இலங்கை வீரர்களிடம் தடுமாற்றம் காணும் பங்களாதேஷ்

1266
Photo - Getty Images

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் நிறைவில், இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை 713 ஓட்டங்களோடு முடித்திருப்பதுடன் பங்களாதேஷ் அணியினை விட 119 ஓட்டங்கள் முன்னிலையும் பெற்றிருக்கின்றது.

[rev_slider LOLC]

சிட்டகொங்கின் ஷாஹூர் அஹ்மத் செளத்ரி மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இப்போட்டியில் தமது முதல் இன்னிங்சில் துடுப்பாடியிருந்த இலங்கை அணி 138 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 504 ஓட்டங்களினை குவித்து, மைதான சொந்தக்காரர்களை விட 9 ஓட்டங்களே பின்தங்கி காணப்பட்டிருந்த போது மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்திருந்தது. களத்தில் ரொஷேன் சில்வா 87 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தனர்.

இரட்டைச் சதத்தை தவறவிட்ட மெண்டிஸ்; மிக வலுவான நிலையில் இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ்…

போட்டியின் நான்காம் நாளாகிய இன்று தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்த இலங்கை, பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸ் (513) ஓட்டங்களை விரைவாக கடந்தது. இதற்கு காரணமாக இருந்த அணித் தலைவர் சந்திமால் மற்றும் ரொஷேன் சில்வா ஆகியோரின் நான்காம் விக்கெட்டுக்கான இணைப்பாட்டமும் நூறு ஓட்டங்களை தாண்டியிருந்தது.

தொடர்ந்த ஆட்டத்தில், ரொஷேன் சில்வா தனது கன்னி டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்தார். ரொஷேனின் சதத்தோடு முன்னேறிய இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும் அவரது 16 ஆவது அரைச்சதம் மூலம் வலுச்சேர்த்தார்.

பின்னர் மெஹதி ஹஸன், சதம் கடந்த ரொஷேன் சில்வாவின் விக்கெட்டினை கைப்பற்றி பங்களாதேஷ் அணிக்கு ஆறுதல் தந்தார். இதனால், இலங்கை அணியின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டம் 135 ஓட்டங்களுடன் முடிவடைந்தது.

தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே சதம் கடந்திருந்த ரொஷேன் 230 பந்துகளுக்கு 6 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 109 ஓட்டங்களினை குவித்திருந்தார்.   

ரொஷேனின் விக்கெட்டினை அடுத்து அணித் தலைவர் தினேஷ் சந்திமால், புதிய துடுப்பாட்ட வீரராக வந்த நிரோஷன் திக்வெல்லவுடன் இணைந்து தனது தரப்பின் ஓட்டங்களை உயர்த்தினார். இதனால் மிகவும் வலுவான நிலையில் இலங்கை மதிய உணவு இடைவேளையினை அடைந்தது.

உபாதைகள் அற்ற கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

மதிய உணவு இடைவேளையினை அடுத்து சதத்தினை நெருங்கிக் கொண்டிருந்த சந்திமாலின் விக்கெட்டினை இலங்கை பறிகொடுத்தது. தய்ஜூல் இஸ்லாமினால் போல்ட் செய்யப்பட்ட இலங்கை அணியின் தலைவர் 87 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

சந்திமாலின் விக்கெட்டினை அடுத்து, அதிரடியாக ஆடிய நிரோஷன் திக்வெல்ல அணியின் ஓட்ட எண்ணிக்கையினை 650 ஓட்டங்களினை தாண்ட வைத்திருந்தார். எனினும், பந்துவீச்சில் மீண்டும் சிறப்பாக செயற்பட்ட மெஹதி ஹஸன் மூலம் திக்வெல்லவின் விக்கெட் வீழ்த்தப்பட்டிருந்தது. திக்வெல்ல 61 பந்துகளுக்கு 9 பெளண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.  

தொடர்ந்து, இலங்கை அணிக்காக பின்வரிசையில் திறமையாக துடுப்பாடக்கூடிய தில்ருவான் பெரேராவின் விக்கெட்டும் 32 ஓட்டங்களுடன் பறிபோயிருந்தது. பெரேராவின் இந்த ஓட்டங்கள் இலங்கை அணிக்கு 700 ஓட்டங்களை தேநீர் இடைவேளையின் போது எட்டுவதற்கு உதவியாக இருந்தது.

தேநீர் இடைவேளையின் பின்னர் துரிதகதியில் இரண்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை அணி 199.3 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 713 ஓட்டங்களோடு காணப்பட்டிருந்த போது தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை நிறுத்திக் கொண்டது.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் ஆறாவது தடவையாக மொத்த ஓட்ட எண்ணிக்கையாக இன்னிங்ஸ் ஒன்றில் 700 இற்கு மேலான ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி, முதல் இன்னிங்சில் பங்களாதேஷை விட 200 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக் கொண்டது.   

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பாக தய்ஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டுக்களையும், மெஹதி ஹஸன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

நோதம்டன்ஷெயார் அணிக்கு மீண்டும் ஒப்பந்தம் செய்த சீக்குகே பிரசன்ன

இன்றைய நாளுக்காக 27 ஓவர்கள் எஞ்சிய நிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த பங்களாதேஷ் அணிக்கு தமிம் இக்பால் மற்றும் இம்ருல் கைஸ் ஆகியோர் உறுதியான தொடக்கத்தினை தந்திருந்தனர்.

எனினும் இன்றைய நாளின் இறுதி வேளையில் இலங்கை அணியின் சுழல் வீரர்கள் பங்களாதேஷ் அணிக்கு அச்சுறுத்தல் தந்த காரணத்தினால், போட்டியின் நான்காம் நாளினை பங்களாதேஷ் அணி தடுமாற்றத்துடன் முடித்துக் கொண்டது.  

நான்காம் நாள் நிறைவில் பங்களாதேஷ் அணி இரண்டாம் இன்னிங்சில் 26.5 ஓவர்களில் 81 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் தமிம் இக்பால் 41 ஓட்டங்களினை குவித்திருந்ததோடு, மொமினுல் ஹக் 18 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காமல் நிற்கின்றார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் சுழல் வீரர்களான ரங்கன ஹேரத், லக்ஷான் சந்தகன் மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றி போட்டியின் நான்காம் நாளினை இலங்கை அணிக்கு சாதமாக மாற்ற உதவியிருந்தனர்.

ஸ்கோர் விபரம்

போட்டியின் இறுதி மற்றும் ஐந்தாவது நாள் நாளை தொடரும்