இலங்கை, ஜிம்பாப்வே, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் பங்குபெறும் முக்கோண ஒரு நாள் தொடரில், இன்று நடைபெற்று முடிந்த இறுதி குழுநிலை போட்டியில் தென்னாபிரிக்கா இலங்கை கனிஷ்ட அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தியுள்ளது.
இத்தொடரின், ஏனைய போட்டிகளின் வெற்றி தோல்விகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட புள்ளிகள் காரணமாக, இப்போட்டியில் விளையாடிய இரு அணிகளும் இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், இலங்கை கனிஷ்ட அணியை பொறுத்தவரை இத்தொடரில் தென்னாபிரிக்காவுடன் எந்தவொரு போட்டியிலும் வெற்றி பெறாத காரணத்தினால் இப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருந்தது.
முன்னதாக, பார்ல் நகரத்தின் போலன்ட் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் தலைவர் மிச்சேல் வான் புய்ரேன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இலங்கை கனிஷ்ட அணிக்கு வழங்கினார்.
பின்னர், வழமையான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் அவிஷ்க பெர்னாந்து மற்றும் விஷ்வ சத்துரங்க ஆகியோருக்கு இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்ததனால், கமிந்து மெண்டிஸ் தலைமையிலான இலங்கை கனிஷ்ட அணி, இப்போட்டியில், ரெவென் கெல்லி, பத்தும் நிஸ்ஸங்க ஆகியோருக்கு முதலில் துடுப்பாட வாய்ப்பளித்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பத்தும் நிசங்க போட்டியின் மூன்றாவது ஓவரிலும், ஐந்தாவது ஓவரில் இலங்கை கனிஷ்ட அணி 7 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரெவென் கெல்லி தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அகோனா நையக்காவின் பந்து வீச்சினால் ஆட்டமிழக்க செய்யப்பட்டு மைதானத்தினை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதனால், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை இழந்த இலங்கை கனிஷ்ட அணி, நிதானமாகவே ஓட்டங்கள் சேர்க்க ஆரம்பித்தது. இலங்கை கனிஷ்ட அணியின் மத்திய வரிசை வீரர்கள் 20 ஓட்டங்களை விட குறைவான ஓட்டங்களிற்குள் ஆட்டமிழந்து செல்ல, ஒரு கட்டத்தில் இலங்கை கனிஷ்ட அணி 85 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும், மிஷென் சில்வா மூன்றாவது துடுப்பாட்ட வீரராக களத்தில் நின்ற கிரிஷான் ஆராச்சிகேவுடன் ஜோடி சேர்ந்து ஆறாவது விக்கெட்டுக்காக 73 ஓட்டங்களை பகிர்ந்து, ஆட்டமிழந்து சென்றார். இதனால் இலங்கை கனிஷ்ட அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 150 ஓட்டங்களை தாண்டியதுடன் ஆட்டமிழந்த ஆராச்சிகே 96 பந்துகளில் 10 பவுண்டரிகளை விளாசி 81 ஒட்டங்களை பெற்றிருந்தார். இவரின் விக்கெட்டினை தொடர்ந்து, புதிதாக மைதானத்திற்கு வந்த துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற இலங்கை கனிஷ்ட அணி, 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில், இறுதி வரை இலங்கையின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த பாடுபட்ட மிஷென் சில்வா ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களை பெற்றிருந்தார். அதே வேளையில், பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் அக்கோன நையக்கா மற்றும் ருஆன் டி ஸ்வார்ட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை சாய்த்திருந்தனர்.
பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 224 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க கனிஷ்ட அணி, தனது முதல் விக்கெட்டினை 13 ஓட்டங்களை பெற்றிருந்த போது மனேல்கர் டி சில்வாவி பந்து வீச்சில் பறிகொடுத்தது. இதனையடுத்து நிதானமாக ஓட்டங்களை சேர்த்த அவ்வணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கினை அடைந்ததுடன், இத்தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் இலங்கை கனிஷ்ட அணியை தோற்கடித்தது.
துடுப்பாட்டத்தில், தென்னாபிரிக்க கனிஷ்ட அணி வெற்றியிலக்கினை அடைய இறுதிவரை போராடி சிறப்பாக செயற்பட்ட ரெய்னாட் வான் டொன்டர் ஆட்டமிழக்காமல், 121 பந்துகளில் ஒரு சிக்ஸர் 8 பவுண்டரிகள் உள்ளடங்களாக 87 ஓட்டங்களை பெற்றதோடு மறுமுனையில் தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் தலைவர் மிச்சேல் வான் புய்ரேன் 44 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
தென்னாபிரிக்க கனிஷ்ட அணியை மட்டுப்படுத்தும் வகையில் பந்துகளை வீசியிருந்தும், இப்போட்டியில் துரதிஷ்டவசமாக தோல்வியினை சந்தித்த இலங்கை கனிஷ்ட அணியின் பந்து வீச்சில், ஹரீன் வீரசிங்க, மனேல்கர் டி சில்வா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக இறுதி வரை போராடிய ரெய்னாட் வான் டொன்டர் தெரிவாகியிருந்தார்.
இத்தொடரில், அடுத்த போட்டியாக இலங்கை மற்றும் தென்னாபிரிக்க கனிஷ்ட அணிகள் மோதிக்கொள்ளும் இறுதிப்போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (28) நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை கனிஷ்ட அணி: 223 (47.5) – கிரிஷான் ஆராச்சிகே 81 (96), மிஷென் சில்வா 63 (85), ருஆன் டி ஸ்வார்ட் 32/3(8), அக்கோன நையக்கா 45/3(8)
தென்னாபிரிக்க கனிஷ்ட அணி: 224/5 (48.4) – ரெய்னாட் வான் டொன்டர் 87(121), மிச்சேல் வான் புய்ரேன் 44(48), மெத்திவ் ப்ரீட்ஸ்கி 43(72), ஹரீன் வீரசிங்க 32/3(9.4)
போட்டி முடிவு – தென்னாபிரிக்க கனிஷ்ட அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி
புள்ளிகள் அட்டவணை
Teams | Mat | Won | Lost | Tied | N/R | Pts |
SA U19 | 6 | 5 | 1 | 0 | 0 | 23 |
SL U19 | 6 | 3 | 3 | 0 | 0 | 15 |
ZIM U19 | 6 | 1 | 5 | 0 | 0 | 4 |