இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான முதலாவதும் இறுதியுமான T20 போட்டியில் 10 விக்கெட்டுகளால் அவுஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி ஈட்டியது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.
இத்தொடர் முழுவதும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை மகளிர் அணி இப்போட்டியிலும் தமது மோசமான துடுப்பாட்டத்தைத் தொடர்ந்தது. அவுஸ்திரேலிய மகளிர் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் இலங்கை துடுப்பாட்ட வீராங்கனைகள் தடுமாறினார். அதன்படி முதல் விக்கெட்டு 7 ஓட்டங்கள் பெற்ற நிலையில் இழக்கப்பட்டது. ஹசினி பெரேரா 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஜயங்கனி 4 ஓட்டங்களுடன் தொடர்ந்து ஆட்டமிழந்தார்.
இலங்கை அணிக்காக இரட்டை இலக்க ஓட்ட எண்ணிக்கையைப் பெற்ற ஒரே வீராங்கனை மதுஷானி ஆவர். அவர் 17 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். களமிறங்கிய அனைத்து வீராங்கனைகளும் அவுஸ்திரேலிய பந்து வீச்சிக்கு தடுமாறி விக்கெட்டை விரைவாகப் பறி கொடுத்தனர். இறுதியாக 8 விக்கெட்டுகள் இழந்த நிலையில் ப்ரபோதணி மற்றும் இனோகா ரணவீர நிதானமாகத் துடுப்பெடுத்தாடினர். ப்ரபோதனி 25 பந்துகளில் 6 ஓட்டங்களும், இனோகா ரணவீர 17 பந்துகளில் 8 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். அதன்படி இலங்கை அணி நியமித்த 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இலங்கை அணிக்கு சவாலாக அமைந்த அவுஸ்திரேலிய பந்து வீச்சாளரான பீம்ஸ் 3 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இத்தொடர் முழுவதும் சகல துறைகளிலும் அசத்தி வந்த அவுஸ்திரேலிய மகளிர் அணி, குறிப்பாக துடுப்பாட்டத்தில் அசதி வந்த அவுஸ்திரேலிய அணிக்கு இவ் இலக்கு மிக இலகுவானதாகக் காணப்பட்டது. அதன்படி ஆரம்ப வீராங்கனைகளாக களமிறங்கிய மூனி மற்றும் வில்லானி மாத்திரம் இணைந்து இலக்கை இலகுவாக அடைந்தனர்.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய வில்லானி 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 25 பந்துகளில் 34 ஓட்டங்களைப் பெற்றார். அவருக்கு சரி சமமாகத் துடுப்பெடுத்தாடிய மூனி 24 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பெற்றார். அதனால் அவுஸ்திரேலிய அணி வெறும் 8.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டையேனும் இழக்காமல் 63 ஓட்டங்கள் பெற்று போட்டியில் வெற்றிபெற்றது. இதன்படி ஒரு போட்டியை மட்டும் கொண்ட T20 தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது. போட்டியின் சிறந்த வீராங்கனையாக அவுஸ்திரேலிய அணியின் பீம்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கைக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய மகளிர் அணி தாம் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டி அவுஸ்திரேலியா நோக்கி பயணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை மகளிர் அணி 59/8 – (20)
மதுஷானி 17
பீம்ஸ் 3/11
அவுஸ்திரேலிய மகளிர் அணி 63/0 (8.1)
வில்லானி 34*, மூனி 29*