இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று சிக்கந்தர் ராசா மற்றும் மல்கம் வொல்லரின் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு, 262 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
இரண்டாம் நாள் நிறைவின் போது இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 293 ஓட்டங்களைப் பெற்று 63 ஓட்டங்கள் பின்னிலையுற்று இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. ஆட்டமிழக்காமல் முறையே 24, 5 ஓட்டங்களுடன் களத்தில் இருந்த ரங்கன ஹேரத் மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் மூன்றாம் நாளான இன்று துடுப்பாட்டத்தைத் தொடர்ந்தனர்.
இவ்விருவரும் 48 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்ட நிலையில், ரங்கன ஹேரத் 22 ஓட்டங்களுடன் சோன் வில்லியம்சின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் ரேகிஸ் சக்கப்வாவினால் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
ஆறுதல் வெற்றியுடன் மகளிர் உலக கிண்ணத்திலிருந்து விடைபெறும் இலங்கை
மகளிர் உலக கிண்ணத்திற்கான குழு நிலை ஆட்டங்கள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ளன…
அதனையடுத்து இரண்டு விக்கெட்டுகள் எஞ்சிய நிலையில் ஓட்டங்களை வேகமாக பெற அசேல குணரத்ன முயற்சித்த போதிலும் ஜிம்பாப்வே அணித் தலைவர் கிராம் கிரீமர் தனது சிறப்பான சுழல் பந்து வீச்சின் மூலம் சுரங்க லக்மாமலை 14 ஓட்டங்களுக்கும் அசேல குணரத்னவை 45 ஓட்டங்களுக்கும் மட்டுப்படுத்தி ஆட்டமிழக்கச் செய்தார்.
அந்த வகையில் இறுதியில், இலங்கை அணி 102.3 ஓவர்கள் துடுப்பாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 346 ஓட்டங்களைப்பதிவு செய்த அதேவேளை 10 ஓட்டங்களால் பின்னிலையுற்றிருந்தது. அதேநேரம் இலங்கை அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஓட்டங்களை மட்டுப்படுத்திய ஜிம்பாப்வே அணியின் கிராம் கிரீமர் தனது சுழல் பந்து வீச்சின் மூலம் 125 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் சோன் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதனையடுத்து 10 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் மூன்றாவது ஓவர் நிறைவில் பந்து வீச்சில் மாற்றத்தை ஏற்படுத்தி முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த ரங்கன ஹேரத்தை அறிமுகப்படுத்தினார்.
அணித் தலைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஹேரத் வீசிய முதலாவது ஒவேரிலேயே ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரேகிஸ் சக்கப்வாவை 6 ஓட்டங்களுக்கு நேரடியாக போல்ட் செய்து வீழ்த்தினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தரிசய் முசகண்டா மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹமில்டன் மசகட்சா ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவர்களில் முறையே 0, 7 ஓட்டங்களுக்கு தொடர்ச்சியாகக் கைப்பற்றி ஜிம்பாப்வே அணியை நெருக்கடிக்குள் தள்ளினார்.
முதல் இன்னிங்சில் 160 ஓட்டங்களைக் குவித்து ஜிம்பாப்வே அணியின் ஓட்டங்களை உயர்த்தியிருந்த கிரேக் எர்வின் வெறும் ஐந்து ஓட்டங்களுடன் தில்ருவான் பெரேராவின் சுழல் பந்து வீச்சின் மூலம் திமுத் கருணாரத்னவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்து ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
சற்று நேரம் இலங்கை பந்துவீச்சாளர்களைத் தாக்குபிடித்த சோன் வில்லியம்ஸ் 22 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், மீண்டும் ரங்கன ஹேரத்தின் அபார சுழல்பந்து வீச்சின் மூலம் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அந்தவகையில் வெறும் 59 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாவே அணி பாரிய நெருக்கடிக்குள் இருந்த நிலையில் இணைந்து கொண்ட சிக்கந்தர் ராசா மற்றும் பீட்டர் மூர் ஆகியோர் 6ஆவது விக்கெட்டுக்காக 86 ஓட்டங்களை பெற்று ஜிம்பாப்வே அணியின் ஓட்டங்களை உயர்த்தி அணியை நெருக்கடியிலிருந்து மீட்டனர்.
சந்தகன் பதிரன 10 விக்கெட்டுகள்; மேல் மாகாண தெற்கு 2 விக்கெட்டுகளால் வெற்றி
இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான…
இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த இந்த இணைப்பாட்டத்தை லஹிறு குமார, பீட்டர் மூரின் விக்கெட்டினை அவர் 40 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் கைப்பற்றி முறியடித்தார்.
எனினும், அதனைத் தொடர்ந்து சிக்கந்தர் ராசாவுடன் இணைந்து கொண்ட மல்கம் வொல்லர் எதிர்பாராத வகையில், ரங்கன ஹேரத் உட்பட இலங்கை பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து ஓட்டங்களை வேகமாகக் குவித்தார். 76 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 57 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.
அதேநேரம் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிக்கந்தர் ராசா 158 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகள் உட்பட 97 ஓட்டங்களுடன் களத்திலுள்ளார். இலங்கை அணித் தலைவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இந்த இணைப்பாட்டதை வீழ்த்த முடியவில்லை. சிறப்பாகத் துடுப்பாடிய இவ்விருவரும் 107 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுள்ள அதேநேரம் ஜிம்பாப்வே அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ஓட்டங்கள் பெற வழிவகுத்தனர்.
ஆரம்பத்தில் விக்கெட்டுகளை வீழ்த்திய ரங்கன ஹேரத்துக்கு இவ்விரு விக்கெட்டுகளையும் இறுதி வரை வீழ்த்த முடியவில்லை. எனினும், இன்றைய நாள் நிறைவின் போது ரங்கன ஹேரத் 85 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், தில்ருவான் பெரேரா மற்றும் லஹிரு குமார தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சிக்கந்தர் ராசா தனது கன்னிச் சதத்தினை பெற்றுக்கொள்ள இன்னும் மூன்று ஓட்டங்களே எஞ்சியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாளை போட்டியின் நான்காவது நாளாகும்.