சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளுக்காக இங்கிலாந்து பயணித்திருக்கும், இலங்கை அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்கும் இன்று இடம்பெற்று முடிந்த இரண்டாவது ஒரு நாள் பயிற்சிப் போட்டியில், இலங்கை அணியானது 9 விக்கெட்டுகளால் இலகு வெற்றியினைப் பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரினை 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பமாகியிருந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில், டெஸ்ட் அந்தஸ்தினை இதுவரை பெறாது இருக்கும் ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் இலங்கை அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்திருந்தது.
இந்நிலையில், தொடரினை தீர்மானிக்கும் வகையில் அமைந்த இன்றைய போட்டியானது பெக்கன்ஹம் கென்ட் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.
சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளை கருத்திற் கொண்டு இப்போட்டியில் விளையாடியிருந்த இலங்கை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்சிற்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்ததோடு உபுல் தரங்க அணியினை வழிநடாத்த நியமிக்கப்பட்டிருந்தார். அத்தோடு, நிரோஷன் திக்வெல்ல, நுவன் குலசேகர, சீக்குகே பிரசன்ன ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க முதலில் ஸ்கொட்லாந்து அணியை துடுப்பாடுமாறு பணித்தார்.
இதன்படி களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணிக்கு தமது வேகப்பந்து வீச்சாளர்கள் மூலம் இலங்கை அணி வீரர்கள் நெருக்கடி தந்தனர்.
ஸ்கொட்லாந்தின் முதல் விக்கெட்டாக கடந்த போட்டியில் சதம் கடந்த ஆரம்ப வீரர்களில் ஒருவரான கைல் கோட்சர் வெறும் ஒரு ஓட்டத்துடன், நுவன் குலசேகர மூலம் ஓய்வறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தொடர்ந்தும் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய நுவன் குலசேகர மற்றும் திசர பெரேரா ஆகியோர் இரண்டு மேலதிக விக்கெட்டுகளை குறுகிய நேர இடைவெளியில் கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டனர்.
மத்திய வரிசையில் வந்த வீரர்களை தமது திறமைவாய்ந்த சுழல் பந்துவீச்சு மூலம் சீக்குகே பிரசன்ன மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் மைதானத்தினை விட்டு வெளியேற்றியிருந்தனர்.
இதனால் நெருக்கடியின் உச்சத்திற்கு சென்று, 42.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்த ஸ்கொட்லாந்து அணி 166 ஓட்டங்களை மாத்திமே குவித்துக்கொண்டது. அவ்வணிக்காக தனியொருவராக போராடியிருந்த கிரைக் வொல்லஸ் 60 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களைப் பெற்றுத்தந்தார்.
இலங்கை அணியின் பந்து வீச்சில், லக்ஷான் சந்தகன் மொத்தமாக 10 ஓவர்கள் வீசி 39 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளையும், சீக்குகே பிரசன்ன மற்றும் நுவன் குலசேகர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் சாய்த்திருந்தனர்.
இதனையடுத்து, இலகு வெற்றி இலக்கான 167 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு துடுப்பாடக் களமிறங்கியிருந்த இலங்கை அணியானது, குசல் மெண்டிஸ் மற்றும் இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்க ஆகியோரின் அபார இணைப்பாட்டத்துடன் (114), வெறும் 22.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினைத் தொட்டது.
இலங்கை அணியின் சார்பில் அதிரடி காட்டியிருந்த குசல் மெண்டிஸ் வெறும் 51 பந்துகளை மாத்திரம் எதிர் கொண்டு 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 74 ஓட்டங்களையும் உபுல் தரங்க 53 ஓட்டங்களையும் பெற்றுத்தந்தனர்.
இலங்கை அணியில் இன்று அலஸ்டைர் இவான்ஸ் இன் பந்து வீச்சில் ஒரேயொரு விக்கெட்டாக ஆட்டமிழந்திருந்த நிரோஷன் திக்வெல்ல 29 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கொட்லாந்து அணியுடனான பயிற்சிப் போட்டிகளை முடித்திருக்கும் இலங்கை அணியானது அடுத்ததாக, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தமது முதல் பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) மோதுகின்றது.
ஸ்கோர் விபரம்
Scotland - Batting | Toss: Sri Lanka | |
---|---|---|
Matthew Cross | c Dickwella b Perera | 27 (32) |
Kyle Coetzer | c Mendis b Kulasekara | 1 (10) |
Calum MacLoed | c Prasanna b Kulasekara | 4 (9) |
Richie Berrington | c & b Prasanna | 15 (27) |
Con De Lange | c Kapugedara b Sandakan | 11 (22) |
Craig Wallace | b Prasanna | 46 (60) |
Dylan Budge | c Tharanga b Sandakan | 2 (5) |
Mark Watt | c Dickwella b Sandakan | 5 (16) |
Alasdair Evans | c Pradeep b Sandakan | 22 (39) |
Stuart Whittingham | Run Out | 0 (0) |
Gavin Main | Not Out | 10 (15) |
Total | Extras (23) | 166/10 (42.1 overs) |
Sri Lanka - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Nuwan Kulasekara | 7 | 1 | 23 | 2 |
Nuwan Pradeep | 8 | 0 | 30 | 0 |
Thisara Perera | 8 | 0 | 36 | 1 |
Seekkuge Prasanna | 9.1 | 1 | 28 | 2 |
Lakshan Sandakan | 10 | 1 | 39 | 4 |
Sri Lanka - Batting | Toss: Sri Lanka | |
---|---|---|
Niroshan Dickwella | c Watt b Evans | 29 (23) |
Upul Tharanga | Not Out | 53 (63) |
Kusal Mendis | Not Out | 74 (51) |
Dinesh Chandimal | ||
Asela Gunarathne | ||
Chamara Kapugedara | ||
Seekkuge Prasanna | ||
Thisara Perera | ||
Nuwan Kulasekara | ||
Lakshan Sandakan | ||
Nuwan Pradeep | ||
Total | Extras (14) | 170/1 (22.5 overs) |
Scotland - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Alasdair Evans | 6 | 0 | 29 | 1 |
Stuart Whittingham | 5 | 0 | 37 | 0 |
Gavin Main | 3 | 0 | 28 | 0 |
Mark Watt | 4 | 0 | 25 | 0 |
Con De Lange | 3.5 | 0 | 33 | 0 |
Dylan Bunge | 1 | 0 | 12 | 0 |