சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், இலங்கை அணி தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல், போதிய வெளிச்சம் இன்மையால் இன்றைய நாள் ஆட்டம் நிறுத்தப்படும்போது 4 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நேற்று ஆரம்பமாகியிருந்த, இந்த போட்டியில் டுமினி மற்றும் அம்லா ஆகியோரின் அபாரசதங்களுடன், மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து 338 ஓட்டங்களை பெற்றிருந்த தென்னாபிரிக்க அணி, களத்தில் நின்ற ஹஷிம் அம்லா (125*), டுஆனே ஒலிவியர்(0*) ஆகியோருடன் இன்றைய நாள் ஆட்டத்தினை தொடர்ந்தது.


257598
நேற்று விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு தடுமாறிய இலங்கை அணி, 80 ஆவது ஓவரின் பின்னர் எடுக்கப்பட்டிருந்த புதிய பந்து காரணமாக மிக நீண்ட இணைப்பாட்டத்தின் (292 ஓட்டங்கள்) பின்னர், தென்னாபிரிக்க அணியின் ஒரு விக்கெட்டினை நேற்றைய போட்டியின் ஆட்ட நேரம் நிறைவு பெற முன்னர் கைப்பற்றியிருந்தது. புதிய பந்து காரணமாக இன்றைய நாள் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதமாக அமைந்த காரணத்தினால், போட்டி ஆரம்பமாகி 8 ஆவது ஓவரிலேயே இன்றைய நாளின் முதல் விக்கெட்டினை இலங்கை அணி, மூன்றாவது நடுவரின் தீர்ப்பு மூலம் கைப்பற்றியது. இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெத்திவ்சின் பந்து வீச்சில், தினேஷ் சந்திமாலிடம் பிடிகொடுத்து புதுமுக வீரரான டுஆனே ஒலிவியர் மூன்று ஓட்டங்களுடன் வெளியேறினார். இதனையடுத்து பந்தின் தன்மை அறிந்து அதனை வேகப்பந்து வீச்சாளர்கள் மூலம் சரியாக உபயோகித்த இலங்கை அணி, துடுப்பாட்ட வீரர்களை ஓட்டங்கள் சேர்க்க சிரமப்படுத்தி, தென்னாபிரிக்க அணியின் 5 விக்கெட்டுகளை வெறும் 40 ஓட்டங்களுக்குள் பறித்தது. இதில் இன்றைய நாளில் சாதிப்பார் என எதிர்பார்ககப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணியின் தலைவர் பாப் டு ப்ளேசிஸ் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து இருந்தார். இன்னும்  7 ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்த ஹஷிம் அம்லாவின் விக்கெட்டும் இதில் மிக முக்கியமானது. இதனால், அவர் இன்றைய நாளில் 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 134 ஓட்டங்களுடன் நுவன் பிரதீப் பந்து வீச்சில் தினேஷ் சந்திமாலிடம் பிடிகொடுத்து ஓய்வறை திரும்பியிருந்தார்.

தென்னாபிரிக்கா குறுகிய இடைவெளிகளில் பறிகொடுத்த விக்கெட்டுகளின் காரணமாக, மதிய போசண இடைவேளை வரை அவ்வணி, 8 விக்கெட்டுகளை இழந்து 398 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதனையடுத்து மதிய போசண இடைவெளியின் பின்னர், குயின் டீ கொக்கின் ஓரளவு நிதானமான ஆட்டத்துடன் (34) தென்னாபிரிக்க அணி, 426 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதல் இன்னிங்சினை நிறைவு செய்து கொண்டது.

இன்றைய நாள் சிறப்பான பந்து வீச்சு மூலம், மீதமாய் இருந்த 7 விக்கெட்டுகளையும் 98 ஓட்டங்களில் வீழ்த்திய இலங்கை அணி சார்பாக, மொத்தமாக நுவன் பிரதீப் 78 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 107 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், தமது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த இலங்கை அணி, முதல் ஓவரின் 4ஆவது பந்திலேயே வெர்னோன் பிலாந்தரின் பந்து வீச்சில் தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவை ஓட்டங்கள் எதனையும் பெறாமல் பறிகொடுத்தது. இதனால், நிலைமைய  ஓரளவு சுதாகரித்து ஆடத்தொடங்கிய இலங்கை அணி மேலதிக விக்கெட்டுகள் எதனையும் பறிகொடுக்காமல், தேநீர் இடைவேளை வரை 46 ஓட்டங்களினை பெற்றிருந்தது. தேநீர் இடைவேளையின் பின்னர், மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கெளஷல் சில்வா 13 ஓட்டங்களுடன் றபாடாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து சென்றார். இதனையடுத்து குசல் மெண்டிஸ் 62 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றிருந்த வேளையில் றபடாவின் பந்து வீச்சில் டுமினியிடம் பிடிகொடுத்து, 58 பந்துகளில் ஒரு சிக்ஸர் 6 பவுண்டரிகள் உள்ளடங்களாக 41 ஓட்டங்களுடன் வெளியேறினார். 257600இதனையடுத்து நான்காவது துடுப்பாட்ட வீரரான தனஞ்சய டி சில்வா 10 ஓட்டங்களுடன், மேலதிக சொற்ப ஓட்டங்களை இலங்கை அணி பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் முறையே 11, 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இலங்கை அணி 28.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை போதிய வெளிச்சம் இன்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்தும் இந்நிலைமை சீராகாத காரணத்தினால் இன்றைய நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இன்றைய ஆட்ட நேர நிறைவில் இலங்கை தென்னாபிரிக்க அணியை விட 346 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது.

பந்து வீச்சில், இன்று வெர்னன் பிளாந்தர் தென்னாபிரிக்க அணிக்காக  23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ககிஸோ றபடா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்கா (முதல் இன்னிங்ஸ்): 426 (124.1) – JP டுமினி 155, ஹஷிம் அம்லா 134, குயின்டன் டி கொக் 34, நுவன் பிரதீப் 78/4, லஹிரு குமார 107/4, எஞ்சலோ மெத்திவ்ஸ் 52/2

இலங்கை (முதல் இன்னிங்ஸ்): 80/4 (28.4) – குசல் மெண்டிஸ் 41, கெளஷல் சில்வா 13, எஞ்சலோ மெத்திவ்ஸ் 11*, வெர்னன் பிளாந்தர் 23/2, ககிஸோ றபாடா 26/2

போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்.