மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இலங்கை பல்கலைக்கழகங்களக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் ஹாக்கி போட்டிகள் ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14ஆம் திகதிகளில் பேராதனை பல்கலைக்கழக மைதானத்தில நடைபெற்து. பெண்களுக்கான கிண்ணத்தை களனி பல்கலைக்கழகமும், ஆண்களுக்கான கிண்ணத்தை கொழும்பு பல்கலைக்கழகமும் சுவீகரித்தது.
ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவும் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 11 அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது
ஆண்களுக்கான போட்டிகள்
சபரகமுவ, கொழும்பு, மொரட்டுவ மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்கள் குழுவில் முதலாம் இடத்தைப் பிடித்து காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. ருஹுனு பல்கலைக்கழகத்தைப் பின் தள்ளி களனி பல்கலைக்கழகம் காலிறுதிக்கு தெரிவாக ஜயவர்தனபுற, யாழ்ப்பாண, பேராதணை பல்கலைக்கழகங்கள் குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து காலிறுதிக்குத் தெரிவாகியது.
காலிறுதிப் போட்டியில் ஜயவர்தனபுற பல்கலைக்கழகம் ரஜரட்ட பல்கலைக்கழகத்துடனான போட்டியை பெனால்டி அடிப்படையில் 5-3 என்று வென்றது. சென்ற முறை கிண்ணம் வென்ற மொரட்டுவ பல்கலைக்கழகம் களனி பல்கலைக்கழகதை 5-0 என்று இலகுவாக வென்றது. கொழும்பு மற்றும் பேராதனை அணிகளுக்கிடையிலான போட்டி விறுவிறுப்பான ஆட்டத்தின் பின்பு கொழும்பு பல்கலைக்கழகம் வசம் முடிந்தது. இறுதி காலிறுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சபரகமுவ பல்கலைக்கழகதை வென்று அரையிறுதிக்குத் தெரிவானது.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களுக்கிடையிலான அரை இறுதிப் போட்டியில் கொழும்பு பல்கலைக்கழகமானது 2-1 என்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. இரண்டாவது அரை இறுதியில் மொரட்டுவ அணி ஜயவர்தனபுர அணியை 1-0 என்று இறுதி சில நிமிடங்களில் வென்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொழும்பு மற்றும் மொரட்டுவ அணிகள் கடுமையாக மோதிக்கொண்டன. இறுதி சில நிமிடங்களில் கோல் அடித்து கொழும்பு பல்கலைக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
பெண்களுக்கான போட்டிகள்
கொழும்பு, ஜயவர்தனபுர, களனி, மொரட்டுவ பல்கலைக்கழகங்கள் குழுவில் முதல் இடத்தைப் பிடித்து காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாக ரஜரட்ட, பேராதனை, சபரகமுவ மற்றும் ரூஹுனு பல்கலைக்கழகங்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்து காலிறுதிக்குத் தெரிவாகின.
முதல் காலிறுதியில் ரஜரட்ட அணியானது ஜயவர்தனபுர அணியை 3-1 என்று வென்று அரை இறுதிக்குத் தகுதி பெற்றது. கொழும்பு அணியானது ருஹுனு அணியை 2-0 என்று இலகுவாக வென்று ரஜரட்ட அணியுடன் அரையிறுதியைப் பதிவு செய்தது. அடுத்த அரையிறுதி போட்டியில் பேராதனை அணியிடம் 5-3 என்று பெனால்டி முறையில் தோல்வியுற்று மொரட்டுவ அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது. களனி அணியானது, சபரகமுவ அணியை 2-1 என்று வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
அரை இறுதிப் போட்டியில் கொழும்பு அணி ரஜரட்ட அணியை 2-0 என்று இலகுவாக வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேற அடுத்த அரை இறுதியில் சென்ற முறை கிண்ணம் வென்ற பேராதனை பல்கலைக்கழகம் களனி பல்கலைகழகத்திடம் தோல்வியைத் தழுவியது.
திறமை மிக்க களனி பல்கலைக்கழகமானது இறுதிப் போட்டியில் கொழும்பு பல்கலைக்கழகத்தை 4-1 என்று இலகுவாக வென்று கிண்ணத்தை வென்றது. 3ஆவது இடத்திற்கான போட்டியில் பேராதனை பல்கலைக்கழகம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தை 1-0 என்று வென்று 3ஆவது இடத்தைக் கைப்பற்றியது.