ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் நிறைவில் அறிமுக வீரர் ஹரிஸ் சொஹைலின் பொறுப்பான ஆட்டத்துடன் பாகிஸ்தான் தமது முதல் இன்னிங்சை நல்லமுறையில் நிறைவு செய்துள்ளதுடன், சிறப்பான பந்துவீச்சையும் வெளிக்காட்டியுள்ளது.
அசார் அலியின் போராட்டத்தால் வலுவான நிலையில் பாகிஸ்தான்
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில், முன்வரிசை..
போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில், தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடியிருந்த பாகிஸ்தான், முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் உதவியோடு 112.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அசார் அலி 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றிருந்தார்.
பாகிஸ்தான் ஆட்டத்தின் நான்காம் நாளில் தமது முதல் இன்னிங்சை இலங்கை அணியை விட 153 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்தது.
போட்டி ஆரம்பித்து 122 ஆவது ஓவர் வீசப்பட்ட பொழுது இலங்கை வீரர்களுக்கு இன்றைய நாளின் முதல் விக்கெட்டைப் பெறும் வாய்ப்பு ஒன்று கிடைந்திருந்த போதிலும் அது கைகூடியிருக்கவில்லை. தில்ருவான் பெரேராவின் பந்து வீச்சு மூலம் அசார் அலி மீது LBW சந்தேக கோரிக்கை ஒன்றைக் கேட்டு இலங்கை வீரர்கள் மூன்றாம் நடுவரின் உதவியை நாடியிருந்தனர். எனினும் முடிவு பாகிஸ்தானுக்கு சாதகமாக, இப்போட்டியில் இரண்டாவது தடவையாக அசார் அலி காப்பற்றப்பட்டிருந்தார்.
எனினும் நீண்ட நேரம் அதிர்ஷ்டம் கைகொடுக்காத நிலையில் அசார் அலி ரங்கன ஹேரத்தின் ஓவரில் பதில் வீரராக களத்தடுப்பில் ஈடுபட்ட சதீர சமரவிக்ரம எடுத்த அழகிய பிடியெடுப்பு ஒன்றின் மூலம் ஆட்டமிழந்திருந்தார். பாகிஸ்தானின் ஐந்தாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த அசார் அலி 226 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
பாகிஸ்தானுக்காக சிறப்பாக செயற்பட்ட அசார் அலியின் விக்கெட்டைத் தொடர்ந்து களம் நுழைந்திருந்த அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மட் ஒரு உறுதியான ஆரம்பத்தை தந்திருந்த போதிலும், அதனை நீடிக்க முடியாமல் 18 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பியிருந்தார்.
இன்னும் இலங்கை வீரர்கள் குறுகிய நேர இடைவெளியில் பாகிஸ்தானின் இரண்டு விக்கெட்டுகளை சாய்க்க போட்டியின் மதிய போசண இடைவேளையின் போது பாகிஸ்தான் 340 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் காணப்பட்டது.
மதிய போசண இடைவேளையை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில் ஆறாம் இலக்கத்தில் களமிறங்கியிருந்த பாகிஸ்தானின் அறிமுக வீரர் ஹரிஸ் சொஹைல் அணியின் மோசமான நிலை அறிந்து விவேகமான முறையில் துடுப்பாடத் தொடங்கினார்.
இதனால் இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு பாகிஸ்தானின் இறுதி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்த 82 ஓட்டங்களை வழங்க வேண்டி ஏற்பட்டது. போட்டியில் மூன்றாவது தடவையாக எடுக்கப்பட்ட புதிய பந்தின் பின்னர் பாகிஸ்தான் 162.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 422 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டது.
தனது கன்னி டெஸ்ட் அரைச்சதத்துடன் பாகிஸ்தானுக்கு வலுவூட்டிய சொஹைல் 161 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அத்தோடு பின்வரிசையில் அதிரடியாக ஆடிய ஹசன் அலி 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உடன் 29 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் பந்து வீச்சில் இடது கை சுழல் வீரர் ரங்கன ஹேரத் மொத்தமாக 93 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுகளை இவ்வாறாக ஒரே இன்னிங்சில் சாய்ப்பது இது 32 ஆவது தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இன்னும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான நுவன் பிரதீப் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்சுடன் சேர்த்து, போட்டியின் தேநீர் இடைவேளையும் எடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாகிஸ்தானை விட 3 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணி மோசமான ஆரம்பத்தைக் காட்டியிருந்தது.
சாமர சில்வா மீதான தடை தற்காலிகமாக நீக்கம்
கிரிக்கெட் மகத்துவத்துக்கு கேடு விளைவித்த குற்றத்துக்காக இலங்கை அணியின் அனுபவமிக்க நட்சத்திர வீரர்களில் ஒருவரான..
முதல் இன்னிங்சில் குறிப்பிடும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்திய திமுத் கருணாரத்ன இம்முறை வெறும் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார். அத்தோடு முதல் இன்னிங்ஸ் போல் லஹிரு திரிமான்ன, கெளஷால் சில்வா ஆகியோர் மோசமான துடுப்பாட்டத்தை இம்முறையும் காட்டியதோடு, அணித்தலைவர் தினேஷ் சந்திமாலும் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இதன் காரணமாக போட்டியின் நான்காம் நாள் நிறைவில் இலங்கை அணி 40 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்களுடன் இக்கட்டான நிலையில் காணப்படுகின்றது. களத்தில் குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களுடனும் சுரங்க லக்மால் 2 ஓட்டங்களுடனும் நிற்கின்றனர்.
பாகிஸ்தான் அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட சுழல் வீரர் யாசிர் ஷாஹ் இலங்கையின் 2 விக்கெட்டுகளை இந்த இன்னிங்சில் கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 419 (154.5) – தினேஷ் சந்திமால் 155(372), திமுத் கருணாரத்ன 93(205), நிரோஷன் திக்வெல்ல 83(117), யாசிர் ஷாஹ் 120/3(57), மொஹமட் அப்பாஸ் 75/3(26.5), ஹசன் அலி 88/2(27)
பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 422 (162.3) – அசார் அலி 85(226), ஹரிஸ் சொஹைல் 76(161), ஷான் மசூத் 59(148), சமி அஸ்லம் 51(130), ரங்கன ஹேரத் 93/5 (40), சுரங்க லக்மால் 42/2(22), நுவன் பிரதீப் 77/2(25.3)
இலங்கை (இரண்டாம் இன்னிங்ஸ்) – 69/4 (40) – கெளஷால் சில்வா 25(87), குசல் மெண்டிஸ் 16*(63), யாசிர் ஷாஹ் 25/2(14)
போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான நாள் நாளை தொடரும்.