இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட இலங்கை ரக்பி அணி

238

மலேசியா, ஈபோவில் நடைபெற்ற ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் தொடரின் மலேசியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் மலேசிய அணி 22–09 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியது.

இவ்விரண்டு அணிகளும் நடைபெற்ற சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியானது 2019ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள உலக ரக்பி சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தெரிவாகும். அந்த வகையில், சொந்த மண்ணில் விளையாடும் மலேசிய அணிக்கு ஆதரவை தெரிவிக்க அதிகளவான மலேசிய ரக்பி ஆதரவாளர்கள் படாங் (Padang) மைதானத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், அஸ்ரப் ரோஸ்லியின் முதல் உதையுடன் போட்டி ஆரம்பமானது.

வலிமைமிக்க அணியான மலேசிய அணி சொந்த மண்ணில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது. அந்த வகையில், போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே பெனால்டி ஒன்றை பெற்றுக்கொண்ட மலேசிய அணி அதன் மூலம் முதலாவது ட்ரையை வைத்தது. எனினும் கொன்வெர்சனை தவறவிட்டது. (மலேசியா 05-00 இலங்கை)

அதேநேரம், சிறப்பாக விளையடிய திலின விஜேசிங்க மூன்று புள்ளிகளை பெற்றுக் கொள்ள முயற்சித்த போதும் அது அவரால் தவறவிடப்பட்டது. எனினும் மீண்டும் கிடைக்கபெற்ற பெனல்டியை சரியாகப் பயன்படுத்தி 3 புள்ளிகளை இலங்கை சார்பாக பதிவு செய்தார். (மலேசியா 05-03 இலங்கை)

விதிமுறைகளை மீறியதன் காரணமாக மலசிய அணி வீரர் ஒருவர் சற்று நேரத்துக்கு வெளியற்றப்பட்டதன் காரணமாக, சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்ட இலங்கை அணி, பிரசாத் மதுசங்க மூலம் ட்ரை ஒன்றினை பெற்றுக்கொள்ள முயன்ற போதிலும், துரதிஷ்டவசமாக நடுவரால் பெனால்டி ஓன்று வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கிடைக்கபெற்ற பெனல்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட பிரசாத் மதுசங்க இம்முறை அணி சார்பாக மூன்று புள்ளிகளை பெற்று இலங்கை அணியை முன்னிலைப்படுத்தினார். அந்த வகையில், முதல் பாதி நேரத்தில் 05–06 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை முன்னிலை பெற்றிருந்தது.

முதல் பாதி : மலேசியா 05 – 06 இலங்கை  

40 நிமிட முதல் பாதி நேரத்தில் இலங்கை அணி தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. எனினும், இரண்டாம் பாதி நேரத்தின் போது ஆட்டத்தின் வியூகத்தை மாற்றியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. பின்கள தடுப்பு வீரர்கள் நீண்ட பந்து நகர்த்தல்கள் மூலம் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேநேரம் மலேசிய அணியின் தடுப்பாட்ட கவனக் குறைவால், இரண்டு நீண்ட உதைகளின் மூலம் கம்பத்தினுடாக பந்தை செலுத்தி 3 புள்ளிகளைப் பெற்று 05–09 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை மேலும் முன்னிலை பெற்றது. (மலேசியா 05-09 இலங்கை)

எனினும், போட்டியின் 63ஆவது நிமிடம், மலேசிய அணிக்கு கிடைக்கபெற்ற வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட டெரன்ஸ் கவிடி தடுப்பு வீரர்களை ஊடறுத்து கோல் கம்பங்களுக்கு நடுவே ட்ரை வைத்தார். அதனை தொடர்ந்து சாதகமான நூர்டினின் கொன்வெர்சன் உதையின் மூலம் கிடைக்கபெற்ற மேலதிக 2 புள்ளிகள் மூலம் மலேசிய அணி 3 புள்ளிகளால் முன்னிலை பெற்றுக்கொண்டது. (மலேசியா 12-09 இலங்கை)      

அதனைத் தொடர்ந்து புத்துணர்ச்சி பெற்ற மலேசிய அணி தொடர்ச்சியாக புள்ளிகளால் முன்னிலை பெறத்தொடங்கியது. வொங் வே மூலம் மீண்டும் ஒரு ட்ரையை பதிவு செய்த அவ்வணி, அகில் கம்சோலின் வெற்றிகரமான கொன்வெர்ச உதை மூலமாக மேலும் புள்ளிகளை பதிவு செய்தது. (மலேசியா 19-09 இலங்கை)

கடுமையாகப் போராடிய இலங்கை அணிக்கு வலிமைமிக்க மலேசிய அணியின் தடுப்பு வீரர்களை ஊடறுக்க முடியவில்லை. அதேநேரம், போட்டியின் 73ஆவது நிமிடம் மலேசிய அணிக்கு கிடைக்கபெற்ற பெனால்டியை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட அவ்வணி கம்சோல் மூலம் மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. (மலேசியா 22-09 இலங்கை)

பின்னர் 2 அணிகளாலும் மேலதிக புள்ளிகள் ஏதும் பெறப்படாத நிலையில் போட்டி நிறைவு பெற மலேசிய அணி ஆசிய ரக்பி டிவிசன் போட்டிகளில் முதலிடம் பெற்றுக்கொண்டது.

முழு நேரம் : மலேசியா 22 – 09 இலங்கை

புள்ளிகள் பெற்றோர்

மலேசியா 22 (3T, 2C, 1P)
ட்ரை – மாவர நசலோ, டெரன்ஸ் கவிடி, வோங் வே
கொன்வெர்சன் – அசிரப் நூர்டின், அகில் கம்சோல்
பெனால்டி – அகில் கம்சோல்

இலங்கை 09 (3P)
பெனால்டி – திலின விஜேசிங்க (3P)