குசல் பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை

1115
Lasith Malinga

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட T-20 தொடரின் முதல் போட்டியில், துடுப்பாட்ட வலிமையை முழுமையாக உபயோகித்திருந்த இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியியை  சொந்தமாக்கியது.

இருதரப்பு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடர் ஆகியவை 1-1 என சமநிலை அடைந்த நிலையில், தீர்மானம்மிக்க T-20 தொடரின் முதல் போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

நாணய சுழற்சியினை கைப்பற்றிக்கொண்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் மசரபி மொர்தஸா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்ததோடு இலங்கை உடனான இந்த தொடரே பங்களாதேஷ் அணிக்காக தான் விளையாடும் இறுதி தொடர் என்று கூறி T-20 போட்டிகளில் தனது  ஓய்வினையும் அறிவித்திருந்தார்.

இப்போட்டியின் மூலம் பங்களாதேஷ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சயிபுத்தீன் அறிமுகம் செய்யப்பட்டதுடன், இலங்கை அணியில் போதிய உடற்தகுதியினைப் பெற்ற அதிரடி ஆட்டக்காரர் குசல் பெரேரா மற்றும் லசித் மலிங்க ஆகியோர் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

மழையின் குறுக்கீடு காரணமாக, போட்டியில் தாமதாகவே பங்களாதேஷ் அணி தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்தது. செளம்யா சர்க்கர் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் பலத்த எதிர்பார்ப்புகளுடன் தமது அணிக்காக இப்போட்டியில் களமிறங்கியிருந்தனர்.

ஆசிய கிரிக்கெட் சபையின் வளர்ந்துவரும் அணிகளின் சம்பியனாக முடிசூடிய இலங்கை

சிட்டகொங், சஹூர் அகமத் சௌத்ரி மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற இளையோர் ஆசியக் கிண்ண..

போட்டியின் முதல் ஓவரை வீசிய லசித் மலிங்க தான் வீசிய இரண்டாவது பந்திலேயே துல்லியமான யோக்கர் ஒன்றின் மூலம் பங்களாதேஷ் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பாலை ஓட்டம் ஏதுமின்றி போல்ட் செய்தார். இதனையடுத்து, அதே ஓவரில் மேலதிகமாக இரண்டு விக்கெட்டுகள் பறிபோகும்  சந்தர்ப்பமும் ஏற்பட பங்களாதேஷ் அணி அழுத்தத்திற்கு உள்ளாகியதுடன் இலங்கை பொறிதெறிக்கும் ஆரம்பம் ஒன்றினை பெற்றுக்கொண்டது.

எனினும் இரண்டாம் ஓவரிலிருந்து சாமர்த்தியமான முறையில் ஆடத்தொடங்கிய பங்களாதேஷ் அணியின் செளம்யா சர்க்கர் மற்றும் சபீர் ரஹ்மான் ஜோடி இரண்டாம் விக்கெட்டிற்காக அதிரடியான முறையில் ஆடி ஓட்டங்களினைச் சேர்த்தது.

போட்டியின் ஆறாவது ஓவரில் இவர்கள் இருவரினதும் இணைப்பாட்டம் 57 ஓட்டங்களுடன் முடிக்கப்பட்டதுடன் இருவரும் அதே ஓவரில் ஆட்டமிழந்தனர்.

