இறுதிப் போட்டியின் வெற்றியுடன் தொடரை சமப்படுத்தியது இலங்கை

742
sl v ban

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான தீர்மானம் மிக்க ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணியை  70 ஓட்டங்களால் அபராமாக வெற்றி கொண்ட இலங்கை அணி தொடரை சமப்படுத்தியது.

இறுதியாக இடம்பெற்ற போட்டிகளில் அனைத்து வீரர்களும் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமையினால், இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. எனினும், இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப்புக்கு பதிலாக சுழல் பந்து வீச்சு மற்றும் சகல துறை ஆட்டக்காரரான சீக்குகே பிரசன்ன இந்த தொடரில் முதல் தடவையாக அணியில் உள்வாங்கப்பட்டிருந்தார்.

23 வயதுக்கு உட்பட்ட இலங்கை கால்பந்து குழாமிற்கு வீரர்கள் தெரிவு ஆரம்பம்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணித் தலைவர் மஷ்ரபி மொர்தஸா, இலங்கை அணியை துடுப்பாடுமாறு பணித்தார். அந்த வகையில் இலங்கை அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தனுஷ்க குணதிலக்க மற்றும் அணித் தலைவர் உபுல் தரங்க ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 76 ஓட்டங்களை பதிவு செய்து சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

பங்களாதேஷ் அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த இந்த இணைப்பாட்டத்தை மஷ்ரபி மொர்தஸா 11ஆவது ஓவரில் உடைத்தார். இதன்போது, தனுஷ்க குணதிலக்க 34 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அதனையடுத்து உபுல் தரங்கவும் 35 ஓட்டங்களுக்கு தஸ்கின் அஹமட்டின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

சிறிய நேரத்துக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து பாரிய அழுத்தத்தை எதிர்கொண்ட நேரத்தில் களமிறங்கிய குசல் மென்டிஸ் மற்றும் சந்திமால் ஆகியோர் இணைந்து மீண்டும் நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஓட்டங்களை பெற ஆரம்பித்தனர். இவர்கள் மூன்றாவது விக்கெட்டுக்காக 49 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்ட நிலையில், இலகுவாக பெற்றுக்கொள்ள கூடிய ஒரு ஓட்டத்தின் போது, தினேஷ் சந்திமால் தனது கவனக் குறைவினால் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்து சென்றார்.

அதேவேளை, கடந்த போட்டியில் அதிரடியாக சதம் விளாசியிருந்த குசல் மெண்டிஸ் 76 பந்துகளுக்கு முகம் கொடுத்து 54 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹீமிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

பெரிதும் எதிர்பார்த்திருந்த அதிரடி வீரர் அசேல குணரத்ன பெறுமதியான 34 ஓட்டங்களையும், இறுதி ஓவர் வரை அதிரடியாக ஓட்டங்களை குவித்த திசர பெரேரா 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உள்ளடங்கலாக 52 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர். அந்த வகையில் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 280 ஓட்டங்களை பதிவு செய்தது.

லக்ஷின ரொட்ரிகோவின் சதத்துடன் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறிய புனித பேதுரு கல்லூரி

பின்னர் 281 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு, இலங்கை  அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டிருந்த நுவான் குலசேகர மற்றும் தில்ருவன் பெரேரா ஆகியோரின் அதிரடி பந்து வீச்சின் முலம் 4 ஓவர்களுக்குள் வெறும் 11 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி பேரதிர்ச்சி அளித்தனர்.

தொடரை தீர்மானிக்கும் இந்த போட்டியில், குறுகிய நேரத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான நிலையில் நான்காவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஷகீப் அல் ஹசன் மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் செளம்யா சர்க்கர் இணைந்து 77 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற நிலையில் செளம்யா சர்க்கர், தில்ருவன் பெரேராவின் அற்புதமான பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமாலின் மூலம் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

அதனையடுத்து களம் வந்த மேஹடி ஹசன் மற்றும் மஹ்மதுல்லா ஆகியோர் ஒற்றை இலக்கங்களுக்கு ஆட்டமிழந்து சென்றாலும் அதனையடுத்து இணைந்து கொண்ட மொசாதிக் ஹொசைன் மற்றும் சகீப் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை பெற்றனர்.

அதிரடியாக ஓட்டங்களை குவித்து இலங்கை அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த அனுபவ மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஷகீப் அல் ஹசன் 7 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 54 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை தில்ருவன் பெரேராவின் பந்து வீச்சில் தனுஷ்க குணதிலக்கவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பாக துடுப்பாடிய மொசாதிக் ஹொசைன் இறுதி வரை போராடிய போதும் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார். அதனையடுத்து ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து செல்ல 44.3 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்த பங்களாதேஷ் அணியினால் 210 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது.

இன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை திசர பெரேரா வென்றுகொண்ட அதேவேளை, தொடரின் நாயகனாக குசல் மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி :  280/9 (50) –  குசல் மெண்டிஸ் 54(76), மிலிந்த சிறிவர்தன, 12(16), திஸர பெரேரா 52(40), உபுல்  தரங்க 35 (35), தனுஷ்க குணதிலக்க 34(38), மஷ்ரபி மொர்தஸா 65/3(10), முஸ்தபிசுர் ரஹ்மான் 55/2 (10)

பங்களாதேஷ் அணி  

ஷகீப் அல் ஹசன் 54, மேஹடி ஹசன் 51, செளம்யர் சர்க்கர் 38(44), நுவான் குலசேகர 34/4, சுரங்க லக்மால் 38/2, தில்ருவன் பெரேரா 47/2,சீக்குகே பிரசன்னா 33/2