ஐசிசி 19 வயதின் கீழ் மகளிர் அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கிண்ணத் தொடரின் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணி, அவுஸ்திரேலிய அணியை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணி ஆரம்ப வீராங்கனைகளின் சிறிய பங்களிப்புளுடன் ஓட்டங்களை பெற ஆரம்பித்தது.
>>முதல்நாளில் பலம்பெற்றுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி
எனினும் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இலங்கை அணிக்காக சஞ்சனா காவிந்தி 19 ஓட்டங்களையும், சுமுது நிசன்சலா 18 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் லில்லி பெஸ்ஸிங்த்வைட் 3 விக்கெட்டுகளையும், ஹஸ்ரத் கில் மற்றும் டேகன் வில்லியம்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கு சவால் கொடுத்த இலங்கை மகளிர் அணி ஓட்டங்களை கட்டுப்படுத்தியது. அவுஸ்திரேலிய மகளிர் அணியின் மத்தியவரிசையில் கொய்மே பிரே 27 ஓட்டங்களையும், இலேனோர் லரோசா 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்த போதும், அவர்களால் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 87 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சமோதி பிரபோதா, பிரமுதி மெத்சாரா மற்றும் அசேனி தலகுனே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கை அணியை பொருத்தவரை இந்த தொடரின் சுபர் சிக்ஸ் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடவிருந்தது. இதில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டி சீரற்ற காலநிலை காரணமாக தடைப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது.
எனினும் 5 புள்ளிகளை பெற்றுக்கொண்ட இலங்கை அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தவறவிட்டுள்ளதுடன், குழுவில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.
சுருக்கம்
இலங்கை U19 – 99/8 (20) சஞ்சனா காவிந்தி 19, சுமுது நிசன்சலா 18, லில்லி 3/7, ஹஸ்ரட் கில் 2/18, டேகன் வில்லியம்சன் 2/19
அவுஸ்திரேலியா U19 – 87/8 (20) கொய்மே பிரே 27, சமோதி பிரபோதா 2/13, பிரமுதி மெத்சரா 2/16, அசேனி தலகுனே 2/18
முடிவு – இலங்கை அணி 12 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<