இதில் அதிசிறந்த களத்தடுப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்த சீக்குகே பிரசன்னவினால் சபீர் ரஹ்மான் 16 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையிலும், மறுமுனையில் விக்கும் சஞ்சயவின் சிறந்த பந்து வீச்சில் செளம்யா சர்க்கர் வீழ்த்தப்பட்டார். ஆட்டமிழக்கும் போது சர்க்கர் வெறும் 20 பந்துகளினை மாத்திரம் எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 29 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இவர்கள் இருவரினதும் விக்கெட்டுகளை தொடர்ந்து ஏனைய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களை இலகுவாக இலங்கை அணி ஓய்வறை அனுப்பியது. ஆனால், பின்வரிசை வீரர்களாக வந்த மஹமதுல்லாஹ் மற்றும் மொசாதிக் ஹொசைன் ஆகியோர் பெற்றுக்கொண்ட உறுதியான இணைப்பாட்டத்தினால் (57) முடிவில், பங்களாதேஷ் அணி 20 ஓவர்களிற்கு 6 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்த மொசாதிக் ஹூசைன் 3 பவுண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்களையும், லசித் மலிங்கவின் யோக்கர் மூலம் வீழ்ந்த மஹமதுல்லாஹ் 26 பந்துகளிற்கு 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணியின் பந்து வீச்சில், எதிரணிக்கு சற்று ஓட்டங்களை வாரி இறைத்த மலிங்க 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் விக்கும் சஞ்சய, சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் பறித்திருந்தனர்.

உபுல் தரங்கவின் தலைமையில் இலங்கை T20 அணி : குசல் மென்டிஸ் நீக்கம்

செவ்வாய்க்கிழமை ஆரம்பமாக உள்ள பங்களாதேஷ் அணியுடனான இரண்டு போட்டிகளைக் கொண்ட T20…

இதனையடுத்து பிரேமதாச மைதானத்தினைப் பொறுத்தவரை சற்று கடினமான வெற்றி இலக்கான 156 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெற, குசல் பெரேரா மற்றும் உபுல் தரங்க ஜோடி இலங்கை சார்பாக மைதானம் விரைந்தது.

இலங்கை அணி இந்த இன்னிங்சில் மெதுவான ஓர் ஆரம்பத்தினை வெளிக்காட்டியிருப்பினும் பின்னர் அணித்தலைவர் தரங்க மற்றும் பெரேரா ஆகியோர் பவுண்டரி எல்லைகளை பதம்பார்க்க தொடங்கினர்.

இதனால், குறுகிய நேரத்திற்குள் இலங்கை அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை விரைவாக உயர்ந்தது. இலங்கை அணி 6.5 ஓவர்களில் 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது முதல் விக்கெட்டாக தரங்க 24 ஓட்டங்களுடன் ஓய்வறை நோக்கி நடந்தார்.

இதற்கடுத்து மேலும் ஒரு விக்கெட்டினை இலங்கை சொற்ப நேரத்தில் பறிகொடுத்திருந்தது. எனினும், களத்தில் நின்றிருந்த குசல் பெரேரா மற்றும் சீக்குக்கே பிரசன்ன ஆகியோரின் அதிரடியில் முடிவில் இலங்கை அணி, 18.5 ஓவர்களில் 158 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றியடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் குசல் பெரேரா தனது ஆறாவது T-20 சர்வதேச அரைச்சதத்தினை பூர்த்தி செய்ததுடன் மொத்தமாக, வெறும் 53 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 9 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் சேர்த்து 77 ஓட்டங்களினை குவித்து தனது பழைய ஆட்டத்திற்கு மீண்டு கொண்டதோடு, சீக்குகே பிரசன்ன இரண்டு பிரமாண்ட சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடங்கலாக 12  பந்துகளிற்கு 22 ஓட்டங்களினைப்பெற்று ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில் அணித்தலைவர் மசரபி மொர்தஸா இரண்டு விக்கெட்டுகளையும் தஸ்கின் அஹமட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.

இப்போட்டிக்கு முன்னர் பதினொரு T-20 போட்டிகளில் R. பிரேமதாச மைதானத்தில் விளையாடியிருக்கும் இலங்கை அணி அதில் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றியீட்டிருந்தது. ஆனால், அவ்வெற்றியின் எண்ணிக்கை இப்போட்டியுடன் சேர்த்து இரண்டாகுவதுடன் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரிலும் இலங்கை அணி 1-0 என முன்னிலை அடைந்ததுள்ளது.

ஸ்கோர் விபரம்

போட்டி முடிவு – இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி

இரு அணிகளும் மோதும் இரண்டாவதும் இறுதியுமான T-20 போட்டி எதிர்வரும் வியாழன்(6) ஆரம்பமாகின்றது