இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு (2017) எப்படியாவது மறக்கடிக்கப்பட வேண்டிய ஒரு மோசமான கனவு போன்று அமைந்திருந்தது. முக்கிய வீரர்களின் உபாதைகள், தொடர் தோல்விகள், அடிக்கடி இடம்பெற்ற அணித் தலைவர்களின் மாற்றம் என்பன இலங்கை அணியை வெகுவாகப் பாதித்திருந்தது.
முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
இதன்படி, 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை ஒரு..
இப்படியான நிலையில் காணப்பட்ட இலங்கை கிரிக்கெட்டை சீரமைக்கும் நோக்கோடு பங்களாதேஷ் அணியின் “கிங் மேக்கர்” என கிரிக்கெட் வல்லுனர்களால் குறிப்பிடப்படும் சந்திக்க ஹதுருசிங்க டிசம்பர் மாத இறுதியில் இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவரது ஆளுகையில் புதிய அணித் தலைவரோடு புதுப் பொலிவுடனான இலங்கை அணி பங்களாதேஷுக்கு இந்த புத்தாண்டில் முதலாவது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கின்றது.
இந்த சுற்றுப் பயணத்தில் முதற்கட்டமாக பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முக்கோண ஒரு நாள் தொடரில் இலங்கை பங்கேற்கின்றது. அந்த வகையில் இலங்கை வீரர்கள் விளையாடும் முதல் ஒரு நாள் போட்டி நாளை (17) ஜிம்பாப்வே அணியுடன் டாக்கா நகரில் ஆரம்பமாகின்றது.
இலங்கை – ஜிம்பாப்வே ஒரு நாள் போட்டிகள் வரலாறு
இரண்டு அணிகளும் இதுவரையில் 55 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருப்பதோடு அதில் 43 வெற்றிகளை இலங்கை சுவீகரிக்க, ஜிம்பாப்வே அணியினால் 10 வெற்றிகளுக்கே சொந்தக்காரர்களாக மாற முடிந்திருந்தது. இரண்டு போட்டிகள் முடிவுகள் ஏதுமின்றி கைவிடப்பட்டிருந்தன.
புள்ளி விபரங்கள் இலங்கை அணியின் ஆதிக்கத்தை காட்டியிருந்த போதிலும் கடந்த ஆண்டு சொந்த மண்ணில் மிகவும் வலிமையாக காணப்படும் இலங்கை அணியுடனான ஒரு நாள் தொடரினை ஜிம்பாப்வே வீரர்கள் முதல் தடவையாக 3-2 எனக் கைப்பற்றி சாதனை புரிந்திருந்தனர். இது இலங்கை வீரர்களுக்கு எதிரணியை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்பதனை உணர்த்துகின்றது.
இலங்கை அணி
கடந்த ஆண்டில் 29 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருந்த இலங்கை அணியினர் அவற்றில் 5 போட்டிகளில் மாத்திரமே வெற்றியடைந்திருந்தனர். அதோடு கடந்த ஆண்டில் கிரிக்கெட் வரலாற்றில் குறித்த ஆண்டு ஒன்றில் அதிக தோல்விகள் அடைந்த அணிகள் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டு மோசமான சாதனையினை நிலைநாட்டியிருந்தது. இவையனைத்தினையும் மாற்றக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இலங்கை அணிக்கு இந்த புதிய வருடத்தில் கிடைத்திருகின்றது.
தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திசர பெரேரா
இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள்..
நடைபெறப்போகும் இந்த முக்கோண ஒரு நாள் தொடரில் இலங்கையின் ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளில் தலைவர் பதவியிலிருந்த திசர பெரேரா அதிலிருந்து நீக்கப்பட்டு, அஞ்செலோ மெதிவ்ஸ் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மீண்டும் எடுத்துக் கொண்டிருக்கின்றார்.
மத்திய வரிசை துடுப்பாட்டத்தினை பலப்படுத்தும் ஆற்றல் கொண்ட மெதிவ்ஸ் பந்து வீச்சிலும் இலங்கை அணியினை சமநிலைப்படுத்தும் வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மெதிவ்ஸ் அடிக்கடி உபாதைகளினை எதிர்கொள்ளும் வீரர் என்பதனால் இத்தொடரின் ஆரம்பப் போட்டிகளில் அவர் பந்துவீசுவது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பின்னர் வரும் போட்டிகளில் அவர் சகலதுறைகளிலும் இலங்கை அணியை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை அணியின் அண்மைய ஒரு நாள் தொடரில் அணிக்குள் உள்வாங்கப்படாது போயிருந்த குசல் மெண்டிஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரும் இந்த சுற்றுப் பயணத்தில் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர். 2016 ஆம் ஆண்டு இலங்கை சார்பாக ஒரு நாள் போட்டிகளில் 59.63 என்கிற சராசரியோடு அதிக ஓட்டங்கள் (656) குவித்த வீரரான சந்திமால் கடந்த ஆண்டில் அப்படியாக பிரகாசிக்கத் தவறியிருந்தார்.
