சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் அணிகள் இடையிலான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில், இலங்கை இளம் வீரர்கள் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகின்றனர்.
>>துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கை இளம் கிரிக்கெட் அணி<<
சுற்றுலா இலங்கை – இங்கிலாந்து 19 வயதின் கீழ் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலை அடைந்த பின்னர் இரண்டாவது போட்டி கடந்த செவ்வாய் (16) செல்டன்ஹேமில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்று மைதானச் சொந்தக்கார அணி இலங்கை வீரர்களை இங்கிலாந்து துடுப்பாடப் பணித்தது. அதன்படி போட்டியில் முதலில் ஆடிய இலங்கை வீரர்கள் 153 ஓட்டங்களை மாத்திரமே முதல் இன்னிங்ஸில் எடுத்தனர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்று (18) மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் இடைவெளி வரை துடுப்பாடி 138.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இமாலயமான முறையில் 477 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து துடுப்பாட்டத் தரப்பில் அதிகபட்சமாக அதன் தலைவர் ஹம்சா ஷேய்க் 107 ஓட்டங்கள் பெற்றதோடு, ரொக்கி பிளின்டோப் 106 ஓட்டங்கள் குவித்தார்.
இலங்கை பந்துவீச்சில் விஹாஸ் தேவ்மிக்க மற்றும் பிரவீன் மனீஷ ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், மனுஜ சந்துக்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பின்னர் இங்கிலாந்தினை விட 324 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை வீரர்கள் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் 74 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களுடன் காணப்படுகின்றனர். இலங்கை துடுப்பாட்டத்தில் இம்முறை அதிகபட்சமாக மாஹித் பெரேரா 61 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஹர்ரி மூரே, பர்ஹான் அஹ்மட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.
இலங்கை அணிக்கு தற்போது இந்த டெஸ்ட் போட்டியில் இன்னும் 3 விக்கெட்டுக்கள் மாத்திரம் மீதமிருக்க இன்னிங்ஸ் தோல்வியினைத் தவிர்க்க 78 ஓட்டங்கள் தேவையாக காணப்படுகின்றது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை U19 (முதல் இன்னிங்ஸ்) – 153 (45.2) கயான வீரசிங்க 77, நாவ்யா சர்மா 44/5
இங்கிலாந்து U19 (முதல் இன்னிங்ஸ்) – 477 (138.1) ஹம்சா ஷேய்க் 107, ரொக்கி பிளின்டோப் 106
இலங்கை U19 (இரண்டாம் இன்னிங்ஸ்) – 246/7 (74) மாஹித் பெரேரா 61
மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<