இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கட் அணிக்கும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணிக்கும் இடையிலான 2ஆவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கட் அணி 78 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. முன்னைய போட்டியில் மோசமான விளையாட்டை வெளிக்காட்டி தோல்வியைக் கண்ட இலங்கை மகளிர் அணி இப்போட்டியில் சிறந்த விளையாட்டை வெளிக்காட்டும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியது.
முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அவுஸ்திரேலிய மகளிர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகள் முதலாவது விக்கட்டுக்காக சிறந்த இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். போல்டன் மற்றும் வில்லானி இணைந்து 81 ஓட்டங்களை இணைப்பாகப் பெற்றனர். இலங்கை அணியால் ஆரம்ப விக்கட்டுகளை வேகமாக பெற்றுக்கொள்ள முடியாமல் சென்றது. வில்லானி 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க போல்டன் 64 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து களமிறங்கிய லென்னிங்கும் சிறப்பாக துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலிய மகளிர் அணி 148 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டை மட்டும் இழந்து பலமான நிலையில் காணப்பட்டது. இலங்கை அணியின் குமாரி போல்டனை ஆட்டமிழக்கச் செய்ய சிறப்பாக பந்துவீசிய ஜயங்கனி தொடர்ந்து லென்னிங்கின் விக்கட்டையும் கைப்பற்றினார். 3 விக்கட்டுகளை இழந்தாலும் அவுஸ்திரேலிய மகளிர் அணி சிறப்பாகத் துடுபெடுத்தாடியது.
அவுத்திரேலியா மகளிர் அணியின் ஜொனசென் மற்றும் ஹீலியை ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் இலங்கை மகளிர் அணி ஆட்டமிழக்கச் செய்தாலும் ப்ளாக்வெல் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலிய மகளிர் அணியின் ஓட்ட எணிக்கையை அதிகரித்தார். நியமிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து அவுஸ்திரேலிய மகளிர் அணி 254 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஜயங்கனி 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.
முதலாவது ஒரு நாள் போட்டியில் 75 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை மகளிர் அணி 252 எனும் மாபெறும் ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. முதலாவது போட்டியைப் போன்றே இப்போட்டியிலும் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகள் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர்.
எனினும் மூன்றாவதாக களமிறங்கிய சரோஜிக்கா குமாரிகாமி நிதானமாக துடுப்பெடுத்தாடி இலங்கை அணி மீண்டும் ஒரு முறை குறைந்த ஓட்ட எண்ணிக்கையில் ஆட்டமிழக்காமல் இலங்கை அணியை தாங்கி நின்றார். அவருக்கு துணையாக நிற்காது அனைத்து வீராங்கனைகளும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இலங்கை மகளிர் அணி 35 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து காணப்பட்ட பொழுது களமிறங்கிய கௌஷல்யா, குமாரிகாமி உடன் இணைந்து இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை சற்று உயர்த்தினார். அதிரடியாக துடுப்பெடுத்தாடிய கௌஷல்யா 4 நான்கு ஓட்டங்களுடன் 20 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை மகளிர் அணி ஒரு கடத்தில் 100 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுகளை இழந்து காணப்பட்டது.
அதன் பின்னர் களமிறங்கிய குமாரி மற்றும் பெர்னாண்டோ, குமாரிகாமிக்கு துணையாக நின்று இலங்கை அணி அதிக ஓட்டங்களைக் குவிக்க உதவி செய்தனர். குமாரி மற்றும் பெர்னாண்டோ முறையே 10 மற்றும் 12 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, சிறப்பாக விளையாடிய குமாரிகாமி ஆட்டமிழக்காமல் 136 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இறுதியில் இலங்கை மகளிர் அணி நியமிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இலங்கை மகளிர் அணிக்கு 50 மேலதிக ஓட்டங்கள் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய மகளிர் அணி 78 ஓட்டங்களால் வெற்றிபெற்று 4 போட்டிகளைக் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலையில் காணப்படுகின்றது.
போட்டியின் சுருக்கம்
அவுஸ்திரேலிய மகளிர் அணி – 254/8 (50) போல்டன் 64, வில்லானி 45, ப்ளாக்வெல் 56, ஜயங்கனி 3/31
இலங்கை மகளிர் அணி – 176/9 (50) குமாரிகாமி 68*, கௌஷல்யா 20, பீம்ஸ் 4/15