இலங்கை மற்றும் தென்னாபிரிக்க கனிஷ்ட அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட, இளையோர் ஒரு நாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் பந்து வீச்சில் முழுத்திறமையினையும் வெளிப்படுத்தியிருந்த இலங்கை கனிஷ்ட அணி தென்னாபிரிக்காவினை 153 ஓட்டங்களால் படுதோல்வியடையச் செய்தது.
எனினும், இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தென்னாபிரிக்க கனிஷ்ட அணி வெற்று பெற்றுக்கொண்டதால் 2-1 என இந்த இளையோர் ஒரு நாள் தொடரை தென்னாபிரிக்க கனிஷ்ட அணி கைப்பற்றியிருக்கின்றது.
ஓளட்ஸ்ஹூன் நகர மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் தலைவர் மிச்சேல் வான் புய்ரேன் இலங்கை கனிஷ்ட அணியினை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.
ஆறுதல் வெற்றியினை எதிர்பார்த்தவாறு இலங்கை கனிஷ்ட அணி இப்போட்டியில், நாணய சுழற்சி முடிவுக்கு அமைவாக துடுப்பாட மைதானம் நோக்கி விரைந்தது.
இப்போட்டியில், இலங்கை கனிஷ்ட அணியின் தலைவர் அவிஷ்க பெர்னாந்துவிற்கு ஓய்வளிக்கப்பட்டதன் காரணமாக, வழமையான ஆரம்ப துடுப்பாட்ட வீரரான விஷ்வ சத்துரங்கவுடன், இசிபதன கல்லூரியின் பத்தும் நிசங்க களமிறங்கினார்.
இலங்கை கனிஷ்ட அணி, பவுண்டரி எல்லைக்கு பந்துகளை கொண்டு விரட்டியவாறு போட்டியினை ஆரம்பித்தது. முதல் விக்கெட்டுக்கு இணைப்பாட்டமாக 46 ஓட்டங்களினைப் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் பகிர்ந்தனர். இலங்கையின் முதல் விக்கெட்டாக பத்தும் நிசங்க 24 ஓட்டங்களுடன் லுத்தோ சிபம்லாவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓய்வறை நோக்கி திரும்பினார்.
இதனையடுத்து களத்திற்குள் நுழைந்த இன்றைய போட்டியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் களத்தில் நிற்க ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான விஷ்வ சத்துரங்க 41 ஓட்டங்களுடன் இரண்டாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதனையடுத்து சொற்ப இடைவெளியில் கமிந்து மெண்டிசும் போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட தடுமாறிய இலங்கை கனிஷ்ட அணி நிதனமாக ஓட்டக்குவிப்பினை மேற்கொண்டது.
பின்னர், பொறுப்பாக ஆடியிருந்த மத்திய வரிசை வீரரான ஹஸித்த போயகொடவின் அரைச்சத உதவியுடன் இலங்கை கனிஷ்ட அணி, போட்டியின் கடைசி ஓவர்களில் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
திரித்துவ கல்லூரி மாணவரான ஹஸித்த போயகொட 98 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்ளடங்களாக 77 ஓட்டங்களினை பெற்று இருந்தார்.
தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் பந்து வீச்சில் திறமையினை காட்டியிருந்த வேகப்பந்து வீச்சாளர் லுத்தோ சிபம்லா 3 விக்கெட்டுகளையும், மைக்கல் கொஹேன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 229 ஓட்டங்களினை 50 ஓவர்களில் பெறுவதற்கு களமிறங்கிய தென்னாபிரிக்க கனிஷ்ட அணி, இலங்கை பந்து வீச்சாளர்களினை சமாளிக்க முடியாமல் திணறியது.
நிப்புன் ரன்சிக்க, பிரவின் ஜயவிக்ரம, மனேல்கர் டி சில்வா ஆகியோர் தென்னாபிரிக்க கனிஷ்ட அணியின் விக்கெட்டுக்களை வேட்டையாட தொடங்கினர். இதனால், ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்க கனிஷ்ட அணி, 33 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்து மிகவும் இக்கட்டான நிலைக்கு உள்ளாகியிருந்தது. அவ்வணியின் முதல் ஏழு துடுப்பாட்ட வீரர்களும் ஒரு இலக்க ஓட்டங்களுடன் ஓய்வறை நோக்கி வேகமாக நடந்தனர். எனினும் 8ஆ வது விக்கெட்டுக்காக கெனன் ஸ்மித் மற்றும் லுத்தோ சிபம்லா ஆகியோர் ஓரளவு போராடப் பார்த்தனர் அவர்களின் போராட்டமும் இலங்கை பந்து வீச்சாளர்களால் முறியடிக்கப்பட 40.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 75 ஓட்டங்களுக்கு தென்னாபிரிக்க கனிஷ்ட அணி சுருண்டு கொண்டு மேலதிக 153 ஓட்டங்களினைப் பெற முடியாமல் படுதோல்வியடைந்தது.
தென்னாபிரிக்க கனிஷ்ட அணி சார்பாக அதிகபட்சமாக கெனன் ஸ்மித் 17 ஓட்டங்களினை குவித்ததுடன், இலங்கை கனிஷ்ட அணி சார்பாக அசத்தல் பந்து வீச்சினை வெளிக்காட்டியிருந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் நிப்புன் ரன்சிக்க 24 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளையும், மனேல்கர் டி சில்வா மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
சில நாட்கள் முன்னர் முக்கோண இளையோர் ஒரு நாள் தொடரில் குறைவான ஓட்டங்களுக்கு (79) இலங்கையிடம் வீழ்ந்திருந்த தென்னாபிரிக்க கனிஷ்ட அணியானது இளையோர் ஒரு நாள் தொடரில் பதிவு செய்து கொண்ட இரண்டாவது குறைவான மொத்த ஓட்ட எண்ணிக்கை (75) இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்ட நாயகனாக நிப்புன் ரன்சிக்க தெரிவு செய்யப்பட்டதுடன் இத்தொடர் ஆட்ட நாயகனாக தென்னபிரிக்காவின் ரெய்னாட் வான் டொன்டெர் தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை கனிஷ்ட அணி: 228/9 (50) – ஹஸித்த போயகொட 77(98), விஷ்வ சத்துரங்க 41(49), பத்தும் நிசங்க 24(26), கிரிஷான் ஆராச்சிகே 23(47), லுத்தோ சிபம்லா 38/3(7), மைக்கல் கொஹேன் 42/2(9)
தென்னாபிரிக்க கனிஷ்ட அணி: 75 (40.1) – கெனன் ஸ்மித் 17(52), லுத்தோ சிபம்லா 14 (49), நிப்புன் ரன்சிக்க 24/4(10), மனேல்கர் டி சில்வா 6/2(7), பிரவீன் ஜயவிக்ரம 16/2(7.1)
போட்டி முடிவு – இலங்கை கனிஷ்ட அணி 153 ஓட்டங்களால் வெற்றி