ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த இலங்கை இளையோர் அணி

442
@Getty Images

பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் டக்வர்த்-லுவிஸ் (Duckworth–Lewis) முறையில் 39 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை இளையோர் அணி தொடரின் காலிறுதிக்கு முன்னேறுவதில் சவாலை எதிர்கொண்டுள்ளது.

லக்ஷான், கமிந்துவின் அபார ஆட்டத்தால் இலங்கைக்கு முதல் வெற்றி

2018ஆம் ஆண்டில் நடைபெறுகின்ற முதலாவது..

எனினும், ஆசிய சம்பியனான 19 வயதுக்கு உட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி D குழுவில் இருந்து முதல் அணியாக உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் இளையோர் அணியை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் தனது குழுவில் முதலிடத்தை உறுதி செய்தது.  

இலங்கை இளையோர் அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வென்ற நிலையிலேயே நேற்று ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. நியூசிலாந்தின், வங்கரி கொபாம் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி ஆப்கானை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

எனினும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் திசரு ரஷ்மிக்க ஆப்கான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஹ்மானுல்லாஹ் குர்பாரை 7 ஓட்டங்களுடன் வீழ்த்தி நம்பிக்கை தந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இப்ராஹிம் சத்ரான் மற்றும் விக்கெட் காப்பாளர் இக்ராம் அலி கைல் ஜோடி 115 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் சத்ரான் 112 பந்துகளில் 86 ஓட்டங்களை பெற்றதோடு 5 சிக்ஸர்களையும் விளாசினார். மறுபுறம் நிதானமாக ஆடிய கைல் 89 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்றார்.  

அடுத்து வந்த டர்வீஷ் ரசூலியும் சிறப்பாக ஆடி 44 பந்துகளில் 63 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் ஆப்கான் 19 வயதுக்கு உட்பட்ட அணி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 284 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியின் கன்னி டெஸ்ட் போட்டிக்கான திகதி அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கடந்த வருடம்..

இதன்போது இலங்கை இளையோர் அணி ஆறு பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியபோதும் எதிரணிக்கு போதிய நெருக்கடி கொடுக்க தவறியது. வேகப்பந்து வீச்சாளர்களான திசரு ரஷ்மிக்க மற்றும் நிபுன் மாலிங் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.  

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 11 ஓட்டங்களில் இரு ஆரம்ப வீரர்களையும் பறிகொடுத்தது. கடந்த போட்டியில் சதம் பெற்ற காலி, ரிச்மண்ட் கல்லூரி வீரர் தனஞ்சய லக்ஷான் 2 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதோடு நிபுன் தனஞ்சயவினால் 4 ஓட்டங்களையே பெற முடிந்தது.  

எவ்வாறாயினும் 3ஆவது விக்கெட்டுக்கு இணைந்த விக்கெட் காப்பாளர் கிறிஷான் ஆரச்சிகே மற்றும் புனித ஜோசப் கல்லூரியின் ஜெஹான் டானியல் ஆகியோர் 76 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். நிதானமாக ஆடிய ஆரச்சிகே 69 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.   

போட்டியின் 24ஆவது ஓவரின் பின் இலங்கை அணி 108 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஸ்திரமான நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டமை இலங்கை அணிக்கு பாதகமாக அமைந்தது.

மழையால் ஏற்பட்ட தாமதத்தால் இலங்கை அணிக்கு 38 ஓவர்களில் 235 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் இலங்கை மத்திய வரிசை வீரர்களால் நின்றுபிடித்து ஆட முடியாமல்போனது. சிறப்பாக ஆடிவந்த ஜெஹான் டானியல் 57 பந்துகளில் 48 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அணித் தலைவர் கமின்து மெண்டில் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எஞ்சிய வீரர்களும் சோபிக்க தவறிய நிலையில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 37.3 ஓவர்களில் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.  

ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் நவீட் உல் ஹக் மழைக்கு குறுக்கிட்ட பின் ஆரம்பமான போட்டியில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு இலங்கை அணிக்காக சிறப்பாக ஆடிவந்த ஜெஹான் டானியலின் விக்கெட்டையும் பதம்பார்த்தார். தனது 8 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் ரன் அவுட் ஒன்றையும் செய்தார்.   

எனினும் ஆப்கான் அணிக்காக அதிக ஓட்டங்கள் பெற்ற இப்ராஹிம் சத்ரானுக்கு போட்டியின் ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

ஆப்கானிஸ்தான் அணி 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தின் காலிறுதிக்கு முன்னேறுவது இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன் அந்த அணி 2014இல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடந்த போட்டியில் காலிறுதிக்கு தகுதிபெற்றது.

எனினும் 2016 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்துடன் ஒப்பிடுகையில் ஆப்கான் அணி தனது திறமையை முழுவீச்சில் வெளிக்காட்டியுள்ளது. அந்த தொடரிலும் ஆப்கான் அணி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருந்த குழுவிலேயே இடம்பிடித்தது. எனினும் இரு அணிகளிடமும் தோல்வியையே சந்தித்தது.

ஆப்கான் அணி D குழுவில் தனது கடைசி போட்டியில் அயர்லாந்தை ஜனவரி 20ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தானுடனான போட்டிகளில் தோல்வி அடைந்த அயர்லாந்து ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறும் தகுதியை இழந்துள்ளது.

முக்கோணத் தொடரின் முதல் போட்டியில் புதிய மாற்றங்களுடன் இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு (2017)..

இந்நிலையில் D குழுவில் இரண்டாவது அணியாக காலிறுதிக்கு முன்னேற இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த இரு அணிகளும் ஜனவரி 19ஆம் திகதி தனது கடைசி குழுநிலை போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு முன்னேறும்.

ஒருவேளை போட்டி டை (Tie) முறையில் முடிந்தாலோ அல்லது மழையால் கைவிடப்பட்டாலோ பாகிஸ்தான் அணி காலிறுதிக்கு முன்னேறிவிடும். D குழு புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா 2 புள்ளிகளை பெற்றபோதும் நிகர புள்ளிகள் அடிப்படையில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.     

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 284/7 (50) – இப்ராஹிம் சத்ரான் 86, தர்வீஷ் ரசூலி 63, இக்ராம் அலி கைல் 55, நிபுன் மாலிங்க 2/56, திசரு ரஷ்மிக்க 2/64, கமின்து மெண்டிஸ் 1/38

இலங்கை 202 (37.3) – ஜெஹான் டானியல் 48, கிறிஷான் சன்ஜுல 41, அஷேன் பண்டார 38, கமின்து மெண்டிஸ் 32, நவீட் உல் ஹக் 4/35, அஸ்மதுல்லாஹ் ஒமர்சாய் 2/37, கைஸ் அஹமட் 2/37  

முடிவு – ஆப்கான் அணி டக்வர்த்-லுவிஸ் முறையில் 32 ஓட்டங்களால் வெற்றி