இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்கா கனிஷ்ட அணிகள் மோதிக்கொள்ளும் முக்கோண ஒருநாள் தொடர் கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகி, தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதில் இன்றைய போட்டியில் இலங்கை கனிஷ் அணியின் அதிரடி பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணியினர் 66 ஓட்டங்களுக்கே சுருண்டனர்.
தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியும், அதனை தொடர்ந்து இடம்பெற்றிருந்த போட்டியில் இலங்கை கனிஷ்ட அணியும் தோல்வியுற்றிருந்த நிலையில், தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் களமிறங்கின.
தென்னாபிரிக்க கனிஷ்ட அணியினால் வீழ்த்தப்பட்ட இலங்கை கனிஷ்ட அணி
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் முதலில் ஜிம்பாப்வே அணியை துடுப்பாடுமாறு பணித்தார். அதன்படி, துடுப்பாடக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் நான்கு விக்கெட்டுகளும் 7 ஓட்டங்களுக்குள் நிபுன் ரன்சிக்க மற்றும் ரஷ்மிக்க டில்ஷானின் அதிரடி பந்து வீச்சில் வீழ்த்தப்பட்டன.
அதனை தொடர்ந்து களமிறங்கிய கேரன் ரொபின்சன், ராயன் மர்ரேயுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், அணி 23 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ராயன் மர்ரே, நிபுன் ரன்சிக்கவின் நேர்த்தியான பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து சென்றார்.
அதன் பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்து சென்றனர். சிறிய நேரம் வரை தனித்து நின்று போராடிய கேரன் ரொபின்சனும் 15 ஓட்டங்களுடன் நிபுன் ரன்சிக்கவின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு மைதானத்தில் இருந்து நடையை கட்டினார். இறுதியில் 29.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 66 ஓட்டங்களை மாத்திரமே ஜிம்பாப்வே கனிஷ்ட அணியால் பெற முடிந்தது.
கூடிய ஓட்டங்களாக கேரன் ரொபின்சன் மற்றும் ராயன் மர்ரே ஆகியோர் தலா 15 ஓட்டங்களை பதிவு செய்தனர். அதிரடியாக பந்து வீசிய நிபுன் ரன்சிக்க 25 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு சிறந்த முறையில் பங்காற்றினார்.
அதன் பின்னர், மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை கனிஷ்ட அணி, இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து குறித்த வெற்றி இலக்கை 12.5 ஓவர்களில் அடைந்தது. அணித் தலைவர் அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார்.
இத்தொடரின் அடுத்த போட்டியான ஜிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டி ஜனவரி மாதம் 19ஆம் திகதி பார்ல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
ஜிம்பாப்வே கனிஷ்ட அணி: 66 (29.4) – கேரன் ரொபின்சன் 15, ராயன் மர்ரே 15, நிபுன் ரன்சிக்க 25/4, ரஷ்மிக்க டில்ஷான் 12/2, ஜெஹான் டானியல் 12/2, பிரவீன் ஜெயவிக்ரம 17/2
இலங்கை கனிஷ்ட அணி: 68/2 (12.5) – அவிஷ்க பெர்னாண்டோ 27*, விஷ்வ சதுரங்க 19, டெக்லான் ஓல்ட்டிரைவ் 24/1