சந்திமாலின் திறமையை நாம் இன்னும் பார்க்கவில்லை
கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த..
இதனால் ஒரு நாள் அணியிலிருந்து நீக்கப்பட்ட சந்திமாலுக்கு இத்தொடர் இலங்கையின் ஒரு நாள் அணியில் நிரந்தர இடம் ஒன்றினை பிடிக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெண்டிசும் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை அணியில் இருந்து சதீர சமரவிக்ரம மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை அணிக்கு துடுப்பாட இருக்கக்கூடிய ஏனைய வீரர்களில் முக்கியமானவர் உபுல் தரங்க ஆவார். கடந்த ஆண்டில் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (1011) பெற்ற வீரர்களில் மூன்றாம் இடத்தில் காணப்படும் தரங்க இலங்கை அணியில் காணப்படும் அதிக அனுபவமிக்க வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஜிம்பாப்வே அணியுடன் சென்ற வருடம் இடம்பெற்ற ஒரு நாள் தொடரில் இரண்டு சதங்களை விளாசிய நிரோஷன் திக்வெல்லவும் அணிக்கு துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்கக்கூடிய மற்றொரு வீரர் ஆவார். அதிரடி துடுப்பாட்ட வீரரான திக்வெல்ல ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக 2017ஆம் ஆண்டில் மொத்தமாக 826 ஓட்டங்களினை குவித்திருந்தார்.
இவர்களோடு சேர்த்து சகலதுறை வீரர்களான அசேல குணரத்ன, தனுஷ்க குணத்திலக்க மற்றும் குசல் ஜனித் பெரேரா போன்றோரும் இலங்கைக்கு துடுப்பாட்டத்தில் வலுச்சேர்க்க எதிர்பார்க்க முடியும்.
பந்துவீச்சினை பொறுத்தமட்டில் இலங்கை அணி, மணிக்கு 140 கிலோமீட்டருக்கு மேலான வேகத்தில் பந்தினை வீசும் ஆற்றல் கொண்ட இளம் வீரர் ஷெஹான் மதுசங்கவினை இந்த முக்கோண ஒரு நாள் தொடரில் அறிமுகம் செய்கின்றது. மதுசங்கவோடு இணைந்து சிரேஷ்ட வீரர்களான சுரங்க லக்மால் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையை முன்னெடுக்கவுள்ளனர்.
அதோடு சுழல்பந்து வீச்சாளர்களாக அகில தனன்ஞய மற்றும் லக்ஷான் சந்தகன் மற்றும் வனிது ஹஸரங்க ஆகியோர் இலங்கை அணிக்கு சேவை வழங்கவிருக்கின்றனர்.
இலங்கை கிரிக்கெட்டுக்காக சேவை புரிய வந்திருக்கும் அவுஸ்திரேலிய உளவியலாளர்
அவுஸ்திரேலிய அணியின் பிரபல விளையாட்டு உளவியல்..
இத்தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட அனைத்து இலங்கை வீரர்களும் புதிய பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்கவினால் வெள்ளைப்பந்து பயன்படும் போட்டிகளில் விஷேட கவனம் செலுத்தும் நோக்கோடு உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. அதோடு, ஹத்துருசிங்கவின் ஆலோசனைகளுக்கு ஏற்ப அவுஸ்திரேலிய விளையாட்டு உளவியல் நிபுணர் Dr. பில் ஜோன்சியிடம் இருந்தும் அறிவுரைகளையும் பெற்றிருக்கின்றனர்.
இலங்கை குழாம்
அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித் தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், துஷ்மந்த சமீர, ஷெஹான் மதுசங்க, அகில தனன்ஞய, லக்ஷான் சந்தகன், வனிது ஹஸரங்க
ஜிம்பாப்வே அணி
இந்த முக்கோண ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நேற்று பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் எந்தவித போராட்டத்தினையும் ஜிம்பாப்வே வீரர்கள் காட்டாத காரணத்தினால் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுக்களால் போட்டியின் வெற்றியாளர்களாக இலகுவாக மாறியிருந்தனர்.
