தெற்காசிய மற்றும் ஜப்பான் நாடுகளின் 16 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்து தொடரின் மூன்றாவது போட்டியாக இடம்பெற்ற இலங்கை மற்றும் பூட்டான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 5-2 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை இளையோர் அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.
பலம் மிக்க ஜப்பான் அணிக்கு சிறந்த தாக்குதல் கொடுத்த இலங்கை இளம் வீரர்கள்
ரேஸ் கோஸ் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற தெற்காசிய ஜப்பான் 16 வயதிற்கு உட்பட்ட 4 நாடுகளுக்கு இடையிலான காற்பந்தாட்ட…
முன்னர் இடம்பெற்ற போட்டியில் ஜப்பான் அணியிடம் 3-1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்திருந்த இலங்கை அணியும், நேபால் அணியிடம் 7-1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்திருந்த பூட்டான் அணியும் ரேஸ் கோர்ஸ் அரங்கில் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் ஆரம்பத்தில் இலங்கை வீரர்களுக்கு சிறந்த கோல் வாய்ப்புக்கள் சில கிடைக்கப் பெற்றும், அவர்கள் அதன்மூலம் சிறந்த பலனைப் பெற்றுக்கொள்ளவில்லை.
எனினும், இலங்கை அணியின் வேகமான வீரராகக் கருதப்படும், முர்ஷித் முன்களத்தில் சிறந்த விளையாட்டைக் காண்பித்து, எதிரணிக்கு பெரும் சவால் கொடுத்தார். எனினும், பூட்டான் தரப்பின் மத்திய கள வீரர்களும் சிறந்த பந்துப் பரிமாற்றங்களின்மூலம் போட்டியை சிறந்த முறையில் கொண்டு சென்றனர்.
பின்னர் போட்டியின் முதலாவது கோல் 39ஆவது நிமிடத்தில் பூட்டான் வீரர் ஷெருப் டோர்ஜி மூலம் பெறப்பட்டது.
எனினும், அதன் பின்னர் அதிரடி ஆட்டத்தைக் காண்பித்த இலங்கை வீரர்கள் மொஹமட் சபீர் மூலம் 40ஆவது மற்றும் 44ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடுத்தடுத்து பெற்று முதல் பாதியில் முன்னிலை பெற்றனர்.
முதல் பாதி: இலங்கை 02 – 01 பூட்டான்
மீண்டும் இரண்டாவது பாதியிலும் அதிரடி காண்பித்த இலங்கை வீரர்கள் தொடர்ந்து தமது ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். ஏற்கனவே இரண்டு கோல்களைப் பெற்றிருந்த சபீர் இந்தப் போட்டியில் தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார். அவர் 59ஆவது மற்றும் 66ஆவது நிமிடங்களில் இலங்கை அணிக்காக மேலும் இரண்டு கோல்களைப் பெற்றுக் கொடுத்தார்.
எனினும், 85ஆவது நிமிடத்தில் பூட்டான் அணி ஜிங்மி மூலம் ஒரு கோலைப் பெற, முதல் போட்டியிலும் இலங்கைக்காக சிறந்த ஆட்டத்தைக் காண்பித்த முர்ஷித் 90ஆவது நிமிடத்தில் இலங்கை அணிக்கான 5ஆவது கோலைப் பெற்றார்.
இதன் காரணமாக போட்டி நிறைவில் இலங்கை இளையோர் அணி மேலதிக 3 கோல்களினால் தொடரின் முதல் வெற்றியை சுவைத்தது.
முழு நேரம்: இலங்கை 05 – 02 பூட்டான்
கோல் பெற்றவர்கள்
இலங்கை – மொஹமட் சபீர் 40, 44’, 59’ & 66’ மொஹமட் முர்ஷிட் 90’
பூட்டான் – ஷெருப் டோர்ஜி 39’, ஜிங்மி 85’
ஜப்பான் எதிர் நேபால்
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டியின் முதல் பாதியிலேயே ஜப்பான் 5 கோல்களைப் பெற்று முன்னிலை பெற்றது. பின்னர், இரண்டாவது பாதியிலும் மேலும் நான்கு கோல்களைப் பெற அவ்வணி அபார வெற்றியைப் பெற்றது.
முழு நேரம்: ஜப்பான் 09 – 00 நேபால்
தொடரின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கை அணி நேபாலையும், ஜப்பான் அணி பூட்டானையும் எதிர்கொள்ளவுள்ளது.
அடுத்த போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு