அனைவராலும், எதிர்பார்க்கப்பட்டிருந்த, 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரின் இன்றைய (23) இறுதிப்போட்டியில், வெற்றி இலக்கினை எட்டும் வகையில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கனிஷ்ட அணியின் போராட்டம், ராகுல் சாகர், அபிஷேக் சர்மா ஆகியோரின் சுழலின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டதனால், இப்போட்டியில் 34 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தி இந்திய கனிஷ்ட அணி, இந்த வருடத்திற்குரிய 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் ஆசிய கிண்ணத்தொடரின் சம்பியனாக முடிசூடிக்கொண்டது.
இதன் காரணமாக, இளையோர் ஆசிய கிண்ணத்தொடரில் முதன் முறையாக இறுதிபோட்டிக்கு தெரிவாகிய இலங்கை கனிஷ்ட இத்தொடரில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொள்கின்றது.
ஏற்கனவே இடம்பெற்ற குழு நிலைப் போட்டிகளில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகிய இலங்கை மற்றும் இந்திய அணிகள் முறையே பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை தோற்கடித்து, இளையோர் ஆசிய கிண்ணத்தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தன.
இன்று (23) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் மின்னொளி விளக்குகளின் துணையுடன், இரவு – பகல் போட்டியாக ஆரம்பமாகிய இதில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இந்திய கனிஷ்ட அணியின் தலைவர் அபிஷேக் சர்மா முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை பெற்றுக்கொண்டு போட்டியினை தங்களது வழமையான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ப்ரீத்வி சாவ் மற்றும் ஹிமான்சு ரனா ஆகியோருடன் இந்திய கனிஷ்ட அணியின் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்தார்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பவுண்டரிகளை நோக்கி பந்துகளை பதம் பார்த்த வண்ணம் ஒரு நல்ல ஆரம்பத்தினை இந்தியாவிற்கு வழங்கினர். இந்நிலையில், செபஸ்டியன் கல்லூரி சுழல் பந்து வீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரமவினால் இந்திய அணியின் முதல் விக்கெட், மொத்த ஓட்ட எண்ணிக்கை 62 ஆக இருந்த போது கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து துடுப்பாடவந்த சுப்மன் கில் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹிமான்சு ரனாவினாலும், இலங்கை கனிஷ்ட அணியின் பந்து வீச்சு நுட்பங்கள் அறியப்பட்டு அதனை சரியாக கையாண்டு ஒரு நீண்ட இணைப்பாட்டத்திற்கு வித்திடப்பட்டது, இதனால் இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்காக 88 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர், இந்திய கனிஷ்ட அணியின் மூன்றாவது விக்கெட்டினை தொடர்ந்து வந்த வீரர்கள், நிப்புன் ரன்சிக்கவின் வேகப் பந்து வீச்சு மூலம் குறைவான ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட, இந்திய கனிஷ்ட அணி 300 இற்கும் மேலான ஓட்டங்களை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய கனிஷ்ட அணியின் சார்பாக துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட ஹிமான்சு ரனா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அரைச்சதம் கடந்து, முறையே 71 மற்றும் 70 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில், இந்திய கனிஷ்ட அணியின் முக்கிய வீரர்களை ஆட்டமிழக்கச்செய்த பிரவீன் ஜயவிக்ரம 10 ஓவர்களை வீசி 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், இந்திய கனிஷ்ட அணியின் நடுத்தரவரிசை வீரர்களை பதம்பார்த்த நிப்புன் ரன்சிக்க 7 ஓவர்களை வீசி 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர், நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கான 274 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு களமிறங்கிய இலங்கை கனிஷ்ட அணி தனது முதல் விக்கெட்டினை, போட்டியின் நான்காவது ஓவரில் 27 ஓட்டங்களினை பெற்றிருந்த போது, யாஸ் தாகூரின் சுழலில் பறிகொடுத்தது. இதனால், கடந்த போட்டிகளில் இலங்கை கனிஷ்ட அணிக்காக சிறப்பாக செயற்பட்ட பிரின்ஸ் ஓப் வேல்ஸ் கல்லூரியின் விஷ்வ சத்துரங்க, 13 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர், இரண்டாவது விக்கெட்டுக்காக மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரெவான் கெல்லி புதிதாக வந்த ஹஸித்த போயகொட உடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 78 ஓட்டங்களை பகிர்ந்தார். இந்நிலையில், களத்தில் 37 ஓட்டங்களுடன் நின்றிருந்த ஹஸித்த போயகொட இந்திய கனிஷ்ட அணியின் தலைவர் அபிஷேக் சர்மாவின் பந்து வீச்சில் பிரியம் கர்க் இடம் பிடிகொடுத்து மைதானத்தினை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து, இலங்கை அணி சற்று நிதனமாக ஆடி, வெற்றி இலக்கினை நெருங்கும் பயணத்தினை ஆரம்பித்தது. பின்னர், அரைச்சதம் கடந்து இலங்கை கனிஷ்ட அணியினை வெற்றிப்பாதையில் வழிநடாத்திக்கொண்டிருந்த ரெவான் கெல்லி 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார். இருப்பினும் களத்தில் இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் இருந்ததனால், போட்டியின் வெற்றிவாய்ப்பு இலங்கைக்கே சாதமாக இருந்தது. இந்நிலையில், புதிதாக வந்த வீரர் க்ரிஷான் ஆராச்சிகே, ராகுல் சாகரின் பந்தில் ஆட்டமிழந்ததனை தொடர்ந்து மெல்ல மெல்ல போட்டி இந்திய அணியின் பக்கம் சாய ஆரம்பித்தது.