இந்த போட்டியின் முடிவு ஒரு புறமிருக்க ஜிம்பாப்வே அணி இறுதியாக பங்குபற்றிய ஒரு நாள் தொடரில் இலங்கை அணியை தோற்கடித்த காரணத்தினால், இலங்கையின் பலவீனம் என்ன என்பது பற்றி ஜிம்பாப்வே வீரர்கள் தெளிவாகவே அறிந்து வைத்திருக்க முடியும். எனவே இலங்கை அணிக்கு ஜிம்பாப்வே சவால் தரும் என்பதில் சந்தேகம் கொள்ள முடியாது.
ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்டத்தினை எடுத்து நோக்கும் போது ஆரம்ப வீரர்களான ஹமில்டன் மசகட்சா மற்றும் சோலமன் மிர் ஆகியோர் அவ்வணிக்கு பெறுமதி தரக்கூடியவர்கள். ஜிம்பாப்வே அணிக்காக இதுவரையில் 179 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் மசகட்சா அதன் மூலம் 5,000 இற்கு மேலான ஓட்டங்களை குவித்த அனுபவம் கொண்ட ஒருவர்.
அதிரடி வீரரான மிர் இலங்கை அணியுடன் இறுதியாக நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் ஜிம்பாப்வேக்காக அதிக ஓட்டங்கள் (211) குவித்தவர்களில் இராண்டாம் இடத்தில் இருக்கின்றார்.
பாகிஸ்தான் வம்சாவளி வீரரான சிக்கந்தர் ரசா ஜிம்பாப்வே அணியின் மத்திய வரிசைக்கு பலம்தரக்கூடிய துடுப்பாட்ட வீரர். பந்தினை மிகவிரைவாக பெளண்டரி எல்லைகளுக்கு விரட்டும் ஆற்றல் கொண்ட ரசா, பங்களாதேஷ் அணியுடனான இந்த முக்கோண ஒரு நாள் தொடரின் ஆரம்பப் போட்டியிலும் பல அழுத்தங்களுக்கு மத்தியில் அரைச்சதம் (52) ஒன்றினை விளாசியிருந்தார்.
இவரோடு அனுபவம் கொண்ட விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான பிரன்டன் டைலரும் அணிக்கு திரும்பியிருக்கின்றார். இங்கிலாந்தின் கவுண்டி போட்டிகளில் விளையாடுவதற்காக கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தேசிய அணியில் இருந்து ஓய்வெடுத்துக்கொண்ட டைலர் ஜிம்பாப்வே அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் இதுவரையில் 8 சதங்கள் மற்றும் 32 அரைச் சதங்கள் என்பவற்றுடன் மொத்தமாக 5,282 ஓட்டங்களை குவித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை நோக்கும் போது அவர்கள் சுழல்பந்துவீச்சாளர்களான அணித் தலைவர் கிரேம் கிரீமர், (பகுதிநேர சுழல்வீரர்) சிக்கந்தர் ரசா ஆகியோரை எதிர்பார்க்க வேண்டி இருக்கின்றது.
தற்போது ஜிம்பாப்வே அணியில் இருக்கும் பந்து வீச்சாளர்களில் கிரீமரே அதிக ஒரு நாள் விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக உள்ளார். அணியின் வேகப்பந்து வீச்சுத்துறைக்கு தென்டாய் சட்டாரா, கிரிஸ் பொபு மற்றும் கைல் ஜார்விஸ் ஆகியோர் வலுச்சேர்ப்பார்கள் என நம்பப்படுகின்றது.
பங்களாதேஷில் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடரில் திடீர் மாற்றம்
பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளின்..
ஜிம்பாப்வே குழாம்
ஹமில்டன் மசகட்சா, சோலமன் மிர், கிரைக் இர்வின், பிரன்டன் டைலர், சிக்கந்தர் ரசா, பீட்டர் மூர், மால்கோம் வால்லர், கிரேம் கிரமர் (அணித் தலைவர்), றயான் முர்ரே, தெண்டாய் சிசோரோ, பிரன்டன் மவுடா, பிளெஸ்ஸிங் முசர்பானி, கிரிஸ் பொபு, தென்டாய் சட்டாரா, கைல் ஜார்விஸ்
பங்களதேஷின் அதிக குளிர் காலநிலையை கருதி இந்த முக்கோண ஒரு நாள் தொடரின் அனைத்துப் போட்டிகளும் அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12 மணிக்கு ஆரம்பாகும்.