கிரைக் எர்வினின் சதத்தின் மூலம் முதலாம் நாள் ஜிம்பாப்வே வசம்

469
Defiant-Zimbabwe-hold-their-own-against-Lankan-spinners

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியின் முதலாம் நாளில் கிரைக் எர்வினின் சதத்தின் உதவுவியுடன் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 344 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையிலுள்ளது.  

இலங்கை அணி 1997ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 952 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்த கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஜிம்பாப்வே அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது.

ஏற்கனவே சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் மற்றும் அண்மையில் நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணியுடனான ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட  தொடரையும் இழந்த நிலையில், இன்றைய தினம் ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ள இலங்கை அணி புதிய அணித் தலைவர் தினேஷ் சந்திமாலின் தலைமையில் களமிறங்கியது.

மெதிவ்சின் பதவி விலகல் இலங்கை கிரிக்கெட் அணியை வளர்ச்சி செய்யாது : சனத் ஜயசூரிய

அந்த வகையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றால் முதலில் துடுப்பாட எதிர்பார்த்திருந்த தினேஷ் சந்திமாலுக்கு ஏமாற்றமே எஞ்சியது. நாணய சுழற்சில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணித் தலைவர் கிராம்  கிரீமர் துடுப்பாட்டத்துக்கு உகந்த இந்த மைதானத்தில் முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.

அதனையடுத்து, ஜிம்பாப்வே அணி சார்பாக முதலில் துடுப்பாடக் களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஹமில்டன் மசகட்சா மற்றும் ரெஜிஸ் சக்கப்வா முதல் விக்கெட்டுக்காக 23 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட நிலையில், தினேஷ் சந்திமால் எட்டாவது ஓவரை வீசுவதற்காக அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத்தை அழைத்தார்.

ஹேரத் வீசிய முதலாவது ஓவரிலேயே ரெஜிஸ் சக்கப்வாவை 12 ஓட்டங்களுக்கு நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து களத்திலிருந்து வெளியேறச் செய்தார்.

அதனைத் தொடர்ந்து இன்றைய போட்டிக்காக அறிமுக வீராக களமிறங்கிய தரிசாய் முசகண்டா, ஆரம்ப துடுப்பாட்ட வீரான ஹமில்டன் மசகட்சாவுடன் இணைந்து மேலும் 15 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்ற நிலையில் ஹமில்டன் மசகட்சா 19 ஓட்டங்களுடனும், தரிசாய் முசகண்டா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேற ஜிம்பாப்வே அணி 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் களமிறங்கிய கிரைக் எர்வின் மற்றும் சோன் வில்லியம்ஸ்  நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி நான்காவது விக்கெட்டுக்காக 32 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்ட நிலையில், சோன் வில்லியம்ஸ் 22 ஓட்டங்களுடன் தில்ருவன் பெரேராவின் பந்து வீச்சில் அசேல குணரத்னவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறத்தில் துடுப்பாடிய கிரைக் எர்வின் இலங்கை பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்து ஜிம்பாப்வே அணியை வலுவான நிலைக்கு உயர்த்தினார்.

தனது நோக்கத்தை வெளிப்படுத்திய தினேஷ் சந்திமால்

தொடர்ந்து சீரான இடைவெளிகளில் ஜிம்பாப்வே அணி விக்கெட்டுகளை இழந்த போதிலும் கிரைக் எர்வின், சிக்கந்தர் ராசா மற்றும் மல்கம் வொல்லர் ஆகியோருடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்த ஜிம்பாப்வே அணி 300 ஓட்டங்களைக் கடந்து வலுவான நிலைக்கு சென்றது.

இறுதியில், இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது ஜிம்பாப்வே அணி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 344 ஓட்டங்களைப் பதிவு செய்து வலுவான நிலையிலுள்ளது.

இன்றைய நாள் ஆட்ட முடிவு வரை ஆட்டமிழக்காமல் துடிப்பாடிய கிரைக் எர்வின் 13 பவுண்டரிங்கள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 151 ஓட்டங்களுடனும் அவருடன் துடுப்பாடிய டொனால்ட் ட்ரிபானோ 24 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர்.

அதேநேரம் இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ரங்கன ஹேரத் 106 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் அசேல குணரத்ன 28 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

ஸ்கோர் விபரம்

ஜிம்பாப்வே – முதலாவது இன்னிங்ஸ்