கோஹ்லியின் இரட்டைச் சதத்துடன் இந்தியா மேலும் வலுவான நிலையில்

510
courtsey - BCCI

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில், அணித் தலைவர் விராத் கோஹ்லியின் இரட்டை சதத்தோடு இந்தியா தமது முதல் இன்னிங்சுக்காக அதி வலுவான 610 ஓட்டங்களினை குவித்திருக்கின்றது.

விஜய், புஜாரா ஆகியோரின் சதங்களோடு இந்தியா இரண்டாம் நாளிலும் ஆதிக்கம்

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின்…

நாக்பூரின் VCA மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது இந்தியா, தமது முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 312 ஓட்டங்களினைக் குவித்து சிறந்த நிலையில் காணப்பட்டது. மேலும், இலங்கை அணியினை (205) விட 107 ஓட்டங்கள் முன்னிலையும் அடைந்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை 121 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் நின்ற செட்டெஸ்வர் புஜாராவும், 54 ஓட்டங்களுடன் நின்ற இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியும் தொடர்ந்தனர்.

இரண்டு வீரர்களும் இந்திய அணிக்கு மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 183 ஓட்டங்களினை பகிர்ந்து வலுவளித்தனர். மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்னதாக இந்திய அணியின் மூன்றாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. வலது கை வேகப்பந்து வீச்சாளரான தசுன் சானக்கவினால் போல்ட் செய்யப்பட்ட செட்டெஸ்வர் புஜாரா 362 பந்துகளை எதிர்கொண்டு 14 பெளண்டரிகள் அடங்கலாக 142 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். புஜாராவினை இந்தியா இழந்திருந்த போதிலும் அணித் தலைவர் கோஹ்லி தனது தரப்புக்கு அவரின் 19 ஆவது டெஸ்ட் சதத்துடன் உறுதியளித்தார்.

போட்டியின் மதிய போசன இடைவேளையை அடுத்து புதிதாக களம் நுழைந்த அஜிங்கியா ரஹானேவின் விக்கெட்டினை இலங்கை குறைவான ஓட்டங்களுக்குள் (2) கைப்பற்றியிருந்தது.

எனினும் கோஹ்லியுடன் புதிய துடுப்பட்ட வீரராக கைகோர்த்த ரோஹித் சர்மா ஐந்தாம் விக்கெட்டுக்காக பெரிய இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அது போட்டியின் தேநீர் இடைவேளையினை தாண்டியும் வெற்றியளித்தது. இதனால் இரண்டு வீரர்களும் ஐந்தாம் விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக 173 ஓட்டங்கள் வரையில் சேர்த்தனர். இந்த இணைப்பாட்டத்தின்போது இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஐந்தாவது முறையாக டெஸ்ட் போட்டிகளில் தனது இரட்டை சதத்தினை பூர்த்தி செய்திருந்தார்.

தமிழில் வர்ணனை செய்து உலகின் பல மில்லியன் மக்களின் மனதை வென்ற ரசல் ஆர்னல்ட்

இலங்கை அணியின் முன்னாள் இடதுகை துடுப்பாட்ட வீரரும் தற்போதைய பிரபல கிரிக்கெட்…

பிரமாண்டமான டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றினை வெளிப்படுத்திய கோஹ்லி 267 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 17 பெளண்டரிகள் உள்ளடங்கலாக 213 ஓட்டங்களைப் பெற்று இந்திய அணியின் ஐந்தாம் விக்கெட்டாக மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

கோஹ்லியின் விக்கெட்டின் போதே இலங்கை அணியினை விட 400 ஓட்டங்கள் வரையில் முன்னிலை அடைந்திருந்த இந்திய அணி, ரோஹித் சர்மா பெற்றுக் கொண்ட அவருடைய மூன்றாவது டெஸ்ட் சதத்தின் துணையோடு 176.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 610 ஓட்டங்களை குவித்திருந்த போது தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை நிறைவு செய்து கொண்டதுடன், இலங்கை அணியினை விட முதல் இன்னிங்சில் மொத்தமாக 405  ஓட்டங்கள் முன்னிலையும் பெற்றுக் கொண்டது.

இந்திய அணிக்காக இந்தப் போட்டியில் நான்காவது வீரராக சதம் கடந்த ரோஹித் சர்மா 160 பந்துகளுக்கு 8 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 102 ஓட்டங்களினை விளாசி ஆட்டமிழக்காமல் நின்றார்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் சுழல் வீரரான தில்ருவான் பெரேரா மூன்று விக்கெட்டுக்களையும் லஹிரு கமகே, ரங்கன ஹேரத் மற்றும் தசுன் சானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

முதலாவது T-10 தொடர் குறித்த முழுமையான பார்வை

உலகின் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு…

இதனையடுத்து போட்டியின் மூன்றாம் நாளில் சொற்ப ஓவர்களே நிறைவில் இருந்த போது இலங்கை தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்ப வீரர்களான சதீர சமரவிக்ரம மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோருடன் தொடங்கியது.

இந்த இன்னிங்சில் வீசப்பட்ட இரண்டாவது பந்திலேயே சமரவிக்ரம இஷாந்த் சர்மாவினால் ஓட்டமேதுமின்றி போல்ட் செய்யப்பட்டார். இதனால், இலங்கை அணி தடுமாற்றமான இரண்டாம் இன்னிங்ஸ் ஆரம்பத்தினை காட்டியது.

எனினும், எஞ்சிய ஓவர்களை இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் பொறுமையாக கைக்கொள்ள போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்சில் 9 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 21 ஓட்டங்களுடன் காணப்படுகிறது.

திமுத் கருணாரத்ன 11 ஓட்டங்களுடனும், லஹிரு திரிமான்ன 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 205 (79.1) தினேஷ் சந்திமால் 57(122), திமுத் கருணாரத்ன 51(147), நிரோஷன் திக்வெல்ல 24(30), ரவிச்சந்திரன் அஷ்வின் 67/4(28.1), இஷாந்த் சர்மா 37/3(14), ரவீந்திர ஜடேஜா 56/3(21)

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 610/6d (176.1) விராத் கோஹ்லி 213(267), செட்டெஸ்வர் புஜாரா 143(362), முரளி விஜய் 128(221), ரோஹித் சர்மா 102(160)*, தில்ருவான் பெரேரா 202/3(45)

இலங்கை (இரண்டாம் இன்னிங்ஸ்) – 21/1 (9) திமுத் கருணாரத்ன 11(30)*, லஹிரு திரிமான்ன 9(22)*, இஷாந்த் சர்மா 15/1(4)

மேலும் பல செய்திகளைப் படிக்க

ThePapare.com Tamil – Live Sri Lanka Cricket sports coverage, breaking news, cricket results and…