இலங்கை பந்து வீச்சாளர்களால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பாகிஸ்தான்

764

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் சிறந்த பந்துவீச்சை வெளிக்காட்டிய இலங்கை வீரர்கள் பாகிஸ்தானின் முதல் இன்னிங்சை 262 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியுள்ளனர்.

போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை அணியானது முதல் இன்னிங்சை வலுவான ஓட்டங்களுடன் (482) நிறைவு செய்த பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த  பாகிஸ்தான் போட்டியின் ஆட்ட நேர முடிவில் உறுதியான ஆரம்பம் ஒன்றை வெளிக்காட்டி 18 ஓவர்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 51 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தது. மைதானத்தில் சமி அஸ்லம் 30 ஓட்டங்களுடனும் ஷான் மசூத் 15 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர்.

>>இரட்டை சதத்தை தவறவிட்ட கருணாரத்ன; இரண்டாம் நாளும் இலங்கை வசம்<<

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை இலங்கையின் முதல் இன்னிங்சை எட்டும் எதிர்பார்ப்புகளோடு ஆரம்பித்த பாகிஸ்தானுக்கு தனது கன்னி டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றி இலங்கையின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு கமகே போட்டியின் 24ஆவது ஓவரில் அதிர்ச்சியூட்டினார். இதனால் பாகிஸ்தானின் முதல் விக்கெட்டுக்கான இணைப்பாட்டம் 61 ஓட்டங்களோடு நிறைவுக்கு வந்ததுடன் முதல் விக்கெட்டாக ஆரம்ப வீரர் ஷான் மசூத் 16 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பியிருந்தார்.

இதனையடுத்து போட்டியின் அடுத்த ஓவரில் தில்ருவான் பெரேரா மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சமி அஸ்லமையும் LBW முறையில் வீழ்த்தியிருந்தார். பாகிஸ்தான் இந்த விக்கெட்டுக்காக மூன்றாம் நடுவரின் உதவியை நாடிய போதும் அது அவர்களுக்கு பிரயோஜனம் எதனையும் தரவில்லை. இதனால் சமி அஸ்லம் 39 ஓட்டங்களுடன் தனது இன்னிங்சை முடிக்க வேண்டி ஏற்பட்டது.

அடுத்து பாகிஸ்தானுக்காக துடுப்பாட்டத்தை முன்னெடுக்க வந்த வீரர்களான அசாத் சபீக் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் ஏமாற்றமான  ஆட்டத்தை வெளிக்காட்டி மைதானத்தில் நீண்ட நேரம் நீடிக்காது போயிருந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 109 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த இக்கட்டான தருணத்தில் ஜோடி சேர்ந்த அசார் அலி மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகியோர் நிதானமான முறையில் இலங்கை பந்து வீச்சாளர்களை கையாண்டு ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினர். மெதுவான முறையில் கட்டியெழுப்பப்பட்ட இவர்களது இணைப்பாட்டம் போட்டியின் தேநீர் இடைவேளை வரையும் நீடித்தது.

தேநீர் இடைவேளையை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் உறுதியான முறையில் பாகிஸ்தான் ஓட்டங்களை சேர்த்தது. இதில் அசார் அலி தனது 27 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை பூர்த்தி செய்து அணியை வலுப்படுத்தியிருந்தார். இலங்கை பந்து வீச்சாளர்களுக்கும் போட்டியின் இந்த இடைவெளியில் விக்கெட் ஒன்றைக் கைப்பற்றுவது சிரமமாக அமைந்திருந்தது.

