அதிரடி வெற்றிகளுடன் முன்னேறும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

428

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகின்ற 19 வயதின் கீழ்ப்பட்ட ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இன்று (24) நமீபியாவை எதிர்கொண்ட இலங்கை இளம் கிரிக்கெட் அணியானது 77 ஓட்டங்களால் அதிரடி வெற்றி பெற்றிருக்கின்றது.

>>சுப்மன், தீப்தி, ரவி சாஸ்திரிக்கு BCCI இன் உயர் விருதுகள்

இதேநேரம் இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை இளம் கிரிக்கெட் அணியானது 19 வயதின் கீழ் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் அடுத்தடுத்த தொடர் வெற்றிகளுடன் முன்னேறுகின்றது.

குழு C அணிகளின் மோதலாக அமைந்த இலங்கை மற்றும் நமீபிய அணிகள் இடையிலான போட்டி முன்னதாக கிம்பர்லி நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நமீபிய அணியின் தலைவர் முதலில் இலங்கை வீரர்களை துடுப்பாடப் பணித்தார்.

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை வீரர்கள் ஆரம்பம் முதலே துடுப்பாட்டத்தில் தடுமாற்றம் காட்டியிருந்தனர். இலங்கை அணி வீரர்களினால் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்க முடியாத நிலை உருவாகிய காரணத்தினால் அவர்களால் 37.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இலங்கை துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காது காணப்பட்டிருந்த சுபுன் வடுகே 79 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் பெற்றதோடு இதுவே இலங்கைத் தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களாகவும் மாறியது.

நமீபிய அணியின் பந்துவீச்சில் ஸேக்கியோ வான் வூயுரேன் (Zacheo van Vuuren) அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஜொஹன்னஸ் டி வில்லியர்ஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 134 ஓட்டங்கள் சவால் குறைந்தது என்ற போதிலும் இதனை அடைய பதில் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த நமீபிய அணியானது ஆரம்பம் முதலே சரிவினைச் சந்தித்ததோடு இலங்கைப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதிலும் தடுமாற்றம் கண்டது.

அந்தவகையில் ஆரம்பம் முதலே மிகப் பெரும் சரிவினைச் சந்தித்த நமீபிய அணியானது 27 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 56 ஓட்டங்கள் மட்டும் எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.

>>மார்ஷ் தலைமையில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலிய T20 அணி

நமீபிய அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக PD ப்லிக் நாட் 18 ஓட்டங்கள் எடுக்க, இலங்கை பந்துவீச்சில் விஷ்வ லஹிரு மற்றும் ருவிஷான் பெரேரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை 19 வயதின் கீழ் அணியானது உலகக் கிண்ணத் தொடரில் அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை (28) அவுஸ்திரேலிய அணியினை எதிர்கொள்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<