ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில், அணித் தலைவர் தினேஷ் சந்திமாலின் அபார சதத்துடன் இலங்கை அணி தம்முடைய முதல் இன்னிங்சினை சிறப்பாக நிறைவு செய்துள்ளது.
போட்டியின் முதல் நாளில் ஆரம்ப வீரர் திமுத் கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரின் அரைச் சதங்களுடன் போராட்டமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கை, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், தமது முதல் இன்னிங்சுக்காக 90 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களினை குவித்திருந்தது. களத்தில் தினேஷ் சந்திமால் 64 ஓட்டங்களுடனும் நிரோஷன் திக்வெல்ல 43 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர்.
கருணாரத்ன, சந்திமாலின் சிறப்பாட்டத்தால் இலங்கை வலுவான நிலையில்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின்..
தமது முதல் இன்னிங்சினை இன்று தொடர்ந்த இலங்கை அணியில், போட்டி ஆரம்பித்து சிறு நிமிடங்களில் நிரோஷன் திக்வெல்ல தன்னுடைய ஆறாவது டெஸ்ட் அரைச் சதத்தினை பூர்த்தி செய்தார்.
தொடர்ந்து இலங்கையை வலுப்படுத்திய நிரோஷன் திக்வெல்ல இன்றைய நாளின் முதல் விக்கெட்டாகவும் இலங்கை அணியின் ஐந்தாவது விக்கெட்டாகவும் பறிபோயிருந்தார். 112ஆவது ஓவரில் ஹசன் அலியினால் போல்ட் செய்யப்பட்ட திக்வெல்ல 117 பந்துகளுக்கு 9 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 83 ஓட்டங்களினை பெற்று தனது சிறந்த டெஸ்ட் இன்னிங்சினை பதிவு செய்திருந்தார்.
நிரோஷன் திக்வெல்ல ஐந்தாம் விக்கெட்டுக்காக தினேஷ் சந்திமாலுடன் பகிர்ந்துகொண்ட 134 ஓட்டங்களின் உதவியுடன் இலங்கை 300 ஓட்டங்களை அண்மித்து ஸ்திர நிலை ஒன்றினை அடைந்து கொண்டது.
மதிய போசண இடைவேளை அண்மித்த வேளையில் தினேஷ் சந்திமால் தனது 9 ஆவது டெஸ்ட் சதத்தினையும், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக பொறுப்பை பெற்றுக்கொண்ட பின்னர் முதலாவது சதத்தினையும் பூர்த்தி செய்தார்.
இலங்கை அணியின் மத்திய வரிசை விக்கெட்டுக்களை சரிக்க சிரமப்பட்ட பாகிஸ்தான் தரப்பு போட்டியின் 120 ஆவது ஓவரில் இறுதியாக களம் நுழைந்த தில்ருவான் பெரேராவினை ஓய்வறை அனுப்ப முயற்சி (LBW) செய்திருந்த போதிலும் மூன்றாம் நடுவரின் தீர்ப்புடன் தில்ருவான் பெரேரா காப்பாற்றப்பட்டார்.
தொடர்ந்து தினேஷ் சந்திமால் மற்றும் தில்ருவான் பெரேரா ஜோடி ஆறாவது விக்கெட்டுக்காக 92 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த நிலையில், இலங்கை அணியின் ஆறாம் விக்கெட்டாக பாகிஸ்தானின் அறிமுக வீரர் ஹரிஸ் சொஹைலினால் தில்ருவான் பெரேரா வீழ்த்தப்பட்டார். நீண்ட நேரம் களத்தில் நின்ற பெரேரா 33 ஓட்டங்களை பெற்றார்.
அடுத்து வந்த இலங்கை துடுப்பாட்ட வீரர்களில் எவரும் 10 ஓட்டங்களையேனும் கடக்காத நிலையில், போட்டியின் தேநீர் இடைவேளை நிறைவடைந்து சிறிது நேரத்தில் 154.5 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 419 ஓட்டங்களினை தமது முதல் இன்னிங்சுக்காக பெற்றுக்கொண்டது.
கருணாரத்ன, சந்திமாலின் சிறப்பாட்டத்தால் இலங்கை வலுவான நிலையில்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின்…
இறுதிவரை ஆட்டமிழக்காமல் அழுத்தங்களுக்கு மத்தியிலும் பொறுப்புடன் நின்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் மொத்தமாக 372 பந்துகளினை எதிர்கொண்டு 14 பெளண்டரிகளுடன் 155 ஓட்டங்களினை பெற்று சிறப்பாக செயற்பட்டதுடன் மிகவும் நீண்ட இன்னிங்ஸ் ஒன்றினையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இலங்கை அணியின் இறுதி மூன்று விக்கெட்டுக்களையும் 16 ஓட்டங்களுக்குள் சுருட்டிய பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில், மொஹமட் அப்பாஸ் மற்றும் யாசிர் சாஹ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதமும், ஹசன் அலி இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து போட்டியின் முதல் இன்னிங்சினை ஆரம்பித்த பாகிஸ்தானின் இளம் வீரர்கள் உறுதியான தொடக்கம் ஒன்றினை தந்திருந்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர நிறைவின் போது 23 ஓவர்களுக்கு பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 64 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது.
பாகிஸ்தானின் ஆரம்ப வீரர்களான சான் மசூத் 30 ஓட்டங்களுடனும், சமி அஸ்லம் 31 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.