போட்டியின் இராப்போசண இடைவேளைக்கு முன்னதாக இலங்கை அணிக்கு தேவையாக காணப்பட்டிருந்த பாகிஸ்தானின் விக்கெட்டை போட்டியின் 72ஆவது ஓவரில் ரங்கன ஹேரத் மூன்றாம் நடுவரின் உதவியோடு கைப்பற்றியிருந்தார். இதனால், பாகிஸ்தானின் ஐந்தாம் விக்கெட்டாக அசார் அலி மைதானத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டதுடன் வலுவான இணைப்பாட்டம் ஒன்றும் 71 ஓட்டங்களுடன் முடிவடைந்தது. ஆட்டமிழக்கும் போது அசார் அலி 128 பந்துகளில் 6 பவுண்டரிகள் உடன் 59 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

போட்டியின் இராப்போசணத்தை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் மத்திய வரிசை மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டியது. பாகிஸ்தானின் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் நம்பிக்கை தருவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தும் வெறும் 12 ஓட்டங்களுடன் அவர் ஆட்டமிழந்து ஏமாற்றியிருந்தார். சர்பராஸ் அஹ்மட்டின் விக்கெட்டை அடுத்து பாகிஸ்தானின் இறுதி நம்பிக்கையாக காணப்பட்ட ஹரிஸ் சொஹைலும் தில்ருவான் பெரேராவினால் போட்டியின் 83ஆவது ஓவரில் வீழ்த்தப்பட்டார். சொஹைலை அடுத்து பாகிஸ்தானுக்கு பின்வரிசை வீரர்கள் துரித கதி துடுப்பாட்டம் மூலம் சிறிது நேரம் உதவினர். முடிவில் 90.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 262 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ஹரிஸ் சொஹைல் 135 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

>>இலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் ஒருநாள் குழாம் அறிவிப்பு<<

இலங்கை அணியின் பந்து வீச்சில் அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பான முறையில் செயற்பட்டிருந்தனர். இதில் சுழல் வீரர்களான ரங்கன ஹேரத் மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியதுடன், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் லஹிரு கமகே மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் சாய்த்திருந்தனர்.

இதனையடுத்து 220 ஓட்டங்கள் முன்னிலையுடன் இலங்கை அணி தனது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்தது. சவாலான இலக்கு ஒன்றை எதிரணிக்கு வைக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் இந்த இன்னிங்சில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கெளஷால் சில்வா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகிய இருவரும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இரையாகியிருந்தனர். மூன்றாம் இலக்கத்தில் ஆடவந்த சதீர சமரவிக்ரமவும் பிரகாசிக்கவில்லை. இதனையடுத்து சுழல் வீரர் யாசிர் ஷாஹ்வினாலும் இலங்கை அணியின் நான்காம் விக்கெட் வீழ்த்தப்பட்டது. இதனையடுத்து மைதானம் விரைந்த இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமாலும் ஓட்டமேதுமின்றி வெளியேறினார்.

இதனால் தடுமாற்றமான ஆரம்பம் ஒன்றைக் காட்டிய இலங்கை அணி போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் 14.3 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 34 ஓட்டங்களுடன் காணப்பட்டு பாகிஸ்தானை விட 254 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது. களத்தில் குசல் மெண்டிஸ் 8 ஓட்டங்களுடன் நிற்கின்றார்.

15 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட இன்றைய நாளில் இலங்கை அணிக்கு இரண்டாம் இன்னிங்சில் அச்சுறுத்திய வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி நல்லதொரு ஆரம்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 482 (159.2) – திமுத் கருணாரத்ன 196(405), தினேஷ் சந்திமால் 62(195), தில்ருவான் பெரேரா 58(76), நிரோஷன் திக்வெல்ல 52(53), சதீர சமரவிக்ரம 38(35), யாசிர் ஷாஹ் 184/6(55.5), மொஹமட் அப்பாஸ் 100/2(33)

பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 262 (90.3) – அசார் அலி 59(128), ஹரிஸ் சொஹைல் 56(135), சமி அஸ்லம் 39(71), தில்ருவான் பெரேரா 72/3(26), ரங்கன ஹேரத் 84/3(23), சுரங்க லக்மால் 2/41(17.3), லஹிரு கமகே 38/2 (15)

இலங்கை (இரண்டாம் இன்னிங்ஸ்) – 34/5 (14.3) – குசல் மெண்டிஸ் 8*(20), வஹாப் ரியாஸ் 10/3(3.3)

போட்டியின் நான்காம் நாள் நாளை தொடரும்.