சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில், இலங்கை அணி முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஆகியோரின் சதங்களின் உதவியோடு தமது முதல் இன்னிங்சில் நல்ல மொத்த ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.
டெல்லி பெரோஸ் ஷாஹ் கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய அணி 536 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தம்முடைய முதல் இன்னிங்சினை நிறைவு செய்திருந்தது.
இரண்டாம் நாள் போட்டி முடிவு
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட்…
இதனையடுத்து பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை, போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மையினால் கைவிடப்படும் போது 44.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
இதன் போது அஞ்செலோ மெதிவ்ஸ் 57 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் காணப்பட்டு இலங்கை அணிக்காக 50 ஓட்டங்களை நான்காம் விக்கெட்டுக்காக பகிர்ந்திருந்தனர்.
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் காரணமாக அவ்வணியை விட 405 ஓட்டங்கள் பின்தங்கி காணப்பட்ட இலங்கை போட்டியின் மூன்றாம் நாளில், வலுவான இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருந்தது.
இதன்படி கவனமாகவும், நிதானமான முறையிலும் இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் மெதிவ்சும் தற்போதைய அணித் தலைவர் சந்திமாலும் தமது தரப்புக்கு ஓட்டங்கள் சேர்க்கத் தொடங்கினர்.
இரு வீரர்களினதும் அயராத முயற்சியினால் இன்றைய நாளின் மதிய போசணம் வரை இந்தியாவினால் இலங்கையின் எந்த விக்கெட்டையும் சாய்க்க முடியாது போயிருந்தது.
இரண்டு வீரர்களாலும் மதிய போசண இடைவேளையின் போது 100 ஓட்டங்கள் வரையில் இணைப்பாட்டமாக பெறப்பட்டதோடு சந்திமால் அரைச் சதத்தினையும் கடந்திருந்தார்.
மெதிவ்ஸ் ஒரு நாள் போட்டிகளில் பந்து வீசுவதை எதிர்பார்க்கலாம் – ருமேஷ் ரத்னாயக்க
சகலதுறை வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் இந்திய அணியுடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்…
மதிய போசணத்தை அடுத்து தொடர்ந்த இன்றைய நாளுக்கான போட்டியின் இரண்டாம் இடைவெளியில் மெதிவ்ஸ் தனது 8 ஆவது டெஸ்ட் சதத்தினை கடந்தார். அதனால் நான்காம் விக்கெட் இணைப்பாட்டமும் 150 ஓட்டங்களை தாண்டியது.
தேநீர் இடைவேளை நெருங்க சிறிது நேரத்துக்கு முன்னர் இலங்கை அணி இன்றைய நாளில் தமது முதல் விக்கெட்டினைப் பறிகொடுத்தது. அஷ்வினின் சுழலில் இலங்கையின் நான்காம் விக்கெட்டாக வீழ்ந்த அஞ்செலோ மெதிவ்ஸ் 268 பந்துகளை எதிர்கொண்டு 14 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 111 ஓட்டங்களைக் குவித்து நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக இலங்கை அணிக்கு 181 ஓட்டங்களினை சேர்க்கவும் உதவினார்.
தேநீர் இடைவேளை முடிந்த பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் இளம் துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரம, தினேஷ் சந்திமாலுடன் சேர்ந்து ஐந்தாம் விக்கெட்டுக்காக பெறுமதி மிக்க இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கினார்.
இந்த தருணத்தில் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தனது 10 ஆவது டெஸ்ட் சதத்தினை கடந்ததுடன், இலங்கை அணிக்காக மிக விரைவாக (80 இன்னிங்சுகளில்) 10 டெஸ்ட் சதங்கள் கடந்த வீரராகவும் சாதனை ஒன்றினை பதிவு செய்தார்.
இலங்கை அணியின் ஐந்தாம் விக்கெட்டாக சதீர சமரவிக்ரம இஷாந்த் ஷர்மா வீசிய பந்தில் இந்திய விக்கெட் காப்பாளர் ரித்திமன் சஹாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இலங்கையின் ஐந்தாம் விக்கெட்டுக்காக 61 ஓட்டங்கள் வரையில் இணைப்பாட்டமாக பெற உதவிய சதீர சமரவிக்ரம 7 பெளண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இலங்கையின் ஒரு நாள், T-20 அணித் தலைவராக திசர பெரேரா
சகல துறை வீரரும் அதிரடி வீரருமான திசர பெரேரா, இந்தியாவுடன்ந டைபெறவிருக்கும் ஒரு நாள் மற்றும் T-20 தொடர்களுக்கு…
இதனையடுத்து களம் நுழைந்த துடுப்பாட்ட வீரர்களான அறிமுக வீரர் ரோஷென் சில்வா மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் எந்தவித ஓட்டங்களினையும் பெறாமல் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
இந்திய அணி தொடர்ந்தும் சுழலில் மிரட்ட அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த இலங்கை, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மையினால் (வழமையான ஆட்ட முடிவு நேரத்துக்கு 5 நிமிடங்கள் முன்னர்) கைவிடப்படும் போது 130 ஓவர்கள் நிறைவுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 356 ஓட்டங்களைப் பெற்று இந்திய அணியினை விட முதல் இன்னிங்சில் 180 ஓட்டங்கள் பின்தங்கி காணப்படுகின்றது.
களத்தில் இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 147 ஓட்டங்களுடனும், லக்ஷான் சந்தகன் ஓட்டமேதுமின்றியும் ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.
இந்திய அணிப் பந்து வீச்சில் இந்த இன்னிங்ஸ் சார்பாக, ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுக்களையும் ரவிந்திர ஜடேஜா, மொஹமட் சமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
ஸ்கோர் விபரம்
போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்