இலங்கை கிரிக்கெட் அபிவிருத்தி அணி வீராங்கனைகளுக்கு ஒப்பந்தங்கள்

244

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 21 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி அணிக்கு தெரிவு செய்யப்பட்ட 20 வீராங்கனைகளுக்கான ஒப்பந்தங்கள் இலங்கை கிரிக்கெட் சபையினால் நேற்று (29) உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் ரவீன் விக்ரமரட்ன, பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, இலங்கை கிரிக்கெட் உள்ளூர் செயல்பாட்டு தலைவர் சிந்தக எதிரிமான்ன, இலங்கை மகளிர் கிரிக்கெட் அழைப்பாளர் அப்சாரி திலகரட்ன மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர் திலகா குணரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதனிடையே, ஒப்பந்தங்களை வழங்குகின்ற நிகழ்வில் கலந்துகொண்டு இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் ரவின் விக்ரமரட்ன கருத்து தெரிவிக்கையில்,

‘இன்று இங்கு வந்துள்ள 20 வீராங்கனைகளுக்கும் இது வரலாற்று சிறப்புமிக்க நாள். இன்று நீங்கள் தேசிய கிரிக்கெட் அணியில் நுழைகிறீர்கள். யாழ்ப்பாணம், பொலன்னறுவை, பதுளை மற்றும் இலங்கையின் பல இடங்களிலிருந்தும் திறமையான வீராங்கனைகள் இந்தக் குழாத்தில் இடம்பெற்றிருப்பது இலங்கையின் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாகும்.

120 பேரிலிருந்து சிறந்த 20 வீராங்கனைகளை தேர்ந்தெடுத்துள்ளோம். சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்க உங்களுக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பு. இருப்பினும், உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்நிகழ்வில் உரையாற்றிய அப்சாரி திலகரட்ன, இலங்கை மகளிர் கிரிக்கெட் உலக அரங்கிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுவதாகவும், இந்த முயற்சிகள் அனைத்தும் அதன் இடத்தை கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டதாகவும் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை இளையோர் அபிவிருத்தி அணியில் இரண்டு யாழ் வீராங்கனைகள்

புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த அணி, மூன்று மாதகால பயிற்சி முகாமில் பங்கெடுக்கவுள்ளதுடன், அங்கு இலங்கை கிரிக்கெட் சபையின் மாவட்ட மற்றும் மாகாண பயிற்சியாளர்களின் மேற்பார்வையின் கீழ் திறன் மேம்பாடு மற்றும் உடற்தகுதி பயிற்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மூன்று மாதகால பயிற்சியின் பின்னர் வீராங்கனைகளின் திறமைகள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற உள்ளூர் தொடர்களுக்கான மாவட்ட மற்றும் மாகாண அணிகளில் அவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனிடையே, 21 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் நவம்பர் முதலாம் திகதி முதல் 2022 ஜனவரி 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் சபையினால் பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ள அனைத்து வீராங்கனைகளுக்கும் நிதி உதவி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 21 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி அணியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வீராங்கனையான சானு பாஸ்கரன் மற்றும் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் மதுரிக்கா முரளிதாசன் ஆகிய இரண்டு வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<