தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான (U19) கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் ஞாயிறு (21) ஜிம்பாப்வேயினை எதிர்கொண்ட இலங்கை 39 ஓட்டங்களால் டக்வெத் லூயிஸ் முறையில் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் உரிமையை மீண்டும் தக்கவைத்தது TATA
மேலும் ஜிம்பாப்வேயை வீழ்த்திய இலங்கை U19 அணி உலகக் கிண்ணத் தொடரினையும் வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
U19 உலகக் கிண்ணத் தொடரில் குழு C அணிகளாக காணப்படும் இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் கிம்பேர்லி நகரில் வைத்து மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே U19 அணியானது முதலில் இலங்கையை துடுப்பாடப் பணித்தது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்கள் 48.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்கள் எடுத்தனர்.
இலங்கை துடுப்பாட்டம் சார்பாக தினுர கலுப்பகன அதிகபட்சமாக 55 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்கள் எடுத்தார். இவர் தவிர விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான சாருஜன் சண்முகநாதன் 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 3 பெளண்டரிகள் உடன் 41 ஓட்டங்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே U19 கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் கோஹ்ல் எக்ஸ்டீன் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், நிவ்மான் யம்ஹூரி மற்றும் மெதிவ் ஸ்னோக்கன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் பதவியில் இருந்து விலகிய அஷ்ரப்
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 205 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஜிம்பாப்வே அணி போட்டியின் வெற்றி இலக்கை அடையும் பயணத்தில் காணப்பட்டிருந்த போது (30/3) ஆட்டத்தில் காலநிலை சீர்கேடு உருவாகியது. இதனை அடுத்து நீண்ட நேரம் போட்டி தடைப்பட்டதோடு, மீண்டும் நிலைமைகள் சீராக போட்டியின் வெற்றி இலக்காக 22 ஓவர்களுக்கு 129 ஓட்டங்கள் டக்வெத் லூயிஸ் முறையில் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த வெற்றி இலக்கை அடைய துடுப்பாடிய ஜிம்பாப்வே அணி தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்து 21.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
ஜிம்பாப்வே துடுப்பாட்டத்தில் மெதிவ் சோன்கேன் 27 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் எடுத்த வீரராக மாறினார். மறுமுனையில் இலங்கை பந்துவீச்சில் மணிக்கட்டு சுழல்வீரரான மல்ஷ தருப்பதி வெறும் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, விஷ்வ லஹிரு மற்றும் ருவிஷன் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை U19 அணி வீரரான தினுர கலுப்பகன தெரிவாகினார். இலங்கை அடுத்ததாக U19 உலகக் கிண்ணத் தொடரில் நமீபியாவினை எதிர்வரும் புதன்கிழமை (24) எதிர்கொள்ளவிருக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<