போர்ட் எலிசபெத்தில் உள்ள ஜோர்ஜ் பார்க்கில் நடைபெற்று முடிந்த தென்னாபிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான நாளான இன்று, இலங்கை அணி ஒன்றரை மணித்தியாலயத்தில் ஐந்து விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தமையின் காரணமாக 206 ஓட்டங்களால் தோல்வியுற்றது.
240 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், இன்று இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் களமிறங்கினர். இன்றைய நாளில் கைல் அபாட்டினால் வீசப்பட்ட மூன்றாவது ஓவரிலேயே LBW முறையில் மெதிவ்ஸ் ஆட்டமிழந்தார்.
நேற்றைய நாள் ஆட்டநேர நிறைவின் போது 58 ஓட்டங்களை பெற்றிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் இன்று ஒரு ஓட்டதினை மாத்திரமே பெற்றார். இலங்கை அணிக்காக கூடிய ஓட்டங்களை பெறுகின்ற அவர் நடுவரின் தீர்ப்புக்கு ரிவீவ் செய்த போதும் மூன்றாவது நடுவரால் பிரதான நடுவரின் தீர்ப்புக்கு சாதகமாகவே இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சவாலான வெற்றி இலக்கை நோக்கி ஐந்தாவது நாளை தொடரவுள்ள இலங்கை அணி
அதனை தொடர்ந்து தனஞ்சய டி சில்வாவும் அதே முறையில் கைல் அபாட்டின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தோல்வியை தவிர்ப்பதற்காக இவ்விரு துடுப்பாட்ட வீரர்களும் போராட வேண்டிய நிலையில் போட்டி ஆரம்பமாகி சிறிய நேரத்துக்குள் ஆட்டமிழந்து சென்றமை இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய ரங்கன ஹேரத் வேகப்பந்து வீச்சாளார் வெர்னன்பிலாண்டர் வீசிய முதல் பந்தை தடுத்தாடிய போதிலும் அவரின் கையுறையில் பந்து பட்டு, இடது பக்கமாக வெர்னன் பிலாண்டரிடம் வர அதனை அவர் பாய்ந்து பிடி எடுத்தார். இதன்மூலம் வெர்னன்பிலாண்டர் குறித்த இன்னிங்சில் தனது முதலாவது விக்கெட்டினை பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் பந்து வீசிய கேகிஸ் ராபாடவின் ஓவரின் மூன்றாவது பந்தில் பின்வரிசை துடுப்பாட்ட வீரரான துஷ்மந்த சமீர ஓட்டமெதுவும் பெறாமலே ஆட்டமிழந்தார். அத்துடன் குறித்த போட்டியில் கவனத்தை ஈர்த்திருந்த இடது கை சுழல் பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ் இலங்கை அணியின் இறுதி விக்கெட்டான நுவான் பிரதீப்பை போல்ட் முறையில் ஆட்டமிழக்க செய்ய, இலங்கை அணி 281 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே தென்னாபிரிக்க அணி 206 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
சிறப்பாக பந்து வீசிய ராபாட 77 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், கேஷவ் மகாராஜ் 86 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதே நேரம், ஐந்து ஓவர்கள் பந்து வீசிய கைல் அபாட் இன்று 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 59 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்சில் 117 ஓட்டங்களையும் பெற்ற ஸ்டெப்பன் குக் போட்டியின் அட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியதன் காரணமாக தென்னாபிரிக்கா அணி மூன்று டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி கேப்டவுனில் நடைபெறவுள்ளது.