ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில் திமுத் கருணாரத்னவின் திடகாத்திரமான சதத்தின் உதவியினால் முதல் இன்னிங்சை இலங்கை அணி இமாலய ஓட்டங்களோடு நிறைவு செய்துள்ளது.
கருணாரத்னவின் அபார சதத்தோடு முதல் நாளில் இலங்கை அணி ஆதிக்கம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு…
இலங்கை அணி முதற் தடவையாக விளையாடும் பகலிரவு டெஸ்ட் ஆட்டமான இந்த போட்டியின் முதலாம் நாள் முடிவடையும் போது தமது முதல் இன்னிங்சுக்காக 90 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களுடன் இலங்கை அணி வலுவான நிலையில் காணப்பட்டது. திமுத் கருணாரத்ன 133 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 49 ஓட்டங்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தனர்.
போட்டியின் இரண்டாம் நாளில் பாரிய ஓட்ட இலக்கு ஒன்றை மையமாக வைத்து இலங்கை அணியின் முதலாம் இன்னிங்ஸ் தொடர்ந்தது. இன்றைய நாள் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே தினேஷ் சந்திமால் தனது 13 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தினை பூர்த்தி செய்தார்.
மறுமுனையில் பொறுப்பான முறையில் துடுப்பாடிக் கொண்டிருந்த திமுத் கருணாரத்ன 143 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தனது 3000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்ததுடன் இலங்கை சார்பாக இந்த அடைவை பதிவு செய்த 13 ஆவது வீரராகவும் மாறியிருந்தார்.
இவ்வாறாக இலங்கை ஒரு உறுதியான நிலையை அடைந்திருந்த போது இன்றைய நாளின் முதல் விக்கெட்டினை யாசிர் ஷாஹ் கைப்பற்றியிருந்தார். இதனால் இலங்கையின் நான்காம் விக்கெட்டாக அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஓய்வறை திரும்ப வேண்டி ஏற்பட்டது. 146 ஓட்டங்களை நான்காம் விக்கெட்டுக்காக திமுத் கருணாரத்னவுடன் பகிர்ந்த தினேஷ் சந்திமால் 195 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களைக் குவித்திருந்ததார்.
தொடர்ந்து களம் நுழைந்த நிரோஷன் திக்வெல்ல தனது கன்னி இரட்டை சதத்தை எதிர்பார்த்தவாறு முன்னேறிய திமுத் கருணாரத்னவுடன் கைகோர்த்து அணியை வலுப்படுத்தினார். தினேஷ் சந்திமாலைத் தவிர போட்டியின் தேநீர் இடைவேளை வரை இலங்கை அணி மேலதிகமாக எந்த விக்கெட்டுகளையும் பறிகொடுக்கவில்லை.
இலங்கையின் புதிய துடுப்பாட்ட நட்சத்திரமாக வளர்ந்து வரும் நிரோஷன் திக்வெல்ல போட்டியின் தேநீர் இடைவேளையை அடுத்து தனது 7 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தையும், இத்தொடரில் இரண்டாவது அரைச் சதத்தையும் பூர்த்தி செய்தார். 88 ஓட்டங்கள் வரையில் நீடித்த திமுத் கருணாரத்ன மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரின் இணைப்பாட்டம் பாகிஸ்தானின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அப்பாஸினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அப்பாஸினால் இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டாக வீழ்த்தப்பட்ட நிரோஷன் திக்வெல்ல 53 பந்துகளில் 5 அசத்தலான பவுண்டரிகள் உடன் 52 ஓட்டங்களை அணிக்காக சேர்ந்திருந்தார்.
இதனையடுத்து தில்ருவான் பெரேரா இலங்கையின் 7 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் வந்து அணியைப் பலப்படுத்த தொடங்கினார். தில்ருவான் பெரேராவுடன் கைகோர்த்து மிக நீண்ட நேரமாக இலங்கை அணியின் துடுப்பாட்டத்திற்கு முதுகெலும்பாக காணப்பட்ட திமுத் கருணாரத்ன போட்டியின் 134 ஓவரில் வஹாப் ரியாஸினால் போல்ட் செய்யப்பட்டார். இதன் காரணமாக துரதிஷ்டவசமாக தனது கன்னி இரட்டை சதத்தை பூர்த்தி செய்ய இயலாமல் திமுத் கருணாரத்ன மைதானத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. ஆட்டமிழக்கும் போது திமுத் கருணாரத்ன 405 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 19 பவுண்டரிகள் அடங்கலாக 196 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
திமுத் கருணாரத்னவின் விக்கெட்டை அடுத்து போட்டியின் இராப்போசண இடைவேளைக்கு முன்னதாக அரைச்சதம் கடந்து சிறப்பாக செயற்பட்ட தில்ருவான் பெரேராவின் விக்கெட்டை இலங்கை பறிகொடுத்தது. தில்ருவான் பெரேரா 7 பவுண்டரிகள் உடன் 58 ஓட்டங்களைக் குவித்து அணிக்கு வலுச் சேர்த்திருந்தார்.
இராப்போசணத்தின் பின்னர் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக பிரகாசிக்காத நிலையில் இலங்கை அணியானது 159.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 482 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக குவித்துக் கொண்டது.
பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் இறுதி அறிக்கை கல்வி அமைச்சரிடம் கையளிப்பு
இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்னடைவை எதிர்நோக்கியுள்ள…
இலங்கை அணியை முழுமையாக இறுதியில் கட்டுப்படுத்திய பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் யாசிர் ஷாஹ் 184 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், மொஹமட் அப்பாஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
பதிலுக்கு தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி நல்லதொரு ஆரம்பத்தை வெளிக்காட்டியது. இரண்டாம் நாள் நிறைவில் 18 ஓவர்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 51 ஓட்டங்களை குவித்து காணப்படும் பாகிஸ்தான் இலங்கை அணியை விட 431 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.
பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சமி அஸ்லம் 30 ஓட்டங்களுடனும் ஷான் மசூத் 15 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 482 (159.2) – திமுத் கருணாரத்ன 196(405), தினேஷ் சந்திமால் 62(195), தில்ருவான் பெரேரா 58(76), நிரோஷன் திக்வெல்ல 52(53), சதீர சமரவிக்ரம 38(35), யாசிர் ஷாஹ் 184/6(55.5), மொஹமட் அப்பாஸ் 100/2(33)
பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 51/0 (18) – சமி அஸ்லம் 30*(49), ஷான் மசூத் 15*(59)
போட்டியின் மூன்றாம் நாள் நாளை தொடரும்.