் போட்டிகளிலிருந்து விடைபெற்றுள்ள லசித் மாலிங்க தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும், T20  போட்டிகளில் விளையாடுவது குறித்தும் நேற்று போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் தன்னை T20 போட்டிகளுக்கான தலைவராக தொடர்ச்சியாக செயற்படுமாறு கேட்டுக்கொண்டதாக இதன் போது தெரிவித்தார்.

“நான் எனது ஓய்வு குறித்த தகவலை இலங்கை கிரிக்கெட் சபையிடம் அறிவித்தேன். இதன் போது என்னுடன் கலந்துரையாடிய கிரிக்கெட் சபை அதிகாரிகள் இப்போது என்னிடம் இருக்கும் T20 போட்டிகளுக்கான தலைவர் பதவியை தொடர்ந்தும் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்”

இதேவேளை, இலங்கை T20 அணியின் தலைவராக தொடர்ச்சியாக செயற்படும் பட்சத்தில், அதற்கான திட்டமிடல் ஒன்றை மேற்கொண்டு கிரிக்கெட் சபையிடம் கலந்துரையாடவுள்ளதாகவும், மாலிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

“நான் அதிக T20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். அந்த அனுபவத்தைக் கொண்டு அணியை வழிநடத்தமுடியும். ஆனால், இந்த ஒருநாள் தொடருக்கு பின்னர், இலங்கை கிரிக்கெட் சபையிடம் ஆலோசனை ஒன்றை முன்வைக்கவுள்ளேன். குறிப்பாக ஐ.பி.எல். போன்ற தொடர்களில் விளையாடி அங்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பான சில சிந்தனைகள் எனக்கு இருக்கிறது. 

எனது எதிர்பார்ப்பு பயிற்றுவிப்புகள் எப்படி மேற்கொள்ள வேண்டும், எந்த மாதிரியான வீரர்கள் T20 அணிக்கு தேவை என்பதுதான். அதனால், நான் தேர்வுக்குழுவுடன் அமர்ந்தவுடன், T20 போட்டிகளுக்கான சிறந்த 20 அல்லது 25 வீரர்களை அணிக்குள் உள்வாங்க வேண்டும் என கேட்பேன். அவர்களிடமிருந்து என்ன தேவை என்பதை குறிப்பிட்டு அதற்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்வேன்”

இதேவேளை, T20I  உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் 19 போட்டிகள் இருப்பதாகவும், அதற்கேற்ப வீரர்களை தயார்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட மாலிங்க, கூறிய விடயங்கள் நடைபெறாவிட்டால் விலகிக்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

பிரியாவிடை போட்டியொன்றை தர மறுத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தேன் – மாலிங்க

உபாதை காரணமாக இலங்கை அணியில் இருந்து புறக்கணிப்பட்டதால் பிரியாவிடை…

“உலகக் கிண்ணத்துக்கு முன்னர் 19 போட்டிகள் உள்ளன. எனவே உலகக் கிண்ணத்துக்கு சென்ற பின்னர், ஒரு வீரரின் ஆற்றலை எம்மால் உடனடியாக கணித்துக்கொள்ள முடியாது. அணித் தலைவர் என்ற ரீதியில் மைதானத்துக்கு செல்வது நான். அதனால், திறமையுள்ள அணிக்கு தேவையான வீரரை வைத்துக்கொள்ள வேண்டும். எனக்கு ஒரு வீரரிடம் என்ன தேவை என்பதை வீரரிடமும், பயிற்றுவிப்பாளரிடமும் தெளிவுப்படுத்த வேண்டும்.

இப்படி நான் கேட்கும் விடயங்களுக்கு கிரிக்கெட் சபை, செவிசாய்க்குமானால் அணித்தலைவராக செயற்படுவேன். இல்லையென்றால், விலகிக்கொள்வேன்” என்றார்.

அதேநேரம், தனது இறுதி ஒருநாள் போட்டியில் அணியின் வீரர்கள், தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியதுடன், சிறந்ததொரு பிரியாவிடை போட்டியை வழங்கியதாகவும் மாலிங்க மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<