சுற்றுலா இலங்கை அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், மூன்றாவது நாளில் தமது வேகப்பந்து வீச்சாளர்களினை சிறப்பாக உபயோகித்து, தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்களால் வீழ்த்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரையும் 3-0 என கைப்பற்றி இலங்கை அணியை வைட் வொஷ் செய்து அதிர்ச்சியளித்துள்ளது.
போதிய வெளிச்சம் இன்மை காரணமாக, நேற்று நிறுத்தப்பட்ட இப்போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்று தென்னாபிரிக்க அணியினை விட 346 ஓட்டங்கள் பின்தங்கியிருந்தது. நேற்றைய ஆட்டநேர நிறைவின் போது இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் 11 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 3 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர்.
Photos: Sri Lanka v South Africa 3rd Test – Day 3
Photos of the Sri Lanka v South Africa 3rd Test – Day 3
போட்டியின் மூன்றாவது நாளான இன்று தமது ஆட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணி, நிதனமாக ஓட்டங்களை சேர்க்க ஆரம்பித்திருந்தது, இருப்பினும் 90 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் இலங்கை அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தினேஷ் சந்திமால், பிளாந்தரின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரான குயின் டி கொக் இடம் பிடிகொடுத்து 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவரை அடுத்து இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ், இலங்கை அணி மேலதிகமாக 10 ஓட்டங்களை சேர்ந்திருந்த போது, தென்னாபிரிக்க அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ ரபாடவின் பந்து வீச்சில், ஆட்டமிழக்க இலங்கை அணி தடுமாறத்தொடங்கியது. இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் 19 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஏமாற்றியிருந்தார். பின்னர் இலங்கை அணிக்காக துடுப்பாட வந்த உபுல் தரங்க 24 ஓட்டங்களைப் பெற ஏனைய வீரர்கள் யாவரும், தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களால் வேட்டையாடப்பட ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர். இதனால் இலங்கை அணி, இன்றைய நாளின் மதிய போசண இடைவேளைக்கு முன்னரே தமது முதல் இன்னிங்சுக்காக இன்றைய நாளில் மேலதிகமாக 51 ஓட்டங்களை மாத்திரம் குவித்து, 45.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக, இந்த இன்னிங்சில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 41 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக, வேகப்பந்து வீச்சாளர்களான ககிஸோ றபாடா, வெர்னன் பிளாந்தார் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும், டுஆனே ஒலிவர், வேன் பர்னல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து, தென்னாபிரிக்க அணியானது முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட 426 ஓட்டங்கள் காரணமாக, மீண்டும் இலங்கை அணியை (follow on) துடுப்பெடுத்தாட பணித்தது.
தனது இரண்டாவது இன்னிங்சினை, தென்னாபிரிக்காவினை விட 295 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் ஆரம்பித்த இலங்கை அணி, இந்த இன்னிங்சின் இரண்டாவது ஓவரிலேயே தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கெளஷல் சில்வாவை ஓட்டங்கள் எதுவும் பெறாமல், றபாடாவின் பந்து வீச்சில் பறிகொடுத்தது. இந்த ஆரம்பம் மோசமாக இருந்த காரணத்தினால் சற்று நிதானமாக ஆடத் தொடங்கிய இலங்கை அணி, மதிய போசண இடைவேளையின் போது, 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்தது.
பின்னர், தமது துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணி, குறுகிய ஓட்ட இடைவெளிகளில் ஒவ்வொரு விக்கெட்டுக்களாக பறிகொடுத்தது. இதில் இலங்கை அணியின் மத்திய தர வரிசை வீரர்களில் ஒருவரான குசல் மெண்டிஸ் மாத்திரம் 20 ஓட்டங்களை கடந்தார். இலங்கை அணியின் முக்கிய வீரர்களான எஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் சந்திமால் ஆகியோர் வெறும் 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். இளம் வீரரான தனன்ஞய டி சில்வா 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதனால் ஒரு கட்டத்தில் 106 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்கு இலங்கை அணி சென்றது. 150 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணி, சுரங்க லக்மால்(31), உபுல் தரங்க(24) ஆகியோரின் ஓட்டங்களால், 42.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 177 ஒட்டங்களை மாத்திரம் பெற்று , இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்களினால் தென்னாபிரிக்காவிடம் படுதோல்வியடைந்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக, திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களை குவித்திருந்தார். இது இத்தொடரில் அவர் பெற்ற அதிக ஓட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சில், இலங்கை அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களை புரட்டி எடுத்த வேர்ன் பார்னல் 4 விக்கெட்டுகளை 51 ஓட்டங்களை கொடுத்து சாய்த்திருந்தார். இவருடன் தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்காக புதுமுக வீரராக களமிறங்கிய டுஆனே ஒலிவியர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, ககிஸோ றபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
இப்போட்டியில், தென்னாபிரிக்க அணி பெற்ற வெற்றியின் மூலம், ஆறாவது இன்னிங்ஸ் வெற்றியினை இலங்கை அணிக்கு எதிராக அவ்வணி பதிவு செய்து கொண்டுள்ளது. இதுவரையில் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியினை தென்னாபிரிக்கா 14 தடவைகள் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக JP டுமினி தெரிவு செய்யப்பட்டதோடு, இத்தொடரின் நாயகனாக, டீன் எல்கர் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த டெஸ்ட் தொடரினை அடுத்து, இரு அணிகளும் மோதும் T-20 தொடர் ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
தென்னாபிரிக்கா(முதல் இன்னிங்ஸ்): 426 (124.1) – JP டுமினி 155(221), ஹஷிம் அம்லா 134(265), குயின்டன் டீ கொக் 34(51), நுவன் பிரதீப் 78/4(27), லஹிரு குமார 107/4(25.1), எஞ்சலோ மெத்திவ்ஸ் 52/2(20)
இலங்கை (முதல் இன்னிங்ஸ்): 131 (45.4) – குசல் மெண்டிஸ் 41(58), உபுல் தரங்க 24(45), வெர்னன் பிலாந்தர் 28/3(14), ககிஸோ றபாடா 44/3(12), வேர்ன் பார்னல் 38/2(10.4), டுஆனே ஒலிவியர் 19/2(9)
இலங்கை (இரண்டாவது இன்னிங்ஸ்): 177 (42.3) – திமுத் கருணாரத்ன 50(78), சுரங்க லக்மால் 31(26), வேர்ன் பார்னல் 51/4(10.3), டுஆனே ஒலிவியர் 38/3(9), ககிஸோ றபாடா 50/2(12)
போட்டி முடிவு – தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்களினால் வெற்றி