மே.இ.தீவுகளுடன் போராடி தோல்வியடைந்த இலங்கை இளம் அணி

208

19 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் சுபர் சிக்ஸ் சுற்றில் இன்று (30) மேற்கிந்திய தீவுகள் – இலங்கை இளம் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 3 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>>இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட்; ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகின்ற 19 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் மோதிய போட்டியானது கிம்பர்லி நகரில் நடைபெற்றிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியானது முதலில் துடுப்பாடியதோடு 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 231 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தினுர கலுப்பகன 83 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் இந்த உலகக் கிண்ணத் தொடரில் அடுத்தடுத்த அரைச்சதங்களைப் பதிவு செய்திருந்தார். இதேநேரம் மல்ஷா தருப்பதி 42 ஓட்டங்கள் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ரெனெய்கோ ஸ்மித் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, நதன் எட்வார்ட் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

>>ILT20 தொடரிலிருந்து விலகும் ஷெமார் ஜோசப்!

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 232 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணியானது இலங்கை வீரர்களின் போராட்டமான பந்துவீச்சை தாண்டி போட்டியின் வெற்றி இலக்கை 49.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களுடன் அடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றியினை உறுதி செய்த வீரர்களில் ஸ்டீவ் வெட்டர்பேர்ன் 71 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்கள் எடுத்திருக்க, ஜோர்டன் ஜோன்சன் 39 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இலங்கை பந்துவீச்சில் டினுர கலுப்பகன, விஷ்வ லஹிரு மற்றும் அணித்தலைவர் சினேத் ஜயவர்தன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.

மேற்கிந்திய தீவுகளுடன் தோல்வியடைந்திருக்கும் இலங்கை இளம் கிரிக்கெட் அணியானது 19 வயதின் கீழ்ப்பட்ட ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு தெரிவாகும் வாய்ப்பினை தக்க வைக்க அடுத்ததாக தாம் வெள்ளிக்கிழமை (02) தென்னாபிரிக்க அணியுடன் விளையாடவிருக்கும் போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<