சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயதின் கீழ் அணிகள் இடையிலான இளையோர் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில், இலங்கை அணி அதன் தலைவர் தினுர கலுப்பானவின் அபார சதத்தோடு வலுப் பெற்றுள்ளது.
>>இலங்கை இளையோர் அணிக்காக அரைச்சதம் விளாசிய தினுர கலுப்பான<<
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை 19 வயதின் கீழ் அணியானது அங்கே நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரினை அடுத்து தற்போது இரு போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கின்றது.
கடந்த திங்கள் (09) ஆரம்பமான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வோர்ம்ஸ்லி நகரில் இடம்பெற்று வரும் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மாத்திரமே நடைபெற்றிருந்தது. இரண்டாம் நாள் போட்டிகள் மழையின் காரணமாக தடைப்பட்டிருந்தன.
அதன்படி முதல்நாள் ஆட்டநிறைவில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 177 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த தினுர கலுப்பான 70 ஓட்டங்களையும், தினிரு அபேய்விக்ரமசிங்க 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்னர் போட்டியின் மூன்றாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணியானது தினுர கலுப்பானவின் சதத்தோடு 85.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 324 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை 19 வயதின் கீழ் அணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் தினுர கலுப்பான ஒரு சிக்ஸர் 14 பௌண்டரிகள் அடங்கலாக 104 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் நதன் கல்டேரா 55 ஓட்டங்களையும், தினிரு அபேய்விக்ரமசிங்க 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
>>மகளிர் CPL தொடரில் விளையாடவுள்ள சமரி அதபத்து!<<
இங்கிலாந்து பந்துவீச்சில் AM பிரன்ச் 4 விக்கெட்டுக்களையும், N. சர்மா மற்றும் அலெக்ஸ் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில் துடுப்பாடிய இங்கிலாந்து இளம் அணி மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் 48 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. இங்கிலாந்து இளம் அணியின் துடுப்பாட்டத்தில் பிரெட்டி மெக்கென் 92 ஓட்டங்களையும், கேசன பொன்சேக்கா 72 ஓட்டங்களையும் எடுத்தனர். இலங்கை பந்துவீச்சில் விஹாஸ் தேவ்மிக்க 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை U19 (முதல் இன்னிங்ஸ்) – 324 (85.4) தினுர கலுப்பான 104, நதன் கல்டேரா 55, AM. பிரன்ச் 81/4
இங்கிலாந்து U19 (முதல் இன்னிங்ஸ்) – 193/4 (48) பிரட்டி மெக்கேன் 92, கேசன பொன்சேக்கா 72
நான்காம் நாள் ஆட்டம் இன்று (11) தொடரும்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<