இதனையடுத்து தேவையற்ற ஓட்டம் ஒன்றிற்குரிய ரன் அவுட் மூலம் புதிதாக வந்த துடுப்பாட்ட வீரர் அஷேன் பண்டாரவும், இலங்கை கனிஷ்ட அணியின் 5 ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்ததை தொடர்ந்து போட்டி இந்திய கனிஷ்ட அணியிடம் முழுமையாக செல்லும் வாய்ப்பினை எட்டியிருந்தது. இதனையடுத்து, மேலதிக சொற்ப இணைப்பாட்டங்களுடன் இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸின் விக்கெட்டும், அபிஷேக் சர்மாவின் பந்து வீச்சில் பறிபோக, இலங்கை அணியின் இறுதி எதிர்பார்ப்பும் இல்லாமல் போனது, இதன் பின்னர், அடுத்தடுத்து இலங்கை அணி, விக்கெட்டுக்களை பறிகொடுத்து, தனது கடைசி 6 விக்கெட்டுகளையும் 43 ஓட்டங்களிற்குள் பறிகொடுத்து, 48.4 ஓவர்களில் இலங்கை கனிஷ்ட அணி 239 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து, இந்தியாவிடம் 34 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.
இலங்கை கனிஷ்ட அணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய ரெவான் கெல்லி, 101 பந்துகளில் 1 சிக்ஸர் 5 பவுண்டரிகள் உடன் 62 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் அரைச்சதம் கடந்து 57 பந்துகளிற்கு 4 பவுண்டரிகள் உள்ளடங்களாக 53 ஓட்டங்களினையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் இந்திய கனிஷ்ட அணி சார்பாக, அபிசேக் சர்மா 4 விக்கெட்டுகளையும், ராகுல் சாஹர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிக்கொண்டனர்.
போட்டி சுருக்கம்
இந்திய கனிஷ்ட அணி: 273/8(50) – ஹிமான்சு ரனா 71(79), சுப்மன் கில் 70(92), ப்ரீத்வி சாவ் 39(36), அபிசேக் சர்மா 29(44), பிரவீன் ஜயவிக்ரம 53/3(10), நிப்புன் ரன்சிக்க 50/3(7)
இலங்கை கனிஷ்ட அணி: 239(48.4) – ரெவான் கெல்லி 62(101), கமிந்து மெண்டிஸ் 53(57), ஹஸித்த போயகொட 37(38), அபிஷேக் சர்மா 37/4(10), ராகுல் சாகர் 22/3(10)
போட்டி முடிவு – இந்திய கனிஷ்ட அணி 34 ஓட்டங்களால் வெற்றி
இப்போட்டித்தொடர் பற்றிய சிலவிடயங்கள்
- இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன் – அபிஷேக் சர்மா (இந்தியா)
- தொடர் ஆட்ட நாயகன் – ஹிமான்சு ரனா (இந்தியா)
- தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் – ஹிமான்சு ரனா – 283 (இந்தியா)
- தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் – பிரவின் ஜயவிக்ரம 10 (இலங்கை), ராகுல் சாகர் 10(இந்தியா)